அக்னி வீரர்களுக்கு கூடுதல் தகுதி

மத்திய அமைச்சரவையால் செவ்வாய்கிழமையன்று அறிவிக்கப்பட்ட அக்னிபத் திட்டம், நாட்டின் ஆயுதப்படைகளை நவீனப்படுத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, இளைஞர்கள் தேசத்திற்கு சேவையாற்றுவதற்கான வாய்ப்புகளையும் வழங்கும். மேலும், இது பாரதத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஆயத்த நிலைக்கு பங்களிப்பை வழங்கக் கூடிய திறன் பயிற்சி பெற்ற பெருமளவிலான இளைஞர்களை உருவாக்கக் கூடியதாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும். இந்த அக்னிபத் திட்டத்தில் ஆயுதப்படைகளுடன் இணைந்து பணியாற்ற மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மிகுந்த பெருமிதத்துடன் இணைவதாக தெரிவித்துள்ளது. இதன்படி, அக்னிபத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், அக்னி வீரர்களாக பணியில் இருக்கும் போதே, அவர்கள் தங்களது வேலையுடன் தொடர்புடைய மத்திய அரசின் திறன் பயிற்சி சான்றிதழ்களைப் பெறமுடியும். இதனால், அவர்கள் வெளியில் வந்தபின்பு வேலை தேடுவது, சுயதொழில் தொடங்குவது, வங்கிக் கடன் பெறுவது போன்றவை எளிதாகும். அக்னி வீரர்களின் இந்த பயிற்சிகளுக்காக பயிற்சி பிரிவு தலைமை இயக்குனரகம், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், பல்வேறு துறை திறன் மேம்பாட்டுக் குழுக்கள், தொழில்முனைவோர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகிய திறன் இந்தியாவிற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளும் இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.