ஹிந்து வலிமையே ஹிந்துவின் கவசம்

 

பழங்குடி மக்கள் (வனவாசி) பகுதிகளில் சங்கம் எவ்வாறு வளர்ந்து வருகிறது?

வனப்பகுதிகளில், நமது பழங்குடி சகோதரர்களுக்கு அதிகாரம் அளிப்பதும், சேவை செய்வதும் நமது முதல் பணி. பின்னர் அவர்களின் நலன்களைப் பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும் என்பது சேர்ந்து கொண்டது. தற்போது நமது பழங்குடி சமூகம் வேறு சில தலைமைகளின் கீழ் உள்ளது. பழங்குடி சமூகத்திற்குள்ளேயே ஒரு தலைமை உருவாக வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். பழங்குடி சமூகத்தைப் பற்றி அக்கறை கொண்டு, அந்த சமூகம் முழு தேசிய வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதைப் புரிந்துகொண்டு அதை அந்தத் தலைமை  முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். இந்தப் பகுதிகளில் பணிபுரியும் ஸ்வயம்சேவகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பழங்குடி என்றால் என்ன, அவர்களின் வேர்கள் எதில், பழங்குடி சமூகத்திலிருந்து தோன்றிய மாமனிதர்கள், சுதந்திரப் போராட்டத்திற்குப் பங்களித்த பழங்குடி சமூகத்தின் ஹீரோக்கள் இவை பற்றியெல்லாம்  கற்பித்து படிப்படியாக, தேசியக் குரலில் பேசும் / பங்களிக்கும் கார்யகர்த்தாக்களும் அவர்களின் தலைமையும் அங்கு உருவாகிட வேண்டும் என்பதற்கான முயற்சி நடக்கிறது. வடகிழக்கிலும் பிற பழங்குடிப் பகுதிகளிலும் ஷாகாக்கள் அதிகரித்து வருகின்றன.

அண்டை நாடுகளில் ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், அவர்கள் மீது வன்முறை நடத்தப்படுகிறது. உலகில் மனித உரிமைகள் பற்றி கவலைப்படுபவர்கள் அதேபோல ஹிந்துக்கள் பற்றி கவலைப் படுகிறார்களா? இந்தப் பிரச்சினை சங்கத்தின் பிரதிநிதி சபையிலும் எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

ஹிந்துக்கள் மிகவும் வலிமையாக மாறும்போது அவர்களைப் பற்றி அக்கறை ஏற்படும். ஹிந்து சமுதாயமும் பாரதமும் ஒன்றி இருப்பதால், மிகச் சிறந்த ஹிந்து சமுதாயம் பாரதத்தை மிகச் சிறந்த நாடாக மாற்றும். பாரதத்தில் தங்களை ஹிந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளாதவர்களைக் கூட அது தன்னுடன் அழைத்துச் செல்லும்; ஏனெனில் அவர்களும் ஹிந்துக்களாக இருந்தவர்கள்தான். பாரத ஹிந்து சமுதாயம் வலிமை வாய்ந்ததாகிவிட்டால் உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் தானாகவே வலிமை பெறுவார்கள். இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, ஆனால் முழுமையடையவில்லை. அந்த நிலைமை படிப்படியாக வருகிறது. இந்த முறை, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான அட்டூழியங்களுக்கு எதிரான சீற்றம் முன்பு எப்போதும் கண்டிராத அளவு அதிகமாக, வெளிப்படையாக காட்டப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், அங்குள்ள ஹிந்துக்கள் ‘ஓடிப்போக மாட்டோம், இங்கேயே தங்கி எங்கள் உரிமைகளைப் பெறுவோம்’ என்றும் கூறியுள்ளனர். இப்போது ஹிந்து சமுதாயத்தின்  உள் வலிமை அதிகரித்து வருகிறது. ஒரு வகையில் ஒருங்கிணைப்பு  வளர்ந்து வருகிறது, அதன் விளைவு  தானாகவே தெரிய வரும். அதுவரை நாம் அதற்காகப் போராட வேண்டியிருக்கும். உலகில் எங்கெல்லாம் ஹிந்துக்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஹிந்து அமைப்பு என்ற முறையில், நமது வரம்புக்கு உட்பட்டு அவர்களுக்காக முடிந்த அனைத்தையும் செய்வோம், சங்கம் அதற்காகத்தான் இருக்கிறது. ‘ஹிந்து தர்மம், ஹிந்து கலாச்சாரம் ஹிந்து சமுதாயம் ஆகியவற்றை பாதுகாத்து’, நாட்டின் முழுமையான வளர்ச்சியைக் கொண்டுவருவேன் என்பதே ஸ்வயம்சேவகரின் பிரதிக்ஞை.

உலக அரங்கில் ராணுவ வல்லமை, தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஆற்றல் ஆகியவை தமக்கே உரிய முக்கியத்துவம் கொண்டுள்ளன. இதைப் பற்றி சங்கம் என்ன நினைக்கிறது!

நாம் சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும். சங்கப் பிரார்த்தனையின் வரியே –அஜய்யாம் ச விஸ்வஸ்ய தேஹீச சக்திம்என்பதுதான். யாராலும் வெல்ல முடியாத அளவுக்கு நமக்கு வலிமை இருக்க வேண்டும். நம் சொந்த பலம்தான் உண்மையான  பலம். நாம் யாரையும் பாதுகாப்பிற்காகச் சார்ந்திருக்கக் கூடாது. நமது பாதுகாப்பை நாமே உறுதி  செய்ய வேண்டும், ‘யாரும் நம்மைத் தோற்கடிக்க முடியாது; முழு உலகமும் சேர்ந்து நம்மைத் தோற்கடிக்க முடியாது’ என்னும் அளவுக்கு சக்திவாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் உலகில் சில தீய மனிதர்கள் இயற்கையிலேயே ஆக்ரோஷமானவர்கள். நல்லவர் தனது நன்நடத்தையால் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதில்லை. நல்லவர் வல்லவராகவும் இருக்க வேண்டும். பலம் மட்டுமே என்றால் அது திசையற்றதாக மாறி வன்முறைக்கு வழிவகுக்கும். அதனால்தான் பலத்துடன் பண்பும் தேவைப்படுகிறது. நாம் இவ்விரண்டையும் போற்ற வேண்டும். பாரதம் வெல்லப்பட முடியாததாகிட வேண்டும். பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்கிருதாம்(நல்லோரைக் காத்திட தீயோரை வீழ்த்திட) என்னும்படியான சக்தி வேண்டும். எந்த தீர்வும் வேலை செய்யவில்லை என்றால், தீமையை பலத்தால் அழிக்க வேண்டியிருக்கும். ஆனால் நன்நடத்தை சுபாவத்தில் கொண்டிருப்பவர் என்றால் அவர் ராவணனை அழித்து, விபீஷணனை அவருக்குப் பதிலாக அரசனாக்கி, திரும்பி வருவார். உலக வணிகத்தின் மீது நமது ஆதிக்கம் வியாபிக்க வேண்டும் என்பதற்காக இதையெல்லாம் செய்யவில்லை. அனைவரும் ஆரோக்கியமாக திறன் வாய்ந்தவர்களாக வாழவேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் செய்கிறோம். நமது எல்லைகள் முழுவதிலும் தீய சக்திகள் தரும் தீங்கை அனுபவித்து வருகிறோம் என்பதால் நாம் சக்தி வாய்ந்தவர்களாகியே தீர வேண்டும்.

பாரதம் மொழி, கலாச்சாரம், மதம் ஆகியவற்றால் பன்முகத் தன்மை கொண்டது. இதை மனதில் கொண்டு, சங்கம் எவ்வாறு அனைவரையும் அரவணைக்கும் தன்மையை ஊக்குவிக்கிறது?

சங்கத்திற்கு வந்து பாருங்களேன். பல்வேறு மொழிகள், வழிபாடுகள், சமயங்களைச் சேர்ந்த மக்கள் சங்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். சங்கப் பாடல்கள் ஹிந்தியில் மட்டுமல்ல. மாறாக, பல மொழிகளிலும் உண்டு. எல்லா மொழிகளிலும் சங்கப் பாடல்களைப் பாடும் பாடகர்கள், பாடல்களை இயற்றும் கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளனர். ஆயினும்கூட, சங்க சிக்ஷா வர்கத்தில் (பண்புப் பயிற்சி வகுப்பில்) கொடுக்கப்படும் மூன்று பாடல்களும் பாரதம் முழுவதிலும் எல்லா இடங்களிலும் அனைவராலும் பாடப்படுகின்றன. அனைத்து மக்களும் அவரவர் தனித்துவத்தைக் கட்டிக் காத்தபடி முன்னேறிச் செல்கிறார்கள்; அதே நேரத்தில் தாங்கள் சார்ந்துள்ள தேசியத்தின் கௌரவத்தையும் முழு சமுதாயமும் ஒன்றே என்னும் உணர்வையும் பாதுகாத்து வருகின்றனர். இதுதான் சங்கம். நாம் வழங்குவது, இவ்வளவு பன்முகத்தன்மை நிறைந்த சமுதாயத்தை ஒன்றிணைக்கும் இணைப்பு இழையை மட்டுமே.

சங்கம் சமூகங்களிடையே நல்லிணக்கம் பற்றிப் பேசுகிறது, அதற்காகவும் பாடுபடுகிறது. ஆனால் சமத்துவம் பற்றிப் பேசுபவர்கள் சிலர் உண்டு. இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சமத்துவம் என்பது பொருளாதார, அரசியல் ரீதியானது, சமுதாயத்தில் சமத்துவம் இருக்க வேண்டும். இல்லையெனில் அவற்றுக்கு எந்த அர்த்தமும் இருக்காது. சகோதரத்துவ உணர்வுதான் சமரசம். சுதந்திரம் சமத்துவம் இரண்டிற்கும் அடிப்படை சகோதரத்துவ உணர்வு. சமத்துவம் இல்லாத சுதந்திரம் தயக்கத்தைக் கொண்டு வருகிறது, சகோதரத்துவத்தின் அடிப்படையில்தான் சுதந்திரம் நிலைத்திருக்க முடியும். இந்த சகோதரத்துவம் என்பதுதான் நல்லிணக்கம். அதுதான் சமத்துவத்திற்கான முன் நிபந்தனை. சாதியம், தீண்டாமை இவற்றுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகும், சமத்துவமின்மை நீங்கவில்லை, ஏனெனில் அது ஆழ்மனதில் குடிபுகுந்திருக்கிறது. அதை மனதிலிருந்து அகற்ற வேண்டும். ‘எல்லோரும் நம்முடையவர்கள், எனவே நாம் அனைவரும் சமம்’ என்பதை ஏற்க வேண்டும். பார்ப்பதற்கு நாம் ஒரே மாதிரியானவர்களல்ல என்றாலும், நாம் ஒருவருக்கொருவர் சொந்தமானவர்கள். நாம் உறவால் பிணைக்கப்பட்டுள்ளோம், இதையே நல்லிணக்கம் என்கிறோம். அன்பும் சகோதரத்துவ உணர்வும்தான் நல்லிணக்கம் என்கிறோம்.

சங்கத்தில் பெண்களின் பங்கேற்பு குறித்து அடிக்கடி கேள்விகள் எழுகின்றன. அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

பெண்கள் மத்தியில் ஆளுமை மேம்பாட்டு / சமுதாய ஒருங்கிணைப்புப் பணிகள் ராஷ்ட்ர சேவிகா சமிதி வாயிலாக மட்டுமே நடைபெறும் என்று சங்கத்தின் ஆரம்ப நாட்களில், 1933 வாக்கில், ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ஏற்பாடு நீடிக்கிறது. பெண்கள் மத்தியிலும் சங்கம் இந்தப் பணி செய்ய வேண்டும் என்று ராஷ்ட்ர சேவிகா சமிதி கூறும்போது, நாம் அதில் ஈடுபடுவோம். இன்னொரு விஷயம், சங்க ஷாகா நிகழ்ச்சிகள் ஆண்களுக்கானது. அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க பெண்கள் வரலாம், வந்துகொண்டும் இருக்கிறார்கள். ஆனால் கார்யகர்க்த்தாக்களை மட்டும் நம்பி நடப்பதல்ல சங்கப் பணி. அதில் நமது தாய்மார்களும் சகோதரிகளும் கைகொடுப்பதால்தான் பணி நடக்கிறது. எந்த ஒரு சங்க ஸ்வயம்சேவகரின் வீட்டிலுள்ள பெண்கள், சங்கத்தில் உள்ள பெண்களைப் போலவே உள்ளனர். பெண்கள் பல்வேறு அமைப்புகளில் சங்க ஸ்வயம்சேவகர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். சங்கத்தின் அகில பாரதிய பிரதிநிதி சபை கூட்டங்களில் பெண்கள் பிரதிநிதித்துவம் உள்ளதால் தீவிரமாகப் பங்கேற்கிறார்கள். இந்தப் பெண்கள் முதன்முறையாக பாரதத்தின் மகளிர் சமுதாயத்தில் ஒரு விரிவான கணக்கெடுப்பை நடத்தினர், இது அரசாங்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இவர்கள் நாடு நெடுக மிகப்பெரிய மகளிர் மாநாடுகளை ஏற்பாடு செய்தார்கள்; அதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். இந்தப் பணிகள் அனைத்திற்கும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஆதரவளித்து ஒத்துழைத்தது. பெண்கள் மேம்பாடு ஆண்களால் நடக்கக் கூடியது அல்ல என்று கருதுகிறோம். பெண்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்வார்கள், அதில் அனைவர் மேம்பாடும் அமையும். அதனால்தான் நாம் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்; அவர்கள் விரும்பும் பணியில் அவர்கள் ஈடுபடுகையில் அவர்களுக்கு அதிகாரமளிக்கிறோம்.

சங்கத்தின் நூற்றாண்டு வேளையில், ஐந்து மாற்றங்களுக்கான (பஞ்ச பரிவத்தன்) தீர்மானம்  வந்துள்ளது. இது தொடர்பாக என்ன செயல் திட்டம் உள்ளது? இதன் அடிப்படையில் நாம் அடுத்து என்ன செய்ய முடியும்?

மாற்றத்திற்கு மன உணர்வு அவசியம். மனதின் உணர்வை மாற்றக்கூடிய, சுபாவத்தை மாற்றக்கூடிய வேலைகள் தேவை. கொடுக்கப்பட வேண்டிய வேலையும் அதுதான். மேலும் வாழ்க்கையும் நேர்வழியில் செல்லும். எனவே ஐந்துவித மாற்றம் குறித்து பேச்சு உள்ளது. ஒன்று  நல்லிணக்கம்.சமுதாயத்தில் அன்பு நிலவ வேண்டும். பல்வேறு வகையான சமூகங்கள், பல்வேறு சூழ்நிலைகளில், பல்வேறு புவியியல் பகுதிகளில் உள்ளன; அவற்றுக்கும் சிக்கல்கள் உள்ளன; ‘ஒரு விதி எனக்கு நல்லதாகலாம்; அதுவே உங்களுக்கும் என்பதல்ல விஷயம்;’ தேசம் அவ்வளவு விசாலமானது. இதிலிருந்து நாம் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமோ, அந்த ஏற்பாடுகள் இதயத்திலிருந்து வந்தால் நல்லது, அன்பு அதிகரிக்கும். நாம் சமூக நல்லிணக்கம் நடைமுறையில் வர வேண்டும். இதில் சமூக நல்லிணக்கப் பரப்புரை நோக்கம் அல்ல. ஊருக்குள் எத்தனையோ வகை சமூகங்கள் சொல்கிறார்கள். ‘எனக்கும் என் குடும்பத்திற்கும் எல்லா வகை நண்பர்களும் இருக்க வேண்டும்’ என்போர் நாம். நமக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் எல்லாம், ஒரே கோயில், கிணறு மயானம் பொதுவாக இருக்க வேண்டும் என்கிறோம். இது ஆரம்பம்; விரிவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

குடும்ப பிரபோதன் (குடும்ப ஞானம்) அம்சமும் இப்படித்தான். உலகிற்கு நிம்மதி அளிக்கும் விஷயங்கள்; பாரம்பரியமாக வரும் அத்தியாவசிய விஷயங்கள்; நமது குடும்பத்தின் தேசத்தின் மரபில் உள்ளவை. அவற்றைப் பற்றி வீட்டில் உள்ளோர் அமர்ந்து விவாதித்து, அவற்றில் ஒருமித்த கருத்தை எட்டி, குடும்ப வாழ்க்கை நடைமுறையில் அவற்றை கொணர்வது குடும்ப ஞானம்.

சுற்றுச்சூழலுக்காக  இயக்கங்கள்  உட்பட எத்தனையோ  விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஒருவர் தன் வீட்டில் தண்ணீர் வீணாகி வருவதைப் பற்றி கவலைப்படுவதில்லை. முதலில் அதைச் செய்யுங்கள். மரங்களை நடுவோம், பிளாஸ்டிக்கை அகற்று வோம், தண்ணீரைச் சேமிப்போம். இதைச் செய்வதன் மூலம் அவரது புரிதல் வளர்ந்து அவர் சிந்திக்கத் தொடங்குகிறார்.

‘ஸ்வய’ அடிப்படையில் வாழ்வது என்பதும் இதுபோலத்தான். ஒருவர் தனது சொந்த ‘ஸ்வயத்தை’ அடிப்படையாகக் கொண்டு நடந்து கொள்ள வேண்டும். நமது தேசிய ‘ஸ்வயத்தின்’ அடிப்படையில் முன்னேறுவோம். நம் வீட்டிற்குள் மொழி, உடை, உணவு, வழிபாடு, பயணம் ஆகியவை நம் சுயம் சார்ந்ததாக இருக்க வேண்டும். வீட்டிற்கு வெளியே என்றால் சூழ்நிலைக்கு ஏற்ப அதைச் செய்ய வேண்டும். நாம் வீட்டில் இருக்கிறோம், சுயம் சார்ந்த செயல்கள் வீட்டில் நடந்தால், நற்பண்பு காப்பாற்றப்படும். தேசம் சுயசார்பு பெற்ற நாடாக வேண்டுமானால், இயன்ற வரை நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களைக் கொண்டே சமாளிக்க வேண்டும். இது தொடர்ந்து பழக்கமாகவும் வேண்டும். சர்வதேச வர்த்தகம்  நிறுத்தப்பட வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம். அதற்கு ஒரு சமன்பாடு உண்டு. நம் தொழில் நடக்க முடிய வேண்டும்; அவர்கள் தொழிலையும் நடத்துவோம் நாட்டிற்குத் தேவையானது என சில அத்தியாவசியங்கள் நாட்டிற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்பட வேண்டும் என்றால், அதை கொண்டு வருவோம். ஆனால் அது நம் சொந்த விதிமுறைகளின்படி; எவர் நிர்பந்தத்தின் கீழும் அல்ல. இவை அனைத்தும்தான் சுயம் சார்ந்த வாழ்வின் அங்கங்கள்.

அடுத்து, சட்டம், அரசியல் சாஸனம் பொதுவான நன்னடத்தை ஆகியவற்றை மதித்துக் கடைபிடித்தல்.

இந்த ஐந்து விஷயங்களை ஸ்வயம்சேவகர்கள் தங்கள் வாழ்வில் ஏற்று மாற்றத்தின் பாதையில் முன்னேறிச் செல்வார்கள். நூற்றாண்டு நிறைவுக்குப் பிறகு அதை ஷாகாக்கள் மூலம் சமுதாயத்திற்கு எடுத்துச் செல்வார்கள். இது நடைமுறையாக அமைந்தால், நல்ல சூழ்நிலை உருவாகும். தொடர்ந்து மாற்றம் வரும். இன்னும் நிறைய விஷயங்கள் நடக்க வேண்டியுள்ளது; அவையெல்லாம் இதிலிருந்து மெல்ல மெல்லத் தொடங்கி நடைபெறும். இப்படித்தான் யோசித்திருக்கிறோம்; என்ன நடக்கிறதென்று பார்ப்போம்..

சர்சங்கசாலக் மோகன் பாகவத் நேர்காணல்

அடுத்த இதழில் நிறைவடையும்