அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் வெளியீடு- விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு தரப்படும் என விளக்கம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படும் என்று, அரசு தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண ஏதுவாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் (NRC)  தயாரிக்கப்பட்டது.
கடந்த 2018 ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவுப்பட்டியலில், 40 லட்சம் பேரின் பெயர் விடுபட்டதால் புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. இப்பட்டியல்,  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று வெளியான பட்டியலில் 3.11 கோடி மக்கள் இடம் பெற்றுள்ளதாகவும், 19.06 லட்சம் பேர் விடுபட்டுள்ளதாகவும், முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  விடுபட்டவர்கள், தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபடலாம் என்று கருதி, முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் விடுத்துள்ள அறிக்கையில், “பட்டியலில் விடுபட்ட மக்கள் யாரும் கவலையடையத் தேவையில்லை. மக்கள் அமைதி காக்க வேண்டும். பட்டியலில் விடுபட்டவர்களுக்கு, மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும். வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம்”  என்று தெரிவித்துள்ளார்.