நாக்பூரில் ஜூன் 5ம் தேதி 2ம் ஆண்டு கார்யகர்த்தா விகாஸ் வர்க்காவில் முன்னாள் மத்திய அமைச்சரும், வனவாசிகள் தலைவருமான அரவிந்த் நேதம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்காக, முதற்கண் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன் தலைவர் டாக்டர் மோகன் பாகவத்ஜிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததை நான் மிகப்பெரிய கெளரவமாக கருதுகிறேன். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்துடன் நெருங்கி பழகுகின்ற வாய்ப்பு இதற்கு முன் எனக்கு கிடைத்ததில்லை. ஆனால் கடந்த 2 நாட்களாக எனக்கு இத்தகைய அரிய, சீரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. சங்கத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், பணிகளையும், சேவைகளையும் நன்கு உணர்ந்து கொள்கின்ற வாய்ப்பு கிடைத்துள்ளதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
இந்த வருடம் சங்கத்தின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம். நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டுக்காகவும், சமூக நல்லிணக்கத்துக்காகவும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தைப் போல வேறு எந்த அமைப்பும் பாடுபட்டதில்லை என்று என்னால் திட்டவட்டமாக கூற முடிகிறது. இது வெறும் வாய் வார்த்தையல்ல. அனைத்து அம்சங்களையும் உள்வாங்கிக் கொண்ட பிறகே இதை வெளிப்படையாக கூறுகிறேன்.
நான் தீவிர அரசியலிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே விலகி விட்டேன். நான் தற்போது சமூக சேவகராக மட்டுமே இயங்கி வருகிறேன். ஜனஜாதி சமாஜ் கடுமையான காலகட்டத்தை சவாலான தருணத்தை எதிர்நோக்கியுள்ளது. வனவாசிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
வனவாசிகளிடையே மதமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த அரசும் இந்த பிரச்சினையை மிகவும் உக்கிரமானது என்று எடுத்துக் கொண்டு உரிய கவனத்தை செலுத்தவில்லை. அரசுகள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றன. கடந்த அரசின் மீது பழி போட்டு நிகழ்கால அரசு தப்பித்துக் கொள்ளும் தந்திர உபாயத்தை கையாள்கிறது. ஆனால் மதமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் நெடுங்காலமாக மதமாற்றத்துக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறது. முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. சங்கத்தின் செயல்பாடுகள் முன்னோடியாக உள்ளதை பதிவு செய்யாமல் இருக்க முடியாது. இதன் அடிச்சுவட்டில் மற்ற அமைப்புகளும் செயல்பட முன்வர வேண்டும்.
நான் பஸ்தார் பகுதியைச் சேர்ந்தவன். இங்கு மதமாற்றமும், நக்சலிஸமும் இரண்டு பெரும் பிரச்சினைகளாக உள்ளன. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமும், ஜனஜாதி சமூகமும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் இந்த 2 பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனஜாதி சமூகத்தின் ஒரு நிகழ்ச்சிக்கு சங்க கார்யகர்த்தாக்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தேன். இதை மற்றவர்கள் எதிர்த்தார்கள். ஆனால் நான் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தேன். சங்க கார்யகர்த்தர்கள், தவறான பதிவுகளை தகர்த்தெறியும் வகையில் உண்மைகளை எடுத்துரைத்து தெளிவாக விளக்கம் அளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சங்கம் மீதான பார்வையில் பரவலாக மாற்றம் ஏற்பட்டது. மதமாற்ற தடுப்பு நடவடிக்கைக்கு சங்கம் பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. இது நிச்சயமாக நனவாகும்.
நக்சலிஸம் சமூக, பொருளாதார பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினையில் சங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வனவாசிகள் பிரிட்டிஷாரை எதிர்த்து நீர், வனம், நிலம் ஆகியவற்றுக்காக சுமார் 150 ஆண்டுகள் போராடினார்கள். ஆனால் இப்போதும் நீர், வனம், நிலத்துக்கு ஏற்பட்ட ஆபத்து முற்றிலுமாக நீங்கி விடவில்லை. நான் வளர்ச்சிக்கோ, முன்னேற்றத்துக்கோ எதிரானவன் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் வனவாசிகள் பாதிப்புக்கு இலக்காகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
நிலத்தை வனவாசிகளிடமிருந்து குத்தகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். சுரங்கங்களை மூடிய பிறகு நிலத்தை மீண்டும் வனவாசிகளிடமே ஒப்படைத்து விடுங்கள். தொழிலாளி, உடைமையாளராக மாற வேண்டுமே தவிர, உடைமையாளர் தொழிலாளியாக மாறக்கூடாது என்பதுதான் எனது கருத்தின் மைய அம்சமாகும். சங்கத்தின் ஒத்துழைப்பு வாயிலாகவே மதமாற்றத்துக்கும், நக்சலிஸத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதில் சங்கம் ஏற்கெனவே உரிய அக்கறை காட்டி வருகிறது. இதை மேலும் தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வனவாசிகளுக்கு தனி மதம் என பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒரு தரப்பினருடன் மேலோங்கி உள்ளது. இதில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. கருத்திணக்கத்தின் அடிப்படையில் முடிவை எட்டுவதே விவேகமானது. விரும்பத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு அளித்தமைக்காக மீண்டும் நன்றி கூறி உரையை நிறைவு செய்கிறேன்.
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி