அமராவதி அணைக்கு எதிராக கேரளாவில் புதிய அணை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை 90 அடி உயரத்துடன் 4 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலமாக திருப்பூர் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆற்றின் வழியோரத்தில் 75க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாகவும் உள்ளது.

அமராவதி அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் 839 சதுர கி.மீ. பரப்பு நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளன. கேரளா மாநிலம் மூணாறு ராஜமலை தலையாறு உள்ளிட்ட வனப்பகுதிகளில் உருவாகும் பாம்பாறு சின்னாறு மற்றும் தேனாறு இணைந்து உடுமலை அமராவதி அணைக்கு வருகிறது.

பருவமழை காலங்களை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுக்கு 10 டி.எம்.சி. நீரை பயன்படுத்தும் வகையில் 1956ல் இந்த அணை கட்டப்பட்டது. இங்கு துவங்கி கரூர் வரை 148 கி.மீ. அமராவதி ஆறு பயணித்து திருமுக்கூடலுார் பகுதியில் காவிரியில் கலக்கிறது.

அமராவதி காவிரியின் துணை ஆறாக உள்ளதால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அடிப்படையில் அமராவதியில் 3 டி.எம்.சி. நீரை கேரளா அரசு எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் ‘தமிழக – கேரளா அரசுகள் இணைந்து பாம்பாற்றில் துாவானம் அருவி பகுதியில் 5.6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட நீர் மின் திட்ட அணை அமைத்துக் கொள்ளலாம்; மின் உற்பத்திக்குப் பின் தண்ணீரை அமராவதி அணைக்கு செல்லும் வகையில் பாம்பாற்றில் விட வேண்டும்; இதன் நிர்வாகத்தை இரு மாநில அரசுகளும் மேற்கொள்ளலாம்’ எனவும் அனுமதி வழங்கியுள்ளது.

கேரளா அரசு இடுக்கி மாவட்டத்தில் விவசாய சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கான ‘இடுக்கி பேக்கேஜ்’ திட்டத்தை 2012ல் துவக்கியது. இதற்காக கேரள அரசின் ஆறு துறைகள் கைகோர்த்து களமிறங்கியுள்ளன. முதற்கட்டமாக நீர் வளத்தை அதிகரிக்க மறையூர் காந்தலுார் பட்டிச்சேரி உள்ளிட்ட பகுதியில் ஆறு இடங்களில் தடுப்பணைகள் கட்ட 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.

காந்தலுார் அப்பர்சட்டு மூணாறு லோயர் சட்டு மூணாறு தலையாறு வட்டவடா மற்றும் செங்கல்லாறு ஆகிய ஆறு இடங்களில் தடுப்பணைகள் கட்ட திட்ட மதிப்பீடு தயாரித்து இதன் மூலம் 74 ஆயிரம் ஏக்கரில் காய்கறி சாகுபடி கரும்பு நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டது. ஏற்கனவே பாசன பரப்பு நீர்ப் பயன்பாடு குறித்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு உள்ள நிலையில் அமராவதி அணைக்கு நீர்வரத்து அளிக்கும் ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டமுயற்சிக்கிறது.

கடந்த 2014ல் பட்டிச்சேரியில் அணை கட்டும் பணியை துவக்கியதால் அமராவதி பாசன விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தமிழக அரசு சார்பில் 2014 நவ. 28ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இத்திட்டத்தை கேரளா அரசு நிறுத்தி வைத்தது.

ஆறு ஆண்டுகளாக அணை கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டிருந்த கேரள அரசு தற்போது மீண்டும் பணியை துவக்கியுள்ளது. பாம்பாற்றில் இணையும் முக்கியமான ஆறான செங்கல்லாறு ஆற்றின் குறுக்கே பட்டிச்சேரியில் 98.4 அடி உயரம் 459.2 அடி நீளம் கொண்ட அணையை கட்டும் பணியை துவக்கியுள்ளது.