அயோத்தி ராமன் அனைவருக்கும் இனியவன்

சரயூ நதியில் குளிக்கச் சென்றபோது, பெரிய சைஸ் குலோப் ஜாமுன் போல் சூரியன் என்னை வரவேற்றது. சூரியோதயத்தைப் பார்ப்பதா குளிப்பதா என்ற தடுமாற்றத்தைத் தாண்டி, சூரியோதயத்தில் சரயூ நதியில் மூழ்கி ரசித்தேன். ‘ஸரஸ்-யூ’ என்பதையே சரயூ என்று நாம் கூறுகிறோம். அதாவது பிரம்மாவின் மனமே உருகி ஒரு பெரிய நதியாக மாறியதாம்.

நாம் படிக்கும் வரலாறு வடிகட்டியது. ஏதோ ஆங்கிலேயரும், முகம்மதியர்களும் நமக்கு நல்லது செய்தார்கள் போன்ற தோற்றத்துடன் எழுதப்பட்டுள்ளது. ஹிந்துக் கோயில்களின் மீது, நம் தேசத்தின் மீதும் அவர்கள் புரிந்த தாக்குதலின் சுவடுகளை யாத்திரை முழுவதும் பார்க்க முடிந்தது. இவை எல்லாம் நம் வரலாற்றுப் பாடத்தில் இல்லாத ஒன்று. ஆங்கிலேயர்கள்தான் ரயில்வே, போஸ்ட் ஆபீஸ் கொண்டு வந்தார்கள் என்று ரிட்டையரான தாத்தாக்கள் பிதற்றிக்கொண்டு இருப்பதற்கு, நம் வரலாற்றைச் சரியாக எழுதாததுதான் காரணம்.

1528ல் ‘பாபர் மசூதி’ ஸ்ரீராமர் கோயில் இருந்த இடத்தின் மீது மீர் பாகி என்னும் பாபரின் படைத்தலைவரால் கட்டப்பட்டது. கலவரம் நடந்த பிறகு, ஆங்கிலேயர்கள் கட்டைப் பஞ்சாயத்து செய்து, ஒரு பகுதியில் மசூதியையும், இன்னொரு பகுதியில் கோயிலையும் அனுமதித்தார்கள். 1949ல் ஸ்ரீராம விக்ரகம் பிரதிஷ்டை ஆனது. 1992ல் அங்கே இருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடித்து மீண்டும் அங்கே ராமரை பிரதிஷ்டை செய்தபோது நடந்தவை எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்த வரலாறு.

இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் (அகுஐ) 2003ல் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு, மசூதியின் அடியில் இருக்கும் கட்டட அமைப்புப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்து அறிக்கை சமர்ப்பித்தது. சுமார் 3,000 ஆண்டு பழமை மிகுந்த கட்டட அமைப்புக்கு மேல் மசூதி கட்டப்பட்டதாக அறிக்கை சொன்னது. ராமர் ‘மித்’ (புனைவு) இல்லை, நமக்கு மித்திரன்.

எக்கசக்க செக்யூரிட்டியாம்… மொபைல் கேமரா எதுவும் கூடாது” போன்ற அறிவுரைகளால் உள்ளூர ‘ராமஜன்ம பூமி’ க்குச் சீக்கிரம் செல்லவேண்டும் என்ற பதற்றம் தொற்றிக்கொண்டது.

நம் சடகோபன் திருவாய்மொழியில்:

கற்பார் இராம – பிரானை அல்லால், மற்றும் கற்பாரோ?

புல் பா முதலா, புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே

நல் – பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்

நல் – பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!

‘அயோத்தியில் வாழ்கின்ற எல்லா ஜீவராசிகளுக்கும், புல் முதல் எறும்பு வரை, அயோத்தியில் இருந்ததால் சுலபமாக பரமபதம் கிடைத்தது. ஸ்ரீராம பிரானுடைய கீர்த்தியை அல்லாமல் வேறு கீர்த்திகளையும் கற்பார்களோ?”

இங்கே ‘நற்பால் அயோத்தி’ என்று நம்மாழ்வார் கூறுவதற்கு நம்பிள்ளை ‘அயோத்தி மண்ணை மிதித்தாலே ராம பக்தி தானாக உண்டாகும்’ என்று விளக்கம் தருவாராம். அதாவது ராமகுணங்கள் நடனமாடுகிற அயோத்தி என்று பொருள்.

ராமாயணத்தில் எவ்வளவு காண்டம் இருக்கிறது. கம்பர், துளசிதாஸ் எழுதிய ராமாயணத்தில் உத்தர காண்டம் இருக்கிறதா போன்ற தகவல்கள் பலருக்குத் தெரியாது. நம் குழந்தைகளின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

ஒரு மகனாக, ஒரு கணவனாக, ஓர் அரசனாக, ஒரு சகோதரனாக, ஒரு வீரனாக எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக விளங்கிய ஸ்ரீராமரைப் பற்றி நாம் அவர்களுக்குச் சொல்லித் தந்தால் அதுவே சிறந்த வரலாற்றுப் பாடம்.

ராமஜன்ம பூமி வாயிலை அடைந்தபோது அங்கே போர்முனை உடையில் துப்பாக்கியுடன் ராணுவத்தைப் பார்க்க பயமாகத்தான் இருந்தது. கையில் இருந்த பை, பேனா, மொபைல் என்று சகல வஸ்துக்களையும் ஒரு கடையில் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம்.

என் பர்ஸை முழுவதும் சோதித்த முதல் காவலாளி, ஏதாவது சிம்கார்ட் இருக்கா?” என்றார். சின்ன சீப்பு மட்டும்தான் இருக்கு” என்றேன். அதை வாங்கிப் பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டார்.

இருபது அடியில் மீண்டும் சோதனை. அவர் என் பர்ஸை முழுவதும் சோதித்துப்பார்த்து என் இடுப்பில் இருந்த அங்கவஸ்திரத்தைத் தடவியபின் உள்ளே அனுமதித்தார். இதற்கு பிறகு சர்க்கஸ் கூண்டுக்குள் போகும் சிங்கம் போலச் சென்றேன். என்னுடன் வந்தவர் கொஞ்சம் எரிச்சலாக எதுக்கு இவ்வளவு செக்யூரிட்டி செக்” என்று சொல்லி முடிக்கும் முன் அடுத்த சோதனை. அங்கவஸ்திரம் கழற்றப்பட்டது.

இடுப்பில் கட்டிக் கொண்டபின் மேலும் ஒரு  சோதனை. மனதில் இருந்த ராமரைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சோதித்துவிட்டார்கள். போர்டிங் பாஸ் கொடுத்து வைகுண்டத்துக்கு அனுப்பினாலும் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.

கூண்டுக்குள் நடக்கும்போது வெளியே சிஆர்பிஎப் வீரர்கள் கையில் அஓ47வைத்துக்கொண்டு சோர்வே இல்லாமல் காவல் காத்துக்கொண்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது.

சில நிமிஷத்தில் ராம ஜன்ம பூமி என்ற பிரசித்தி பெற்ற இடம் வந்தது. தற்போது உள்ள கோயில், இரண்டு சுவற்றின் மீது தார்பாலின் கூடாரம். ‘மனத்துக்கு இனியான்’ என்று ஆண்டாள் போற்றிய சக்ரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமரை ஒருவித கனத்த மனத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

சென்ற ஆண்டு மதுராவுக்குச் சென்றபோதும் இதே நிலமை. எல்லாம் பெருமாள் திருவுள்ளம் என்று நினைத்துக்கொண்டேன்.

இக்ஷ்வாகு வம்சத்தில் உதித்த ஸ்ரீராமர், தான் ஆராதித்த ஸ்ரீரங்கநாதரை விபீஷணனிடம் அன்பளிப்பாகக் கொடுத்தார் அதுவே இன்று ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமாள், வைகுண்டத்தின் ஒரு பகுதி அயோத்தியா என்பார்கள். ராமர் ஆராதித்த பெருமாள், விமானம் ஸ்ரீரங்கம் வந்தபோது ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் ஆனதில் வியப்பில்லை.

சங்க இலக்கியங்கள், வால்மீகி, ஆழ்வார்கள், கம்பன் எல்லோருக்கும் அயோத்தி பற்றிக் குறிப்பிடுகிறார்கள். ‘ராமர் இங்கு பிதறந்ததாக நம்பப்படுகிறது’ என்று சொல்லுவது அயோக்கியத்தனம். ஸ்ரீராமர் இங்குதான் பிறந்தார் என்று நம் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். மாற்றக் கூடாதவற்றை மாற்றாமல் இருப்பதுதான் முன்னேற்றம்.

ஸ்ரீராமரை சேவித்துவிட்டு அவர்கள் கொடுத்த கற்கண்டு பிரசாதத்தை எடுத்துக்கொண்டு நடக்கும் போது மனம் முழுவதும் ஸ்ரீராமரே குடிகொண்டு இருந்தார். சீக்கிரம் இங்கே கோயில் கட்டப்பட்டு அதில் ஸ்ரீராமரை சேவிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

அங்கே இருந்த ஒரு ஜவானிடம் பேச்சுக்கொடுத்தோம் (நல்லவேளை என் நண்பருக்கு ஹிந்தி தெரியும்!) சம்பாஷணை இதுதான்.

இங்கே தான் பாப்ரி மஸ்ஜித் இருந்ததா?” என்று கேட்டோம். அதற்கு அந்த ஜவான், நீங்களே மஸ்ஜித் என்று சொல்லலாமா? இங்கே ராமர் கோயில்தான் இருந்தது, மஸ்ஜித் இல்லை… இது ராமருக்கே சொந்தமான இடம்…”

உணர்ச்சிவசப்பட்டு ஜெய்ஸ்ரீராம்!” என்றேன்.

கொஞ்சம் தூரம் நடந்தபின் மேலும் இன்னொரு ஜவானிடம் பேச்சுக் கொடுத்தோம்.

எவ்வளவு நாளா இங்கே காவல் புரிகிறீர்கள்?”

இங்கே ராமர் கோயில் வரும் வரை நாங்கள் காவல் காப்போம்… கோர்ட் கோயில் கட்டலாம் என்றால் நான்கே மணி நேரத்தில் கோயில் கட்டி முடித்துவிடுவோம்!”

மீண்டும் ஜெய்ஸ்ரீராம்” என்றோம். ஜவான்கள் சல்யூட் அடிக்க, உணர்ச்சிவசப்பட்டுத் திரும்பினேன்.

அயோத்தி பற்றிய செய்திகள், படங்கள், புத்தகங்களை கூகிளில் பார்க்கலாம். ஆனால் நேரில் பார்க்கும்போது இங்கே ஸ்ரீராம ஸ்பரிசம் ஏற்படுவது நிச்சயம். எங்கு திரும்பினாலும் ஸ்ரீராம பஜனைகள். கோயில்களில் தாடி வைத்த பெரியவர்கள் ஸ்ரீராமாயணத்தை சதா படித்துக்கொண்டே இருக்கிறார்கள். எங்கு திரும்பினாலும் வானரக்கூட்டம். ஊரில் வீடுகள் இருக்கிறதா, இல்லை எல்லாம் கோயிலா என்று பிரமிப்பே ஏற்படுகிறது.

பாபர் மசூதிக்குள் 1949ல் ஹிந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்தரவை 1986ல் பிறப்பித்த பைஸாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991ல் தனது சுய சரிதையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைஸாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும் போலீஸ் கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்த குரங்கு என்பதை உணர்ந்து கொண்டு அதனை வணங்கினேன்.”

மதிய உணவு சமயம் சாப்பாட்டைத் தவிர்த்து மீண்டும் ராம ஜன்ம பூமிக்குப் பயணித்தேன். இந்த முறையும் என்னை முழுவதும் சோதித்து அனுப்பினார்கள். என் சீப்பை போட்ட அந்த குப்பைத் தொட்டியில் எட்டி பார்த்தேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள், உள்ளே பல சீப்புக்கள்! மீண்டும் மனத்துக்கு இனியானை சற்று நேரம் சேவித்துவிட்டு அடுத்த முறை வரும்போது கோயில் கட்டியிருக்க வேண்டும் என்று ஸ்ரீராமரிடம் ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்துகொண்டேன்.

மாலை நாட்டிய நிகழ்ச்சி. கூடவே ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் நடந்தது. அந்த நிகழ்வின்போது உ.வே. ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் குழுமியிருந்த 1,500 பேரிடமும் ஒரு பிரார்த்தனை வைத்தார். அது, விரைவில் பல ஆயிரம் பேர் ஒரே இடத்திலிருந்து பஜனை செய்யும் வசதியுடன் ஸ்ரீராமருக்குக் கோயில் ஒன்று அமைய வேண்டும்” என்பதுதான். நிச்சயம் இந்தப் பிரார்த்தனை பலிக்கும்.

மறுநாள் குப்தார் காட் நதிக்கரையில் நீராடிவிட்டு, அயோத்தியின் பெருமையை முழுவதும் சொல்ல முடியாமல் ‘யாது என் வியப்பாம்’ என்று கம்பன் சொல்லியது நிஜம் என்று நினைத்துக் கொண்டு கிளம்பினேன்.

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் அயோத்தி பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்:

ஆர்க்கும் இது நன்று தீது ஆனாலும் நெஞ்சே நீ

பார்க்கும் பல கலையும் பன்னாதே சீர்க்கும்

திரு அயோத்திப் புயலை சீரிய மெய்ஞ்ஞானத்து

உருவை ஒத்தின் பொருளை ஓர்.

அயோத்தி ஸ்ரீராமரை தியானித்தால் போதும், வேறு எதுவும் செய்ய வேண்டாம் என்பது ஒருவரி அர்த்தம்.

– சுஜாதா தேசிகன்

(‘வலம்’ நவம்பர் 2017 இதழிலிருந்து)

***********************************

அயோத்யா என்றால் வெல்ல முடியாத அழகு என்று பொருள். ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனது கருட பஞ்சாங்கத்தில் பெரிய திருவடியின் பார்வையை ‘அயோத்யா’ என்கிறார். அதாவது ஜெயிக்க முடியாத அழகு வாய்ந்ததாம் அவர் திருவடி. ஆனால் இன்றைய அயோத்யா அதுவும் ‘ராமஜன்ம பூமி’ என்றால் உள்ளூரக் கொஞ்சம் பதற்றம் நம்மைப் பற்றிக்கொள்வதை மறுக்க முடியாது. முக்தி தரும் க்ஷேத்திரங்கள் ஏழு. அவந்திகா – பாதங்கள், காஞ்சிபுரம் – இடுப்பு, துவாரகா – நாபி, மாயாபுரி (ஹரித்வார்) – இருதயம், மதுராபுரி – கழுத்து, காசி – மூக்கு, அயோத்தி – தலை. முக்தி க்ஷேத்திரங்களில் தலையானது அயோத்யா என்று சொல்லலாம்.

***********************************