அயோத்தியில் நிறுவப்படும் பகவான் ராம் லல்லா சிலை

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் நிறுவப்படும் ராம் லல்லா சிலையின் கட்டுமானம் குறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அதிகாரிகள் தகவல் பகிர்ந்து கொண்டனர். இது குறித்து அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், “பகவான் ராம் லல்லா சிலை அமைக்கும் பணி துவங்கி விட்டது. சிலை வடிக்கும் பணியில் 3 சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், அயோத்தியில் மூன்று வெவ்வேறு இடங்களில் மூன்று வெவ்வேறு கற்களில் சிலைகளை உருவாக்கி வருகின்றனர். மூன்று சிற்பிகளில் இரண்டு பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். ஒருவர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர். கர்நாடகாவைச் சேர்ந்த கணேஷ் பட், அவரது சீடர் விபின் படோரியா ஆகியோர் சிலை செய்வதற்காக கர்நாடகாவில் இருந்து ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஜெய்ப்பூரைச் சேர்ந்த சத்ய நாராயண் பாண்டே மற்றும் அவரது மகன் மக்ரானாவில் இருந்து ‘ஏ கிளாஸ்’ கல்லைத் தேர்ந்தெடுத்துள்ளனர். மூன்றாவது சிற்பியான கர்நாடகத்தை சேர்ந்த அருண் யோகிராஜும், கர்நாடகாவில் இருந்து வித்தியாசமான ஒரு கல்லை கொண்டு வந்துள்ளார். ராம் லல்லா சிலை அமைக்கும் பணி திட்டமிட்ட நேரத்தில் முடிக்கப்படும். கோயிலின் கருவறையில் பகவான் ராம் லல்லாவின் சிலை வைக்கப்படும். ராம் லல்லா சிலையின் பிரான் பிரதிஷ்டை விழா ஜனவரி 1 முதல் ஜனவரி 14, 2024 வரை நடைபெறும். இங்கே ராமரை அவரது குழந்தை வடிவில் மக்கள் வணங்குவார்கள். பகவான் ராமர் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு வகையில் வணங்கப்படுகிறார். சில இடங்களில் அவர் மருமகனாகவும், பல இடங்களில் அரசனாகவும், மேலும் சில இடங்களில் நாடோடியாகவும் (வனவாசி) வணங்கப்படுகிறார். ஆனால், இங்கு அவர் குழந்தை வடிவில் ராம் லல்லாவாக வணங்கப்படுவார். மேலும், பார்கோட்டாவுக்கு வெளியே கட்டப்பட உள்ள மேலும் ஏழு கோயில்கள் கட்டுவது, மற்ற சிலைகள் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. கோயில் கட்டுமானக் குழுவின் இரண்டு நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ராவும் கலந்துகொண்டார்” என தெரிவித்தார்.