அவிநாசிலிங்கம் செட்டியார்

திருப்பூர் சுப்பிரமணிய அவிநாசிலிங்கம் செட்டியார் வழக்கறிஞர், அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் காந்தியவாதி என பன்முக திறமையாளர். தாய்நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கை, குடும்பம், வெற்றிகரமான தொழில் அனைத்தையும் தியாகம் செய்த பெருமைக்கு சொந்தக்காரரான அவிநாசிலிங்கச் செட்டியார், 1946 முதல் 1949 வரை மெட்ராஸ் மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழ்வழிக் கல்வியை அறிமுகம் செய்தவர்.
அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூரில் 1903 மே 5 ஆம் தேதி செல்வந்தரும் பிரபலமான வணிகரான கே. சுப்பிரமணிய செட்டியாருக்கும், பழனியம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியைப் திருப்பூரிலும் பின்னர், கோயம்புத்தூரிலும் பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டபடிப்பையும் முடித்தார். இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்ந்து சட்டமறுப்பு, ஒத்துழையாமை மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும், கல்வி அமைச்சராகவும் பணியாற்றி சமூகத்தின் கல்வி முறையில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய பெருமைகக்குறியவர்.
கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1934ஆம் ஆண்டு பட்டியல் சமூக மக்களின் நலவாழ்வு நிதிக்காக நன்கொடைகள் திரட்ட தமிழகம் வந்த காந்திக்கு இரண்டரை லட்சம் ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 1930, 1932, 1941 மற்றும் 1942 ஆண்டுகளில் நான்கு முறை சிறை சென்றார். 1944 ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபட்டு, 1946 ஆம் ஆண்டு சென்னை சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை மாகாண அரசில் 1946 முதல் 1949 வரை டி.பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் அமைச்சரவைகளில் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். அப்போது உயர்நிலைப் பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு வந்தது இவரது முக்கியப் பணியாக நினைவு கூரப்படுகிறது. 1930 ஆம் ஆண்டு கோவையில் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியைத் துவக்கினார். பின்னர் பெரியநாயக்கன் பாளையத்தில், 300 ஏக்கரில் அமைந்த வளாகத்திற்கு பள்ளியை மாற்றினார்.
அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த சிறுவர்களையும், தனது கல்வி நிறுவனங்களில் படிக்கச் சேர்த்துக் கொண்டார். பெண்களின் கல்விக்காக அவிநாசிலிங்கம் மனையியல் நிகர்நிலை பல்கலைக் கழகத்தை துவக்கினார், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், திருமணம் செய்து கொள்ளாமல் இறுதி வரை, எளிமையாக வாழ்ந்து வந்தார்.
1970 ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, தனது 88ஆம் வயதில் காலமானார்.