அசாம் போடோ ஒப்பந்தத்தை தொடர்ந்து பிற தீவிரவாத அமைப்புகளுடனும் உடன்பாடு எட்ட மத்திய அரசு திட்டம்

அசாம் போடோ அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற தீவிரவாத அமைப்புகளுடனும் உடன்பாடு எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அசாமில் போடோலாந்து பகுதியை தனி மாநிலமாக பிரிக்க வலியுறுத்தி சில அமைப்புகள் ஆயுதம் ஏந்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றன. அந்த அமைப்புகளுடன் மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இந்நிலையில், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎப்பி), மத்திய அரசு மற்றும் அசாம் மாநில அரசு இடையே கடந்த 27-ம் தேதி அமைதி ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது. இதன்மூலம் சுமார் 50 ஆண்டு கால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் டெல்லியில் கூறும்போது, “போடோ ஒப்பந்தம் கையெழுத்தானதைக் கொண்டாடும் வகையில், அசாம் மாநிலம் கோக்ரஜார் நகரில் வரும் 7-ம் தேதி விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற தீவிரவாத அமைப்புகளுடனும் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்ற தகவலை பிரதமர் மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போடோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிற தீவிரவாத அமைப்புகளுடனும் ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து அவற்றுடன் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட மத்திய அரசின் பிற துறைகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன” என்றார்.

மத்திய அரசின் மற்றொரு உயர் அதிகாரி கூறும்போது, “மணிப்பூர் மாநிலத்தில் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி போராடி வரும் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யுஎன்எல்எப்) உள்ளிட்ட இதர அமைப்புகளுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது” என்றார்.

மற்றொரு உயர் அதிகாரி கூறும்போது, “நாகாலாந்தில் போராடி வரும் என்எஸ்சிஎன் உள்ளிட்ட கிளர்ச்சி குழுக்களின் தலைவர்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கூர்காலாந்து பகுதியில் போராடி வரும் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.