அனைவரையும் உள்ளடக்கிய ஊழலற்ற அரசு தேவை: மோடி

துபாயில் நேற்று நடந்த சர்வதேச அரசுகள் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”உலகிற்கு தற்போது அனைவரையும் உள்ளடக்கிய ஊழலற்ற அரசுகள் தேவை. ‘சிறிய அரசு; பெரிய நிர்வாகம்’ என்ற தாரக மந்திரத்தை, 23 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம்,” என தெரிவித்தார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

அப்போது, இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே, எரிசக்தி, உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில், சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று, ஐக்கிய அரபு எமிரேட்சின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்துாமை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, இரு நாடுகளின் தலைவர்களும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, துபாயில் நடந்த சர்வதேச அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். ‘எதிர்கால அரசுகளை வடிவமைத்தல்’ என்ற தலைப்பில் நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

பொது மக்களின் வாழ்வில், அரசு முடிந்தவரை தலையிட்டு ஏதாவது ஒரு வழியில் உதவ வேண்டும். நமக்கு உதவ அரசு இல்லை என்பதை மக்கள் உணரக் கூடாது. அதே சமயம், அவர்களுக்கு அரசு சார்பில் எந்தவொரு அழுத்தமும் தரக் கூடாது.

இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாக, அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்து வருகிறது. மக்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை அளித்ததால் தான் இது சாத்தியமானது. துாய்மை இயக்கம், பெண் கல்வி என, அனைத்து முன்னெடுப்புகளிலும் பெரிய அளவில் பொது மக்கள் பங்களிப்பு அளித்ததால் தான், இந்த திட்டங்கள் வெற்றி அடைந்தன. குஜராத் முதல்வர் முதல், பிரதமர் வரை என, 23 ஆண்டுகள் அரசு நிர்வாகத்தை நடத்தியுள்ளேன். அப்போது முதல், சிறிய அரசு; பெரிய நிர்வாகம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி வருகிறேன்.

என் தலைமையிலான அரசு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. அரசியல் உட்பட அனைத்து நிலைகளிலும் அவர்களது முன்னேற்றத்துக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமூக மற்றும் நிதி உள்ளடக்கம், பா.ஜ., அரசின் முதன்மையான முன்னுரிமை. இந்தியாவில், 50 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, தற்போது வங்கிக் கணக்கு உள்ளது. தொடர்ச்சியான நடவடிக்கைகளால், நிதி தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பேமென்ட் துறைகளில்