‘அயோத்தியில் ஹிந்து தெய்வங்களின் உருவங்கள்’

‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடத்தில், ஹிந்து தெய்வங்களின் உருவங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன’ என, உச்ச நீதிமன்றத்தில், ராம் லல்லா விராஜ்மான் அமைப்பு தெரிவித்து உள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் இடம்பெற்ற, அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை, தினசரி விசாரித்து வருகிறது. விசாரணையின், ஏழாவது நாளான நேற்று(ஆக.,16) ராம் லல்லா விராஜ்மான் சார்பில், மூத்த வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியாதன், தன் வாதத்தை தொடர்ந்தார்.

அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில், 1950-ம் ஆண்டு ஆகஸ்ட், 16ல், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர் ஆய்வு செய்துள்ளார். ஆணையரின் அறிக்கையில், ‘அப்போது மசூதியாக இருந்த கட்டடத்தின் துாண்களில், சிவன், விஷ்ணு உள்ளிட்ட ஹிந்து தெய்வங்களின் உருவங்கள் இருந்தன’ என, தெரிவித்து உள்ளார்.

ஹிந்து தெய்வங்களின் உருவங்கள், மசூதியில் இடம் பெற சிறிதும் வாய்ப்பில்லை; கோவில்களில் மட்டுமே இருக்கும். அதனால், ஹிந்துக்களின் புனித பூமியாக, பல்லாயிரம் ஆண்டுகளாக அயோத்தி இருந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.