அவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே என் யு) மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக அடிக்கும் கொட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. பட்டமளிப்பு விழாவிற்குப் போன மத்திய கல்வி அமைச்சரை முற்றுகை இடுகிறார்கள். பேராசிரியையை பெண் என்றும் பாராமல் மணிக்கணக்கில் அறைக்குள் அடைத்து வைக்கிறார்கள். இந்த வாரம் (நவ 18) நாடாளுமன்றம் பனிக்கால கூட்டத் தொடர் துவங்கும் நாளில் ஊர்வலம் போகிறோம் என்ற பெயரில் பொது மக்கள் நலனுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள். போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார்கள். ஊழியர்கள் வேலைக்கு போக முடியவில்லை. பள்ளி – கல்லூரி மாணவர்கள் பாதிக்கப் படுகிறார்கள். நோயாளிகள் மருத்துவ மனைக்கு போக முடியவில்லை.

இன்று நேற்று என்றல்ல, பல பத்தாண்டுகளாகவே ஜே என் யு என்றால் அவர்கள் (மாணவர்கள்) வைத்ததுதான் சட்டம் என்றாகி விட்டது. மாணவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஆசிரியர் கோஷ்டியும் நிர்வாகத்தில் ஒரு சாராரும் கூட்டணி அமைத்துக் கொண்டு தனி ராஜாங்கம் நடுத்துகிறார்கள். கிட்டத்தட்ட  க்ஷரத்து 370 முடக்கத்திற்கு முன்  காஷ்மீர் எப்படி இருந்ததோ அப்படி ஜே என் யு இன்றளவிலும்  இருக்கிறது. இதுவும் காங்கிரஸ் – இடது சாரிகள் இந்த நாட்டிற்கு செய்து வரும் கொடை , தொண்டு.

2016ல் கன்னையா குமார் என்பவர் காஷ்மீர பயங்கரவாதி அஃப்சல் குருவுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தி, பாரத நாட்டை துண்டு போடுவோம், சிதறடிப்போம் என்று கோஷமிடுகிறார். அவரைக் கைது செய்ய தில்லியின் காவல் துறையைக் கையில் வைத்து இருக்கும் கெஜ்ரிவால் அரசு இன்று வரை அனுமதி அளிக்க மறுக்கிறது. இதைத் தவிர அவ்வப் பொழுது வளாகத்திற்குள் நடப்பதாகச் சொல்லப் படும் பாலியல் குற்றங்கள். இவர்களாக பார்த்து எந்த பேராசிரியர் மீது குற்றம் சொன்னால் மட்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றபடி யாரும் தட்டிக் கேட்க ஆளில்லாத  சண்டப்பிரசண்டர்கள் இவர்கள்!

பழைய கதையை விடுங்கள், இன்று இவர்களுக்கு  என்ன தான் பிரச்சினை? மாணவர்கள் தங்கும் விடுதி (ஹாஸ்டல்) மாதாந்திர  கட்டணத்தை ரூ. 10ல் இருந்து ரூ.300 ஆக்கியிருக்கிறார்கள்.  படிக்கும் காலத்தில் செலுத்தும் காப்பீட்டு கட்டணத் தொகை ரூ.5500ல் இருந்து ரூ.12000/-   (இது அவர்கள் படிப்பை முடித்து வளாகத்தை விட்டு திருப்பி அளிக்கப் பட்டுவிடும்) ஆக உயர்த்தப் பட்டுள்ளது. விடுதி   கட்டணம் கடந்த நாற்பது ஆண்டுகளாக உயர்த்தப் படவே இல்லை. மாணவர்கள் விடுதி மெஸ் எனப்படும் உணவகத்திற்கு கடந்த 4 மாதங்களில் மட்டும் பாக்கி   வைத்துள்ள தொகை ரூ.2.79 கோடி.! சென்ற ஆண்டு பல்கலைக்கழக நிதி நிலை அறிக்கையின் படி விழுந்துள்ள துண்டு (Deficit) ரூ.12 கோடி.

இவர்கள் கணக்குப் படிகூட , சுமார் 40 விழுக்காடு மாணவர்கள் தான், ஏழை மாணவர்கள். அவர்களுக்கு குரல் கொடுக்கிறோம் என்ற போர்வையில் வசதி படைத்த மாணவர்களும் குளிர் காய்கிறார்கள். அவர்களுக்கு முட்டு கொடுக்க பேராசிரியர்கள் சங்கமும் தெருவுக்கு வருகிறார்கள் ! எப்படி உருப்படும் கல்வி?

சுமார் 8000 மாணவர்கள் படிக்கிறார்கள். ஆண்டொன்றிக்கு அரசு ஒவ்வொரு மாணவனுக்கும், ஏறத்தாழ ரூ.6.95 லட்சம் செலவு செய்கிறது. இதற்கு அவர்கள் செய்யும் கைம்மாறு என்னவென்று பாருங்கள் !.

இன்னொரு விந்தையான வேதனையான ஒரு தகவல். மாணவர்களில் சுமார் 55 விழுக்காட்டினர் எம்ஃபில் அல்லது பி எச் டி எனும் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள்.ஏனைய பல்கலைக்கழங்களில் இளம் கலை படிப்பவர்கள் மிக அதிகமாகவும், முதுகலை மாணவர்கள் எண்ணிக்கை அடுத்த நிலையிலும் சுமார் 10-15 விழுக்காட்டினர் தான் ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். உலகமெங்கும் இது தான் நிலை என்றால், ஜே என் யு வில் மட்டும் வேறு விதம். அதுவும் இங்கே எம் ஃபில் அல்லது பி எச் டியில் ஆர்வம் காட்டுபவர்கள் பெரும்பாலும் சமூகவியல் அல்லது இலக்கிய துறையைச் சேர்ந்தவர்கள். எதற்காக இப்படி? அப்பொழுது  தானே வருடக்கணக்கில் தில்லி மா நகரில் குறைந்த வாடகையில் தங்கிக் கொண்டு , குறைந்த கட்டணத்தில் உண்டு ( அதையும் நிலுவையில் வைத்து) உறங்கி நாட்களைக் கழிக்க முடியும். பகல் நேரம் முழுதும் அரசியல் கட்சிகளுக்கு வால் பிடித்துக் கொண்டு, பிரிவினைவாதிகளின் ஸ்லீப்பர் செல்களாக வேலை பார்க்கலாம். நாட்டிற்கு கேடு விளைவிக்கலாம் !

மோதிஜி இன்னும் எத்தனை காலம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் ? அவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?