ராமர் கோயில் மத்தியஸ்தம் அதாவது எட்டு வாரங்கள்!

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் விஷயமாக உச்சநீதிமன்றம் ஒரு மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்துள்ளது. 8 வாரங்களில் பேச்சு வார்த்தையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே 2010 செப்டம்பரில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று பாகங்களாக பிரித்து வழங்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. சரி, சமாதானமாக மூன்று பேரும் பிரித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு இது வெறும் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கல்ல.

பாரத நாட்டின்மீது படையெடுத்த மிலேச்சர்கள் ஆயிரக்கணக்கான ஹிந்து கோயில்களை இடித்து தரைமட்டமாக்கி, அதன் அஸ்திவாரத்திலேயே மசூதிகளைக் கட்டினார்கள்.

இதில் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் சோமநாதபுரம் சிவன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், மதுரா ஸ்ரீகிருஷ்ணர் கோயில், அயோத்தி ஸ்ரீராமர் கோயில்.

சுதந்திரம் பெற்றவுடன் அன்றைய துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் சோமநாதபுரம் சென்று கடலில் இறங்கி சங்கல்பம் செய்தார். சோமநாதபுரத்தில் உள்ள சிவன் கோயில் கஜினி முகம்மதுவால் இடிக்கப்பட்டு மசூதியாக உள்ளதை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் பிரம்மாண்டமாக சோமநாதபுரம் கோயிலை கட்டுவேன் என்று சபதமேற்றார். நினைத்ததை செய்தும் காட்டினார். ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் சோமநாதபுரம் சிவன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

நமது துரதிர்ஷ்டம் அந்தக் கோயில் கும்பாபிஷேகத்தைப் பார்க்காமலேயே படேல் காலமானார். அவர் மட்டும் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் என்றோ அயோத்தி, காசி, மதுரா கோயில்களை மீட்டெடுத்திருப்போம்.

மத்தியஸ்தர்கள் குழுவின் தீர்ப்பு எப்படி வரும் என்று தெரியாது. ஒன்று மட்டும் நிச்சயம். அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்டவேண்டும் என்பது 110 கோடி ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கை.