மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்

மனயங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன் எனும்
எம்.எஸ்.விஸ்வநாதன், தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற முன்னணி இசையமைப்பாளர் ஆவார். கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் `எலப்புள்ளி’ என்ற கிராமத்தில், 1928ம் ஆண்டு, ஜூன் மாதம் 24ம் தேதி சுப்பிரமணியன்- − நாராயண குட்டியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். 1953ம் ஆண்டில் வெளிவந்த எம்.ஜி.ஆரின் `ஜெனோவா’ திரைப்படத்திற்கு முதன் முதலாக இசையமைத்தார். 1,500க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன், தனது தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டில் வளர்ந்தார். பள்ளி சென்று படிக்காத இவர், இசையின் மீது கொண்ட நாட்டத்தால் கர்நாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று, 13வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார். இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் இசைக்குழுவில் ஆர்மோனியத்தையும், டி.கே. ராமமூர்த்தி வயலின் வாசிப்பவராகவும் பணிபுரிந்தார்.
சி.ஆர்.சுப்புராமனுடைய திடீர் மறைவால் முழுமை பெறாமல் இருந்த `தேவதாஸ்’, `சண்டிராணி’, `மணமகள்’ போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநானும், ராமமூர்த்தியும் இணைந்து முடித்துக் கொடுத்தார்கள். `தேவதாஸ்’ (தமிழ் & தெலுங்கு), `சண்டிராணி’ (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றதால், ஹிந்தியில் சங்கர்-−ஜெய்கிஷன் என்ற பெயரில் இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல், தமிழில் விஸ்வநாதன்- − ராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக `பணம்’ என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள். `ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள்.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், கமல், ரஜினி ஆகியோர் நடித்த பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1995-ல், சத்யராஜ் நடித்த `எங்கிருந்தோ வந்தான்’ என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ் பாட்டு’, `செந்தமிழ்ச்செல்வன்’ என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். 1963ம் ஆண்டு, ஜூன் மாதம் 16-ம் தேதி `மெட்ராஸ் திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி’ சார்பில் நடைபெற்ற விழாவில், சிவாஜி கணேசனால் விஸ்வநாதன் −- ராமமூர்த்திக்கு `மெல்லிசை மன்னர்கள்’ என்று பட்டம் வழங்கப்பட்டது.
`கண்ணகி’, `காதல் மன்னன்’, `காதலா காதலா’ போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ.பீம்சிங், கிருஷ்ணன்- பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் ஆகிய இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழக அரசின் நிகழ்வுகளில் தொடக்கத்தில் பாடப்படும் தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு மோகன இராகத்தில் இசையமைத்தவர் விஸ்வநாதன். தனது இசையால் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய எம்.எஸ். விஸ்வநாதன், 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி காலமானார். அவர் இசையமைத்த மெல்லிசை பாடல்கள் இருக்கும் வரை அவரது நினைவுகள் நமக்கு என்றென்றும் அவரை நினைவூட்டும்.