அதிர்ச்சித் தீர்ப்பு

கோயில்களில் கடை குத்தகைக்கான ஏல நடைமுறையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை மீறியதாகக் கூறி ஆந்திர அரசின் வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர், அறநிலையத்துறை ஆணையர், ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோயிலின் செயல் அலுவலர் ஆகியோர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க, சையத் ஜானி பாஷா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘கோயில்களில் கடை குத்தகைக்கான ஏல நடைமுறையில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை விலக்க வேண்டாம்’ என ஒரு தீர்ப்பை அளித்துள்ளது.

சில நாட்களுக்கு முன், கோயில் நிர்வாக முறைகேடுகளை மட்டுமே நீதிமன்றங்கள் விசாரிக்கலாம். கோயில் பூஜைகள், சடங்குகளில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. நடவடிக்கையில் தலையிடக்கூடாது என தீர்ப்பு அளித்தது. இச்சூழலில் தற்போது வழங்கப்பட்டு உள்ள இந்த தீர்ப்பு, ஹிந்துக்களுக்கு எதிரான தீர்ப்பாகவே பார்க்கப்படுகிறது என்பது திண்ணம். ஏற்கனவே, தமிழகம் உட்பட பல மாநில அரசுகள் ஹிந்துக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகையில் இந்த தீர்ப்பு அவர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாகவே உள்ளதாக மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஹிந்துக்கள் அல்லாதவர்கள் ஹிந்து கோயில்களில் கடைகள் வைத்து அங்கு கோயிலுக்கு சம்பந்தம் இல்லாத பொருட்களை விற்றால் அது, மத சம்பிரதாயங்களை மீறியதாகிவிடாதா? அங்கு வரும் மக்களை அவர்கள் ஏமாற்றியோ கட்டாயமாகவோ மதமாற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளதை யாராவது மறுக்க முடியுமா? இதுபோன்ற பல நிகழ்வுகள் ஏற்கனவே நடந்துள்ளதே? இதுபோன்ற சம்பவங்கள் நடந்த பிறகு பின்னர் காவல்துறை, வழக்கு, நீதிமன்றம் என செல்வதைவிட முன்னதாகவே இதனை தடுப்பதுதானே சரியான நடைமுறை?

உலகெங்கிலும், மதச்சார்பின்மை என்பது அரசையும் மதத்தையும் பிரிக்கப்படுவதையே குறிப்பிடுகிறது. மற்ற மத நிறுவனங்கள் எல்லாம் அவர்கள் அமைப்புகளின் சுய கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால், துரதிருஷ்ட வசமாக, பாரதத்தில், ஹிந்து மத கோயில்கள், மடங்கள், அவற்றின் சொத்துகள் எல்லாம் மதச்சார்பற்ற அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. இது அபத்தமானது. மேலும் இந்த அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வாகம் பெரும்பாலும் ஊழல் மற்றும் திறமையின்மையால் சீரழிந்து வருகிறது. ஹிந்துக்கள் அல்லாதவர்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலோ, ஹிந்து அறநிலையத் துறையிலோ அல்லது கோயில் பணத்தில் நடத்தப்படும் நிறுவனங்களிலோ வேலை வாய்ப்பு பெறுவதும் அதிகரித்து வருகிறது. இதுபோன்றவை மேலும் நடைபெறாமல் இருக்க, மத்திய அரசு, உடனடியாக கோயில்களை சுதந்திரமான ஹிந்து அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்கும், மதமாற்றங்களை தடுப்பதற்கும் தேசிய அளவில் சட்டம் இயற்றுதல் ஒன்றே தீர்வாக அமையும்.