ஹஜ்ஜிக்கு லிபியா, துனீசியா எதிர்ப்பு ஏன்

உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் சவூதியில் உள்ள மெக்காவிற்கு குறிப்பிட்ட மாதங்களில் போகும் புனிதப் பயணம் ஹஜ் என்பது எல்லோரும் அறிந்ததே. உம்ரா என்பது முஸ்லிம்கள் வருடத்தில் எந்த நாளிலும் அவரவர் வசதிக்குத் தக்கபடி மெக்காவிற்கு மேற்கொள்ளும் பயணம்.
இரண்டு மாதங்களுக்கு முன் லிபியாவின் பிரதான முப்தி (முஸ்லிம் சிவில் சட்ட நீதி பரிபாலகர்) ஒரு பத்வா விதித்திருக்கிறார். என்ன தடை என்ன காரணம்? முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்கு போகும்போது எல்லாம் சவுதி நாட்டுக்கு கட்டணம் – வரி என்று கட்டுகிறோம். அவை இத்தனையும் ஏமன் போன்ற நாட்டு வழியாக சவுதிக்குள் நுழையும் ஆப்ரிக்க முஸ்லிம்களையே அழிப்பதற்குத்தான் செலவாகிறது. எனவே மெக்காவிற்கு பயணம் மேற்கொள்ள ஆகும் பணத்தை கொண்டு லிபியாவில் வாழும் ஏழை முஸ்லிம்களின் நல வாழ்விற்கு செலவிடலாம். அப்படிச் செய்வது அல்லாவிற்கு இன்னும் மகிழ்ச்சி அளிக்கும் என்கிறார். இதேபோல முன்னரே லிபியாவின் அண்டை நாடான துனீசியாவின் முஸ்லிம் மதத் தலைவர்களும் அந்நாட்டு முஸ்லிம்களுக்கு இதே காரணங்களுக்காக பத்வா விதித்திருக்கிறார்கள்.
(இன்குலாப் இதழிலிருந்து)
பலூசிஸ்தான் விடுதலை படை மீது தடை:
பலூசிஸ்தான் விடுதலை படை என்ற அமைப்பு அந்நாட்டில் பணிபுரியும் சீன பொறியாளர் மீது தாக்குதல் நடத்த மே 2018ல் முயற்சி செய்தது. பின்னர் நவம்பர் 2018 ல் ஒரு சீன வணிக நிறுவனத்தின் மீதும் தாக்குதல் நடத்தியது. இவை போன்ற அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்காக அமெரிக்க அரசு அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்துள்ளது.
(ரோஜ்நாமா ராஷ்ட்ரீய சஹாரா இதழிலிருந்து)
இளைய தலைமுறைக்கு மதக் கல்வி:
‘இன்றைய தலைமுறை இந்திய முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் மதத்தைப் பற்றி அறிய ஆர்வம் காட்டுவதில்லை. பாராமுகம் காட்டுகிறார்கள். தங்கள் மார்க்கத்திலிருந்து விலகிப் போகிறார்கள்’ என்று நம் நாட்டின் மிகப்பெரிய முஸ்லிம் அமைப்பான ஜமாயத் உலேமா ஹிந்த் கருதுகிறது. இந்த போக்கை மாற்ற தொடர்ந்து விழிப்புணர்வு இயக்கம் நடத்தவும் விரைவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மதக்கல்வி மாநாடு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(ஹமாரா சமாஜ் இதழிலிருந்து)