பொதுவுடைமையின் காவலர்கள் என்று கூறிக் கொள்ளும் மார்க்சிஸ்டுகள் பொருளாதார ரீதியான அநீதிகளையும், அட்டூழியங்களையும் செய்யத் தவறாதவர்கள் என்பது அம்பலமாகி வருகிறது. கேரளத்தில் 10 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. பினராயி விஜயன் முதலமைச்சராக செயல்பட்டார். இப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் நேர்மையைப் பற்றி பேச வேண்டுமானால், அதற்கான குறைந்தபட்ச தகுதியையாவது கொண்டிருக்க வேண்டும். ஆனால், பினராயி விஜயன் விவகாரத்தில் இது பொய்த்துப் போய் விட்டது.
மே மாதம் 27ம் தேதி, திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகத்துக்கு வெளியே ரகளை நடைபெற்றது. அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை மார்க்சிஸ்ட் குண்டர்கள் தாக்கினார்கள். முதல் கட்டமாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்து மற்றொருவர் கைது செய்யப்பட்டார். 28ம் தேதி மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் 242 வங்கிக் கணக்குகளை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளது கேரளம் முழுவதும் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய 10 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். கொச்சி மினரல்ஸ் ரூட்டைல் லிமிட்டெட் இயக்குனர்கள் எஸ்.என்.சசிதரன் கர்த்தா, சரண் எஸ்.கர்த்தா, முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா அவரது கம்பெனி எக்ஸ்லாஜிக் சொல்யூசன்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, வீணாவின் 242 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ரூ.18.36 கோடி முடக்கப்பட்டதால், பெரும் அதிர்வலைகள் எழுந்துள்ளன.
அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பயணித்த 3 வாகனங்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். டிரைவர் ஒருவரின் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா மழுப்பலாக பதில் அளித்துள்ளார். எங்களுக்கு முதல் தகவல் வரவில்லை. தகவல் வருவதற்குள் காரியம் எல்லை மீறி விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் நாங்கள் எந்த விதிமுறைகளை பின்பற்றுகிறோமோ, அதே விதிமுறைகளைதான் திருவனந்தபுரத்திலும் பின்பற்றினோம். ஆனால், கேரளத்தில் எங்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை. இதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சியினர், பழிவாங்கல் நடவடிக்கை என்று தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இதில் பழிவாங்களுக்கு இடமில்லை. அமலாக்கத்துறை வழக்கமாக மேற்கொள்கின்ற நடவடிக்கைதான். அமலாக்கத்துறை மீது தாக்குதல் நடத்தினால், அவர்களால் செம்மையான முறையில் பணி செய்ய முடியாமல் போய்விடும். எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கோவிந்தன், கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் வற்புறுத்தியுள்ளார்.
கட்டுரையாளர் : செய்தியாளர் – டி. சதீஷன்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி