அகில உலக ராமாயண மாநாடு

ராமாயணம்:ஜெகம் புகழும் புண்ய கதை…!

ராமாபிரான் இலங்கைக்கு போக ‘ராமர் பாலம்’ கட்டினார் என்றால் உலக நாடுகள் எல்லாவற்றிலும் ஹிந்துத்துவத்தை, பாரதப் பண்பாட்டைக் கொண்டுசெல்ல பாலமாக ராமாயணம் விளங்குகிறது என்று ஒருவர் சுவைபடக் கூறினார். ராமாயணம் பாரத மக்களால் மட்டுமல்ல, உலக மக்களால் எப்படியெல்லாம் போற்றப்படுகிறது என்பது டிசம்பர் 21, 22, 23 தேதிகளில் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் நடந்த உலக ராமாயண மாநாட்டில் வெளிச்சத்துக்கு வந்தது. பல்வேறு நாடுகளிலிருந்து 250 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றார்கள். வந்தவர்களில் 55 பேர் ராமாயணத்தை ஆய்வுசெய்த அறிஞர்கள், நிபுணர்கள்.

மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத இணைப் பொதுச்செயலர் டாக்டர் கிருஷ்ண கோபால். அவர் பேசும்போது குறிப்பிட்ட ஒரு விஷயம், சிறப்பான கவனத்துக்கு உரியது. அவர் தெரிவித்த கருத்து இது: ராமாயணத்தில் காணப்படும் ஒவ்வொரு உரையாடலும் நமக்குப் பாதை காட்டுகிறது. ராமாயணத்தில் எத்தனையோ சம்பவங்கள் வருகின்றன. ராமபிரான் சீதாபிராட்டியுடன் உரையாடுகிறார். ராமபிரான் அன்னை கௌசல்யாவுடன் உரையாற்றுகிறார். ராமபிரான் கைகேயியுடன் பேசுகிறார். ராமபிரான் பரதனுடன் பேசுகிறார். ராமபிரான் விபீஷணனுடன் பேசுகிறார். படகோட்டியான குகனுடன் ராமபிரான் பேசுகிறார். இவை ஒவ்வொன்றும் ஞானம் என்ற நதியின் பல்வேறு படித்துறைகள். விபீஷணன் ராமபிரானைக் கேட்கிறார், ஐயா, நீங்கள் கவசமோ, ரதமோ, பாத அணியோ இல்லாமல் எப்படி ராவணனை தோற்கடிக்கப் போகிறீர்கள்? ராமபிரான் பதில் அளிக்கிறார்: நண்பனே, வெற்றி எனும் ரதத்திற்கு இரண்டு சக்கரங்கள், வீரமும் மனோதிடமும் சத்தியமும் ஒழுக்கமும் அதில் பறக்கும் கொடிகள். பலம், விவேகம், பொறுமை, பிறர் நலனில் நாட்டம் இவையெல்லாம் அந்த ரதத்தின் நான்கு குதிரைகள். கருணை, அனைவருடனும் சமத்துவ உணர்வு இவை ரதத்தின் கயிறு. தெய்வ சிந்தனை இந்த ரதத்தின் சாரதி, ஓட்டுனர். திருப்திதான் நான் ஏந்தும் வாள். அறிவுதான் வில். கலங்காத மனதுதான் அம்புறாத்தூணி, யம, நியமம் முதலிய ஒழுக்கங்களே நான் ஏந்தும் அம்புகள். குருமார்களையும் ஞானிகளையும் மதிப்பதுதான் எனது கவசம். இப்படிப்பட்ட ரதம் யாரிடம் இருக்கிறதோ அவரைத் தோற்கடிக்க எவராலும் முடியாது” இவ்வாறு ராமபிரான் விளக்கினார்.

இவ்வாறு எல்லா நற்பண்புகளையும் கொண்டவரால் உலகில் எல்லோரையும் வென்றெடுக்க முடியும் என ராமபிரான் தெளிவாக்குகிறார். மாநாட்டில் உரையாற்றிய வேத அறிஞர் ஸ்டீபன் மார்க் கூறினார்: தலைமை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை ராமாயணம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. நிஜமான தலைமை அமைந்தால் சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்ட முடியும் என்பதற்கு ராமராஜ்யம் முன்னுதாரணமாக விளங்குகிறது. அத்தகைய தலைமை சமுதாயத்தை எல்லா நன்மைகளும் பெறுவதற்கான திசையில் நடத்திச் செல்லும். அத்தகைய ஆட்சியாளனின் செல்வாக்கே மிக வியாபகமாக இருக்கும். அநியாயத்தை, குற்றச் செயலை, அநாகரீகத்தை கண்டால் உடனே அதற்கு முடிவுகட்டவேண்டும் என்பதை ராமாயணம் நமக்கு அறிவுறுத்துகிறது. அமையும் தலைமை மக்களுக்கு நல்லது செய்ய முடியும் கெட்டதும் செய்யமுடியும் என்பதற்கு முறையே ராமபிரானும் ராவணனும் உலகத்தில் இலக்கணங்களாக விளங்குகிறார்கள். ராமாயணம் காலத்திற்கு பொருந்தாததாக ஆகவே முடியாது. ஏனென்றால், ராமாயணம் எதார்த்தமான படிப்பினைகள் கொண்டது.”

தொன்மைக் கால பாரதத்தில் ராணுவம் குறித்த அறிவியல் எப்படி இருந்தது என்பதை ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.டி. பக்ஷி எடுத்துக் கூறினார். அயோத்யா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் அறங்காவலர் இந்திராணி ராமபிரசாத், மத்திய அமெரிக்க நாடுகளில் ராம்லீலா கொண்டாடப்படும் விதத்தை வர்ணித்தார். 1838லிருந்து 1917 வரையிலான காலகட்டத்தில் அங்கே குடியேறிய நம்முடைய முன்னோர்கள் அந்த நாடுகளில் ராமலீலா கொண்டாடுவதை துவக்கியதை அவர் நினைவூட்டினார். பாரத நாட்டில் நடைபெறும் ராமாயண நாடகங்களைப் போலத்தான் அங்கு ராம்லீலாவும் நடைபெறுகிறது என்றார் அவர்.

தாய்லாந்து தேசத்திலிருந்து வந்திருந்த அறிஞர்கள் குழு அனைவரையும் கவர்ந்தது. பாங்காக் நகரில் உள்ள தம்மசப்த் பல்கலைக் கழகத்திலுள்ள பாரத ஆய்வு மையத்தின் இயக்குனர் நோங்கு லுக்சான் தேப்சாலஸ்தி கூறினார்: தாய்லாந்தில் ராமாயணத்தை நாங்கள் ‘ராம கிங்’ என்கிறோம்.
ராமாயணம் எங்கள் நாட்டில் கலாச்சார இலக்கியமாகப் போற்றப்படுகிறது. சமுதாயத்திற்கு நல்வழிகாட்டும் நூலாக அது கருதப்படுகிறது. எல்லா வயதினரும் அங்கே ராம நாடகங்களைக் கண்டு ஆனந்தப்படுகிறார்கள். ‘கோன் ராமலீலா’ என்ற நாடகம் மிக உயர்ந்த தரத்திலான படைப்பு என்று கருதப்படுகிறது. தாய்லாந்து மன்னர் குடும்பத்தினர் அரசு முறை விருந்தினர்களுக்கு இந்த நாடகத்தை போட்டுக் காட்டுகிறார்கள். கோன் என்பது உண்மையில் ஒரு நாட்டிய நாடகம்.

இவ்வாறு ராமாயணம் தாய்லாந்து தேசத்தின் இலக்கியத்திலும் கலையிலும் முத்திரை பதித்துள்ளது. திரையில் விழும் நிழல்களைக் கொண்டு ராமாயணக் கதையை கூறும் தோல்பாவை கலை ‘நைங்கு யாயி’ எனப்படுகிறது. ‘நைங்கு ஆளுங்கு’ என்பது ராமாயணக் கதையைக் கூறும் பொம்மலாட்டக் கலை. இவ்வாறு ராமாயணம் குறித்து பல்வேறு கலைகள் அங்கே செழிக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளுக்காக உடை அலங்காரம், ஆபரணங்கள் இவையெல்லாம் கலை நுணுக்கத்தோடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படுகின்றன. ராமாயண சம்பவங்களை வைத்து திரைப்படங்கள் அங்கே வெளியாகின்றன. ஓவியங்கள் தீட்டுகிறார்கள். சிலைகள் வடிக்கிறார்கள். தாய்லாந்து தவிர கம்போடியா, பர்மா, லாவோஸ் முதலி மற்ற ஆசிய நாடுகளிலும் கலாச்சாரம், கலை, இலக்கியம் இவற்றை ராமாயணம் மிகுந்த ஆழமான விதத்தில் ஆட்கொள்கிறது.”

கலிபோர்னிய பல்கலைக் கழகப் பேராசிரியர் ராமதாஸ் லாம்ப் பேசும்போது, உலகில் பல நாடுகளில் பரவி வாழும் ஹிந்துக்கள் மிக அதிகம் பேர் ஹிந்தியில் துளசிதாசர் இயற்றிய ராமசரித மானஸ நூலை நன்றாக அறிந்துவைத்திருக்கிறார்கள். ஏனென்றால் ராமாயணம் வாயிலாக மிக அருமையான கருத்துக்களை பாமரனுக்கும் புரிகிற நடையில் சொல்லிச் சென்றிருக்கிறார் துளசிதாசர். எனவே சில இடங்களில் துளசிதாசரை வால்மீகி முனிவரின் அவதாரமாகவே போற்றுகிறார்கள். துளசிதாசரின் ராமாயணம் பாரத சமுதாயத்தை 500 ஆண்டுக் காலம் சிலிர்த்தெழச் செய்த பக்தி மரபின் மணி மகுடமாக விளங்குகிறது.”

அமெரிக்காவின் அயோவாவிலிருந்து வந்திருந்த மைக்கேல் ஸ்பென்பேல்டு கூறினார்: தர்மம் என்பதன் மிக நுட்பமான அம்சங்களையெல்லாம் ராம கதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ராமபிரானின் வாழ்க்கையை நாம் பிறர் சொல்லக் கேட்கும்போது, கேட்க கேட்க அறநெறி வாழ்க்கையின் அத்தியாவசியம் நமக்கு மேலும் மேலும் அழுத்தமாக புலனாகிறது. தர்மம் என்றால் கடமையை செய்வது மட்டுமல்ல, அப்படித்தான் மேற்கு நாடுகளில் புரிந்துகொள்கிறார்கள். தர்மம் என்றால் படைப்பு முழுவதையுமே தாங்கி நிறுத்தும் ஒரு சக்தி. அது ஞானத்தின் மிக உன்னத நிலை வரை நம்மை அழைத்துச் செல்லும். தர்மத்தை எந்த அளவுக்கு நாம் சார்ந்து நிற்கிறோமோ அந்த அளவுக்கு நாம் படைப்பின், இயற்கையின் சகஜமான பிரவாகத்தில் திளைப்பவர்கள் ஆவோம்.”

இன்று உணவே விஷமயமாகிறது. முன் பின் யோசியாத தொழில்நுட்பம், தீமை செய்யும் ஆயுதங்கள், துஷ்பிரயோகம் செய்யப்படும் ஊடகம் இவை எல்லாமாகச் சேர்ந்து உலகத்தை மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கவைத்து வருகின்றன. இந்த ராவணனுக்கு எதிராக கல்வி, பொருளாதாரம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு போராடுவது அவசியம். இந்த அறப்போராட்டத்தில் உலகிற்கு பாரதம் தலைமை தாங்க வேண்டும்”
தென்னாப்பிரிக்க ஹிந்தி கல்வி சங்கத்தின் தலைவர் டாக்டர் உஷா தேவி பேசும்போது, 150 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய தொழிலாளர்களால் பாடப்பட்டு வந்த ராமாயண பஜனை பாடல்கள், ராம கதை இவற்றின் மூலம் தென்னாப்பிரிக்காவில் ராமாயணம் வேரூன்றி உள்ளது. இன்று பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி நூல்கள், கருத்தரங்குகள், கலை, ஊடகம் இவற்றின் வெவ்வேறு வடிவங்களில் ராமாயணம் பரிமளிக்கிறது. கம்பீரமான ராமர் கோயில்கூட அங்கே நிர்மாணிக்கப்பட்டுவிட்டது” என்றார்.

உலக ராமாயண மாநாட்டின் புரவலர் சுவாமி சத்தியமித்ரானந்த கிரி அருளுரை வழங்கிப்பேசுகையில், ராமனின் கதை உலகு தழுவிய மானுடத்திற்கு வெகுசிறப்பான முறையில் கைதூக்கிவிட்டு கரையேற்றும் ஒரு ஆதாரம் என்றார். பகவான் ராமபிரான் பாரதத்திற்கே அடையாளம். பாரதத்தின் ஜீவன். அனேகமாக பெரும்பாலான நாடுகள், ராமனையும் ராம கதையையும் தெரிந்து வைத்திருப்பது மட்டுமல்ல, வாழ்க்கையில் நல்ல நல்ல பண்புகளை கடைபிடிப்பதற்காக ராமாயணத்திலிருந்து ஊக்கம் பெற்று வருகிறார்கள்”
மாநாட்டில் பல விஞ்ஞானிகளும் உரையாற்றினார்கள். பாரதிய தத்துவ ஞானம் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக விஞ்ஞானிகளுக்கு மிகவும் ஈர்ப்புள்ளதாக விளங்கி வருகிறது.

ஐன்ஸ்டீன் தொடங்கி எத்தனையோ பெரிய பெரிய விஞ்ஞானிகள் கூறிய கருத்துக்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். குவாண்டம் பீல்டு தத்துவம், இயற்பியல் போன்ற விஷயங்களில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ள விஞ்ஞானி பேராசிரியர் டாக்டர் டேவிட் சார்ப் மாநாட்டில் பேசும் போது கூறினார்: புற உலகில் நடக்கும் சம்பவங்களாக ராமாயணக் கதை வர்ணிக்கப்பட்டிருந்தாலும் காலத்தை வென்ற இந்த உள் உலகம் ஒன்று உண்டு என்பதை யார் புரிந்துகொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் ராமாயணத்தை முழுமையாக உணர்ந்துகொள்ள முடிகிறது. எனவே ராமாயணம் என்றென்றும் இடப் பொருத்தம், காலப் பொருத்தம் வாய்ந்தது.”
உலகம் முழுவதும் நன்றாக, நலமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினால்தான் அவர்களுக்கு பாரதத்தின் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டதாக பல பிரதிநிதிகள் கூறுகிறார்கள். கனடா நாட்டில் வேத விஞ்ஞானம், கலை அகாடமி நிறுவனர் ஜாபிரி ஆர்ம்ஸ்ட்ராங், தற்போது கவேந்திர ரிஷி என்று தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவர் கூறுகிறார்: பூமியையும் மனித காப்பாற்றுவதற்காக நான் ஹிந்துத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளேன்.” மாநாட்டில் பேசும்போது அவர் கூறினார்: அறநெறி இல்லாத பலம் அரக்கத்தனமாகிவிடும். நவீன விஞ்ஞானம் தெரிந்தோ தெரியாமலோ மனிதனை அரக்கனாக மாற்றி வருகிறது. விளைவாக உலகம் சர்வநாசத்தின் விளிம்புக்கு சென்றுவிட்டது. உலகம் முழுவதையும் நாம் இலங்கையாக மாற்றிவருகிறோமோ என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் எங்கு பார்த்தாலும் ராவணத்தனம்தான் தென்படுகிறது. எனவே இதற்கு எதிராக ஒரு சாத்வீகமான போராட்டம் அவசியம். ”

(மாநாட்டின் ஏற்பாடுகளில் பங்காற்றிய சில அமைப்புகள்: இந்திய கலாச்சார தொடர்பு மையம், பாரத அரசின் வெளியுறவுத் துறை, இந்திரா காந்தி தேசிய கலை மையம், வேர்ல்டு அசோஷியன் பார் வைதிக் ஸ்டடீஸ், டெக்சாஸ் அமெரிக்கா.)

இந்த மாநாட்டின் போது தாய்லாந்தின் சுலாவ் லங்கர்ன் பல்கலைக்கழகமும் மத்திய பிரதேசத்தின் ராணி துர்காவதி பல்கலைக் கழகுமும் இணைந்து இந்திய தாய்லாந்து ராமாயணப் பேரவை நிறுவப்பட்டு தொடர்ந்து பரஸ்பர கல்வி சம்பந்தமான தொடர்புகளை நிலைநாட்டி வரும். மாநாட்டின் போது மிக நேர்த்தியான ராமாயண கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கதக் நடனம் உள்ளிட்ட பல பாரம்பரிய நடன வடிவங்களில் ராமாயண கதை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ராம பஜனை நிகழ்ச்சியை பிரபல பஜனை பாடகர் உஸ்மான் மீர் வழங்கினார். மூன்று நாட்களும் ஜபல்பூர் மக்கள் ராம பக்தியில் திளைத்தார்கள்.

மாநாடு முடிந்த பிறகு அமெரிக்க திரும்பிக்கொண்டிருந்த மைக்கெல் ஸ்டெம்ப் பீல்டு மன நிறைவுபெற்றவராக கூறினார்: நான் எதிர்பார்த்ததை விட மிக அற்புதமாக அமைந்துவிட்டது. கல்வியாளர்கள் கூடிப் பேசும் கருத்தரங்கு என்று நினைத்து இங்கு வந்தேன். ஆனால் நடந்த நிகழ்ச்சி அதைவிட எத்தனையோ மடங்கு விசாலமானது. கலாச்சார, சமுதாய கருத்துக்கள் பரிமாறப்பட்டன; கலையின் வெளிப்பாடு ஊக்கம் அளித்தது. மாநாடு ராம பக்தர்களின் சங்கமமாகவும் திகழ்ந்தது.”