ஆதார், பாஸ்போர்ட், லைசென்ஸ் ஒருங்கிணைப்பு

”ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கிக் கணக்கு என, தனித் தனியாக வழங்கப்படும் அடையாள அட்டைகளை ஒருங்கிணைத்து, ஒரே பலநோக்கு அட்டை வழங்குவது குறித்து ஆராயப்படுகிறது,” என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா தெரிவித்தார்.

தேசிய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகங்களுக்கான புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, டில்லியில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான, அமித் ஷா, தற்போது ஆதார், பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் என, ஒருவருக்கு பல அட்டைகள் வழங்கப்படுகின்றன. ஒரு அட்டையில், இந்த அனைத்து தகவல்களும் இடம்பெற வேண்டும்; இதற்கு வாய்ப்பு உள்ளது. இது குறித்து, ஆராயப்படுகிறது. இதற்கு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதில் கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே, மக்கள் நல திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

வரும், 2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இது, 16 மொழிகளில் மேற்கொள்ளப்படும். மேலும், இந்தக் கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. இதற்காக, ‘மொபைல் ஆப்’ உருவாக்கப்படும். இனி, பேனா, பேப்பர் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. தங்களுடைய மொபைலிலேயே, மக்கள்தொகை கணக்கெடுப்பை, அதிகாரிகள் மேற்கொள்ள முடியும்.ஜம்மு – காஷ்மீர் மற்றும் பனிமலை பிரதேசங்களான, ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில், 2020, அக்., 1ம் தேதியை அடிப்படையாக வைத்தும், நாட்டின் மற்ற பகுதிகளில், 2021, மார்ச், 1ம் தேதியை அடிப்படையாக வைத்தும் கணக்கெடுப்பு நடத்தப்படும்.