இந்தியாவை கோபப்படுத்திய மலேசிய பிரதமரின் காஷ்மீர் கருத்துக்களால் மலேசியாவில் இருந்து பாமாயில்-பிற பொருட்கள் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்துக்கொள்ள முடிவு செய்து உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
நியூயார்க்கில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ஜம்மு-காஷ்மீர் “படையெடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது” என்றும், இந்தியாவின் நடவடிக்கை “தவறானது” என்றும் கூறினார்.
இந்தியாவின் வெளிவிவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் விவகாரம் முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்றும், மலேசியா இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் “இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்றும் கூறி இருந்தார்.
மலேசிய பிரதமரின் இந்த பேச்சு இந்தியாவை கோபப்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து பாமாயில் உள்ளிட்ட மலேசியாவிலிருந்து சில பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த இந்தியா பரிசீலித்து வருவதாக அரசு மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா பாமாயில் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த திட்டமிடப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஒரு அரசு வட்டாரம் மற்றும் ஒரு தொழில்துறை வட்டார தகவல் பிற பொருட்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
உலகிலேயே இந்தியாதான் மலேசியாவில் இருந்து அதிக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. தற்போது இந்தோனேசியா, அர்ஜென்டினா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்து சமையல் எண்ணெயை அதிக அளவு இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.