‘நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தில், கேரளாவும் இணைந்து செயல்பட்டால், முழுமையான பலன் கிடைக்கும்’ என, வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அடையாளங்கள் வரிசையில், மாநில விலங்காக நீலகிரி வரையாடு உள்ளது. மாநில விலங்கு என்ற கவுரவம் இருந்தாலும், இதன் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் வெகுவாக குறைந்து வருகிறது.
குன்றுகள், உயரமான மலை முகடுகளில் எளிதாக ஏறுவதால், இவை வரையாடுகள் என, பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில், நீலகிரி உயிர்க்கோள பகுதியில், இவ்வகை ஆடுகள் பரவலாக காணப்படுகின்றன. குறிப்பாக, தமிழக, கேரள வனப் பகுதிகளில் தான் வரையாடுகளை காண முடிகிறது என, வன உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் அடையாள அங்கீகாரம் பெற்றாலும் வேட்டை, வாழ்விடங்கள் அழிப்பு போன்ற காரணங்களால், வரையாடுகளின் எண்ணிக்கை வெகுவாக சரிந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகம், கேரள பகுதிகளில், சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அடிப்படையில், நீலகிரி உயிர் கோள பகுதியில், 3,122 வரையாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு வனப் பகுதிகளில் இருந்து, வரையாடுகள் கேரள வனப்பகுதிக்கு இடம் பெயர்வதால், இங்கு அதன் எண்ணிக்கை வெகுவாக குறைவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 25 கோடி ரூபாயில், நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை, தமிழக அரசு 2022ல் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரையாடுகளின் வாழ்விடங்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், தமிழக பகுதிக்கு என அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம், இடம் பெயர்ந்த வரையாடு களுக்கு பயன் தருமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. தமிழகத்திலும், கேரளாவிலும் வரையாடுகள் எண்ணிக்கை பரவலாக உள்ளது உண்மை தான். இருப்பினும், வரையாடுகள் பாதுகாப்பு திட்டம், தமிழக அரசின் நிதியில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வரையாடுகள் நடமாட்டத்துக்கு எல்லை வரையறை இல்லை என்றாலும், தமிழக அரசின் இத்திட்டம் எல்லைக்கு உட்பட்டே செயல்படுத்தப்படும். கேரளாவில் இருந்து வந்து செல்லும் வரையாடுகளையும் கருத்தில் வைத்து, வாழ்விட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.அதேநேரத்தில், ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணிகள் மட்டும், கேரள வனத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்.தற்போதைய நிலவரப்படி, கோவையில் வரையாடுகள் திட்ட அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது; ஐந்து ஆராய்ச்சியாளர்கள், ஒரு திட்ட இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேட்டை மட்டுமல்லாது, வாழ்விடங்கள் அழிக்கப்படுவதே, தமிழகத்தில் வரையாடுகள் அழிவதற்கு முக்கிய காரணம். மேற்கு தொடர்ச்சி மலையில், பரந்து விரிந்த புல்வெளிகள் தான், இந்த ஆடுகளின் வாழ்விடங்கள்.ஆனால், சுற்றுலா, மனிதர்கள் குடியேற்றம், களை தாவரங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், புல்வெளி பகுதிகள் அழிக்கப்படுவதே வரையாடுகள் அழிவுக்கு காரணமாக உள்ளன. தமிழகத்தில் வரையாடுகள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே, இத்திட்டம் வெற்றி பெறும்
கேரளாவில் இரவிக்குளம் பகுதியில், மிக அதிக எண்ணிக்கையில் வரையாடுகள் காணப்படுகின்றன. மனிதர்கள் நடமாட்டம் இருந்தாலும், அச்சப்படாமல் இவை நடமாடுகின்றன. இத்தகைய சூழலை தமிழகத்தில் உருவாக்க, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.