அதானி நிறுவனத்தின் சோலார் நிலையம் மூலம் 840 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி

கமுதியில் அமைக்கப்பட்டுள்ள அதானி நிறுவனத்தின் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் மூலம் 848 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 77 லட்சம் டன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சுற்றுச்சூழல் மாசுவை குறைக்க, மத்திய அரசு பசுமை எரிசக்தியை ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக, சூரியசக்தி, காற்றாலை மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அதானி நிறுவனம் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதானி கிரீன் எனர்ஜி என்ற சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது. சுமார் 2,500 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம், 648 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

இந்த மின் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து, அதன் தலைமை அதிகாரி ஆர்.ஆராவமுதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த மின்நிலையம் அமைக்கும் பணி 2015-ல் தொடங்கப்பட்டது. 2016-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்நிறுவனத்தை திறந்துவைத்தார். சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய 25 லட்சம் சூரியஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 648 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழக மின்வாரியம் கொள்முதல் செய்கிறது. இதற்காக மின் வாரியத்துடன் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த மின் நிலையத்தில் தினமும் 30 லட்சம் யூனிட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை 840 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய வெப்பம் தேவையில்லை. சூரிய ஒளிதான் தேவை. இப்பகுதியில் அதிக அளவு சூரியஒளி கிடைக்கிறது. ஆண்டுக்கு 200 நாட்கள் வரை சூரியஒளி கிடைக்கிறது. குறிப்பாக, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அதிக சூரிய ஒளி கிடைப்பதால், மின் உற்பத்தியும் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது.

சூரியஒளி தகடுகள் மீது தூசி படர்ந்தால், சூரியஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு குறையும். எனவே, ஆண்டுதோறும் 7 முறை இந்த தகடுகள் சுத்தம் செய்யப்படும். ஒரு தகட்டை தூய்மைப்படுத்த 300 மில்லிலிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்த மின் நிலையத்தால் 77 லட்சம் டன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.

2.64 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம்: மின் உற்பத்தி நிலையத்தின் செயல்திறன் 17 சதவீதம் இருந்தாலே சிறப்பானது. ஆனால், சிறந்த பராமரிப்பு பணியால், செயல்திறன் 19 சதவீதமாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலம் 2.64 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும். உலகில் ஒரே இடத்தில் ஒரு நிறுவனம் 648 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி நிலையத்தை அமைத்ததில்லை. அந்த வகையில், அதானி நிறுவனம் மட்டுமே கமுதியில் இந்த மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஆராவமுதன் கூறினார்.