காதலி தன் காதலனுக்காக காத்திருந்தாளாம்! அவன் குறித்த நேரத்தில் வரவில்லையாம்! அது சரி, எந்தக் காலத்தில்தான், எந்தக் காதலன்தான் சரியான நேரத்துக்கு வந்துள்ளான்? அவன் தாமதம் அவளை காக்க வைத்தது; மனம் ஏங்க வைத்தது; சினம் தாங்க வைத்தது. செல்லக் கோபம்! ‘அவன் வந்தால் அவனை இப்படி கேட்க வேண்டும், அப்படி பேச வேண்டும், கண்டிக்க வேண்டும்’ என்றெல்லாம் திட்டமிட்டு வைத்திருந்தாள் அவள்! ஆனால் அவனைக் கண்டவுடன் அந்தக் கோபமெல்லாம் போன இடம் தெரியவில்லை! இது எது போல இருக்கிறதாம்? அடி தோழி! நாம் புருவத்துக்கு மை தீட்ட ஒரு குச்சியைப் பயன்படுத்துகிறோம். சற்று நம் கண்ணுக்குத் தொலைவில் உள்ள வரை அந்தக் குச்சி நம் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அது நெருங்கி நம் புருவத்தைத் தொட்டு விடும்போது நம் கண்ணுக்கு அது தென்படுவது இல்லை! அதுபோல என் காதலன் தொலைவில் இருந்த போது அவனது குற்றம் – ‘பழி’- என் மனதை வாட்டியது. அவனைக் கண்டதும் – அவன் மேல் கொண்ட காதலால் – அது எனக்குத் தென்படாமல் பொய் விட்டது!”.. என்ன அருமையான காதல் காட்சி!
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணே போல்
கொழுநன் பழிகாணேன் கண்டஇடத்து”
– திருவள்ளுவர் ஒரு அழகிய காதல் நாடகத்தையே இரண்டே வரிகளில் கண்முன் கொண்டு நிறுத்திவிடுகிறார்!
காதலுக்கு என்று காமத்துப் பால்” என்ற ஒரு பிரிவையே ஒதுக்கிய பழம் பெரும் மரபு நம் தமிழ் மரபு! அகத் துறை” – என்று ஒரு துறையையே வைத்த மரபு பழம் பெரும் தமிழ் மரபு! அகன்று விரிந்த நம் பாரத தேசத்தின் பழம் பெரும் மரபும் காதலை விகாரமாகப் பார்த்தது இல்லை! காமத்தை ஆபாசம்” என்று வசை பாடியதில்லை! காமம்” என்றால் விருப்பம்” என்றே பொருள். விகற்பம்” அதில் இல்லை! கற்றாரைக் கற்றாரே காமுறுவர்”- என்றால் படித்தவர்கள் படித்தவர்களிடமே விருப்பம் கொள்வார்கள்” என்றுதானே பொருள்? காமாட்சி” – காம + அட்சி – விருப்பமான கண்களை உடையவள்! யார் மீது? சிவன் மீது ! மண் தாங்கிய மன்னரெல்லாம் காத்திருக்க, அவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, சுடலை மண் பூசிய சிவன் மீது கொண்ட காதலால், அவனையே மணப்பேன் என்று விரதம் ஏற்று, மாவடியில் தவமிருந்து அவனையே மணந்த உத்தமக் காதல் அல்லவோ காமாட்சி” அம்பிகையின் தெய்வீகக் காதல்! அவள் தன் பக்தர்களாகிய குழந்தைகளையும் ‘விருப்பத்துடன்’ பார்க்கும் கண் கொண்டவள்! ஒரு பெண் தன் கணவனைப் பார்க்கும் ‘விருப்பமான’ பார்வைக்கும், தன் குழந்தையை விரும்பிப் பார்க்கும் பார்வைக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டை ஒரே சொல் மூலம் உணர்த்திய பெயரே காமாட்சி”!
நமது மரபா காதலுக்கு எதிரி? நமது மரபா ‘காமத்தை’ விரசம் என்றது? சொல்லும் சொல்லில், வர்ணிக்கும் நுட்பத்தில் அது ரசம்” ஆகும் – அல்லது விரசம்” ஆகும்! எனவே ஆபாசப்படுத்துவதும் அதை அழகியல் ஆக்குவதும் நாம் கையாளும் மொழியில்தான் உள்ளதே தவிர நம் மரபு எவ்விடத்திலும் காதலை” ஆபாசம் என்று ஒதுக்கியதில்லை! காமம்” என்றால் முகம் சுளித்தது இல்லை!
கோயில்களில் நுழையும்போது கோபுரத்தில் தொடங்கி, வெளிச்சுற்று பிராகாரங்கள் முழுதும் தூண்களில், அலங்கார மண்டபத் தூண்களில் எத்தனை எத்தனை சிருங்கார ரச சிற்பங்கள்! ரதி மன்மதனில் இருந்து, ராதை – கிருஷ்ணன் வரை, எத்தனை வகை வகையான சிற்பங்கள்! அதைக் கடந்து கோயில் உள்ளே சென்றால் இறைவன்! மனிதா, பாரடா பார்! வாழ்க்கையின் இன்ப நிலைகளைப் பார்; ஆனால் அத்துடன் நின்று விடாதே! கடந்து செல்; உள்ளே செல்; இறைவனைப் பார்”- என்று உணர்த்தும் அரிய தத்துவ மரபு நம் மரபு! கருவில் திருவுடன் பிறந்து, பிறந்ததும் இறைநிலை வாய்க்கப் பெற்ற காஞ்சி மாமுனிவரைப் போன்ற மிகச் சில மகான்களுக்கு வேண்டுமானால் நேரடியாக – இந்த இன்பங்களை அனுபவித்துக் கடக்காமல்- நேரடியாகப் பரம்பொருளை உணரும் பாக்கியம் கிடைக்கலாம்! ஆனால் கோடானுகோடி எளிய மனிதர்களுக்கு முதலில் புறவாழ்வின் இன்பம், பின்பு இறைமையை உணரும் பக்குவம் என்றுதான் உள்முக வளர்ச்சி ஏற்படும். எனவேதான் கோயிலின் புறத்தே” – வெளிப் பிரகாரச் சிற்பங்களில்- சிருங்கார ரசத்தையும், உள்ளே” இறைமையையும் நிலைநிறுத்தியது பாரதப் பழம் மரபு! காதல்” புறநிலை எதார்த்தம்! இறைமை” அகநிலை எதார்த்தம்!
அந்த இறைவன் என்னும் பரமாத்மாவை” காதலனாகவும் நமது மனிதப் பிறவி என்னும் ஜீவாத்மாவை” காதலியாகவும் பாவனை செய்து பக்தி செலுத்துவதற்கே சிருங்கார ரசம்” என்னும் காதல் பாவத்தை – நாயகன், நாயகி பாவத்தை- உருவாக்கிய மரபு நம் மரபு! ஊற்றுக்காடு வேங்கட சுப்பையரின் அலை பாயுதே கண்ணா.. மனம் மிக அலைபாயுதே”.. என்ன ஒரு அற்புதமான நளின சிருங்
காரம்! ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா.. கனை கடல் அலையென, கதிரவன் ஒளியென, இணை இரு கழல் என களிக்க வா!” – என்று கண்ணனை அழைக்கும் ராதையின் ஏக்கம் மிக்க அழைப்பில் நாம் சொக்கிப் போகிறோம்!
முருகன் மீது பெரும் தெய்வீகக் காதல் கொண்ட பெண்ணின் சிருங்கார ரச மன நிலையை கவிஞர் வாலி அழகாகச் சொன்னாரே! அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்- அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் – ..பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை வள்ளல்தான் ஆள வந்தான், பெண்மையை வாழவைத்தான்! அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன், அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்” – என்ன அற்புதமான தெய்வீக காதல் வரிகள்!
இன்னொரு பெண், முருகன் மீது கொண்ட காதலைக் கண்ணதாசன் காட்டுகிறார்! வரச் சொல்லடி அவனை வரச் சொல்லடி, என் வாயார ஒரு முத்தம் நானாகத் தர வேண்டும் வரச் சொல்லடி!.. மலைக் கோயில் குமரேசன் அறியாததா? என் மடி என்ன கதை சொல்லத் தெரியாததா? கலைக் கோயில் அவன் காண முடியாததா? அது கனிவானதா ? கொஞ்சம் பதமானதா?.. வந்தானை, சேலையோடு முந்தானை காதலோடு கொண்டானை, வள்ளிக் குறமகள் அள்ளிப் பருகிட பள்ளித்தலம் வரை சென்றானை, கந்தனை, முருகனை, குமரனை, வேலனை .. வசந்தம் நிறைந்து மயங்கும் இரவில் மான் இவள் ஆனந்த சாலைக்கு வரச் சொல்லடி!..” என்ன ஒரு இன்ப மயக்கம்! தமிழ் மயக்கம்! சொல்லாட்சி இந்தப் பாடலில்!
ஜெயதேவரின் அஷ்டபதியில் இருந்து கண்ணதாசன், வாலி வரை ஒரு நெடிய நீண்ட அழகியல் பாரம்பரியம் ‘சிருங்கார ரசத்தால்’ இறைநிலை நாட்டத்துக்கு அணி சேர்த்துள்ளது. அப்படிப்பட்ட பெரும் மரபு நம் பாரத மரபு.
காதல் என்பது அன்றாடம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நம்முள் பெருகிக் கலந்து போன விஷயம். ஏதோ ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து இதோ பார் இதுதான் ‘காதலர் தினம்’ என்று காட்டவண்டிய நிலையில் நாம் இல்லை! பாரதி சொல்வான்: எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே” .. தந்தையும் தாயும் கொண்ட காதலே குடும்பத்தை ஒருங்கிணைத்தது! குடும்பம் பெருக உதவியது! அண்ணன், தம்பி, தங்கை என்று உறவுகள் கிளைக்க எம் தந்தையும் தாயும் கொண்ட காதல்தானே மூலாதாரம்! நம் மண்ணின் மரபல்லவோ இது? தினமும் சுவாசிப்பது எவ்வளவு இயற்கையோ, அவ்வளவு இயற்கையான விஷயமாகத்தானே காதலை நம் பாரத மரபு ஏற்றுக் கொண்டது? மேற்கத்திய கலாச்சாரத்துக்கு வேண்டுமானால் காதல்” என்பது ஒரு தினமாக” கொண்டாட வேண்டிய தேவை இருக்கலாம்! அவர்கள் காதலைப் பார்க்கும் பார்வை ‘இன்பம்’ துய்க்கும் பார்வை மட்டுமே! MY CHILDREN, YOUR CHILDREN, AND OUR CHILDREN என்று கணவனும் மனைவியும் வகைப்படுத்திக் கொள்ளும் நெகிழ்வான உறவு முறை கொண்ட கலாச்சாரம் அது! தகப்பன் என்பவனையே BIOLOGICAL FATHER – ரத்த உறவு அடிப்படையில் அப்பா, மற்றும் தாயின் தற்போதைய கணவன் என்ற வழியில் ‘உறவு முறை’ அப்பா என்பதை, இரண்டு வகைகளில் மிக இயல்பாக ஏற்றவர்களுக்கு காதலர் தினம்” என்பது ஒரு அதிசயக் கொண்டாட்டம்தான்! அதை நாம் கேலி செய்யவில்லை – அது ஒரு நெகிழ்வான கலாச்சாரம் என்ற அளவில் அதை நாம் பார்க்கிறோம். ஆனால் அதை நாம் மடியில் தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டிய அவசியம் இல்லை – அதுவும் நமக்கு ஒரு பெருமை மிக்க மரபு இருக்கும்போது! நாளெல்லாம் காதலாகவே வாழும் தொன்மை நம் வசம் இருக்கும்போது! இறை உணர்வையே காதலோடு கலந்து குழைத்து தானும் குழையும் அழகியல் கூறுகளுக்கு உரியவர்கள் நாம் என்னும்போது!
மகாகவி பாரதி ஒரு தீர்க்கதரிசி! காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம்; கானம் உண்டாம்.. ஆதலினால் காதல் செய்வீர்” – என்று பெருமையை உயர்த்தத் தொடங்கியவன், முடிக்கும் போது ஒரு எச்சரிக்கையையும் வைக்கிறான்! காதலிலே விடுதலை என்று அங்கு ஓர் கொள்கை கடுகி வளர்ந்திடும் என்பார் ஐரோப்பாவில்! மாதர் எல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார்; பேதம் இன்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம் வந்தால் கலந்து, அன்பு பிரிந்துவிட்டால் வேதனை ஒன்று இல்லாமல் பிரிந்து சென்று வேறொருவனைக் கூட வேண்டும் என்பார்” – என்ன ஒரு தீர்க்கதரிசனம், இன்றைய LIVING TOGETHER அனாச்சாரத்தைப் பற்றி அன்றே கணித்தவன் பாரதி! அவன் மேலும் சொல்வான்! சோரரைப் போல் ஆண் மக்கள் புவியின் மீது சுவைமிக்க பெண்மை நலம் உண்ணுகிறார்”! காதல் என்பதே SEX தவிர வேறில்லை என்று இன்றைய இளைய சமூகத்தில் பெருமளவில் பரவி நிற்கும்போது புத்தியையும் அப்படி ஒரு புரிதலை மட்டுமே வளர்த்தெடுக்கும் திரைப் படங்களையும் இன்று பார்க்கிறோம். பெண்கள் சுவைக்கப்பட” வேண்டியவர்கள் – அப்படி சுவைக்க கிடைக்காவிட்டால், இணங்கா விட்டால் அவளை தீர்த்து” விடலாம்! காதல் என்றால் ‘சோரரைப் போல் சுவை மிக்க பெண்மையை உண்ணுதல்’ அல்ல!
காதல் என்பது தெய்வீகமும் அழகியலும் கலந்து குழைந்த அற்புதக் கலவை! அதை உள்வாங்கி உணர்ந்த மரபு நம் பழம் பெரும் பாரத மரபு! தர்க்க சாஸ்திரம்”- வான சாஸ்திரம்” போன்று அக வாழ்வில் இன்பம் துய்க்க காம சூத்ரம்” என்று வாத்ஸ்யாயனர் என்ற ரிஷியே எழுதிய மரபு நம் மரபு! காமத்துப் பால்” என்று தனிப் பிரிவையே ஏற்படுத்தி 25 அதிகாரங்கள் 250 குறள்களைப் படைத்துக் காதலைக் கொண்டாடிய வள்ளுவரை ஈன்ற மண் நமது தமிழ் மண்! ‘முதலில் பரிசம் – பிறகே ‘ஸ்பரிசம்’ (தொடுதல்) என்ற புகழ் மிக்க மரபு நமது காதல் மரபு! யாரோ ஒரு மேற்கத்திய பாதிரி வாலன்டின் என்பவர் வந்து ஐயா, இதோ பாருங்கள் .. இதுதான் ‘காதலர் தினம்” என்று அறிமுகப்படுத்த வேண்டிய நிலையில் நாமோ நம் மரபோ இல்லை! பார்க், பீச், ரெஸ்டாரண்ட் என்று பொது இடம் என்று கூடப் பார்க்காமல் கட்டிப் பிடித்துக் கொள்வதும், முத்தமிடுவதும், பிணைந்து மகிழ்வதும் எந்த வகையிலும் தமிழ் கலாச்சாரம் அல்ல! தமிழ் கலாச்சாரத்தையும் ஜல்லிக்கட்டையும் காக்க ஒரு மிகப் பெரும் போராட்டத்தை நடத்திய ‘தமிழ் ஆர்வலர்கள்’ காதலர் தினம் என்ற பெயரில் நடைபெறும் கண்ராவிகளையும் நீக்கி, நமது தொன்மைமிக்க கண்ணியம்மிக்க காதல் மரபையும் மீட்டெடுக்க போராட முன்வர வேண்டும்! இப்போது கொண்டாடப்படும் காதலர் தினம்” என்பது மேற்கத்தியர்கள் கண்டெடுத்த வியாபார உத்தி! 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு – அதில் மிகப் பெரும் இளைஞர் பட்டாளம்! ஒரு வாழ்த்து அட்டை 50 ரூபாய் என்றால் 10 கோடி அட்டைகள் விற்றால் கூட 500 கோடி ரூபாய் சுருட்டலாம் என்ற வியாபார தந்திரம்! அவனுக்கு அகநானூறு தெரியுமா? கலிங்கத்துப் பரணி கடை திறப்பு தெரியுமா? காமத்துப் பால் தெரியுமா?
நாம் தெளிவாக இருப்போம் – காதலைக் கொண்டாடுவோம் – காதலர் தினம் என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்தை புறக்கணிப்போம்!