அமித்ஷா ராகுலுக்கு சவால்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹுப்பள்ளியில் நேற்று நடந்த குடியுரிமை திருத்த சட்டம் விளக்க கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளவர்களில், 70 சதவீதம் பேர் தலித்துகள். அவர்களுக்கு குடியுரிமை கிடைக்கவே இச்சட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்தகைய சட்டத்தை எதிர்ப்பவர்கள், தலித் விரோதிகள். மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள், நாட்டுக்குள் நுழைந்து நமது ராணுவ வீரர்களை கொன்றனர். அப்போது, மவுன பாபா, மன்மோகன்சிங், எதையும் செய்யவில்லை. ஆனால், நரேந்திர மோடி பிரதமர் ஆனதும், பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து, பயங்கரவாதிகளை அழிக்குமாறு உத்தரவிட்டார். இதிலிருந்து, யார் நல்லது செய்திருக்கிறார்கள் என்பதை கூறுங்கள்.ராகுலுக்கு நேரடி சவால் விடுக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தை முழுமையாக படிக்கட்டும். அதில், முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்க மாட்டோம் என குறிப்பிட்டிருந்தால், அவருடன், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விவாதம் நடத்த தயாராக உள்ளார்.நம் அண்டை நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினர், கஷ்டப்பட்டு இந்தியாவுக்குள் வந்துள்ளவர்களுக்கு, குடியுரிமை வழங்குவதே இதன் நோக்கமாகும்.