டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தன் மீதான கைது நடவடிக்கை சட்டவிரோதம் 67607 கூறியிருந்தார். இதற்கு அமலாக்கத் துறை தாக்கல் செய்த 734 பக்க பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முக்கிய சதிகாரர் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால். அவர் தனது அமைச்சர்கள், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுடன் சேர்ந்து, தாங்கள் அளித்த சலுகைக்கு கைமாறாக மதுபான தொழில் செய்பவர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியுள்ளார். நிதி மோசடி தடுப்பு சட்டத்தில் சாதாரண நபரை கைது செய்வதற்கும் முதல்வரை கைது செய்வதற்கும் வெவ்வேறான விதிமுறை இல்லை. முதல்வர் என்ற காரணத்தினால் அவர் சிறப்பு சலுகை கோருவதை ஏற்க முடியாது. அவரை கைது செய்தது, நியாயமான தேர்தல் என்ற அடிப்படை அமைப்பு விதி முறைக்கு எதிரானது அல்ல. தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும் என கேஜ்ரிவால் கூறும் காரணத்தை ஏற்றுக்கொண்டால், குற்றவாளிகளாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டிய தேவை ஏற்படும்.
அர்விந்த் கேஜ்ரிவால் மீதான குற்றத்தில் போதிய ஆவணங்கள் விசாரணை அதிகாரியிடம் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். கோவா தேர்தல் பிரச்சாரத்தில் ஆம் ஆத்மி கட்சி செய்த குற்றத்தில் கேஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார். அவருக்கு 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் விசாரணை அதிகாரி முன் ஆஜராகவில்லை. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.