மக்களின் பண்பாடுதான் மூலமாந்திரம்…

ஆண்டுக்கு 1,200 ரூபாய் நஷ்டத்தை யாரெல்லாம் பொருட்படுத்த மாட்டார்களோ அவர்கள் எரிவாயு சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுக் கலாம் என்றுபோகிற போக்கில் சொல்லி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவ்வளவுதான் அதற்கு மக்கள் இவ்வளவு பிரமாண்டமான அளவில் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என்றால் அது மக்களின் விவேகத்தைத் தான் காட்டுகிறது. மானியம் பெற்று வரும் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் 20 கோடி பேர். அவர்களில் ஒரு கோடிப் பேர் ஒரே ஆண்டுக்குள் மானியத்தை விட்டுக் கொடுத்தார்கள் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. வசதி அற்ற மேலும் எத்தனையோ பேருக்கு இதைக்கொண்டு எரிவாயு வழங்க முடியுமே இதுதான் பிரதமர் மக்களின் நல்லதனத்தை நம்பி, அன்றாட வாழ்வில் சமுதாய சிந்தனையுடன் தியாகம் செய்ய தூண்டி அதில் வெற்றி பெற்ற ஒரு சம்பவம்.

தேசத்தின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள். தேசத்தில் 100 மொழிகளும் 1,700 பேச்சு வழக்கு மொழிகளும் உள்ளன. தேசிய ஒருமைப்பாடு கலாச்சார ரீதியாக ஏற்பட இளைஞர்கள் பல மொழிகளை கற்க ஊக்குவிக்கலாம். மொழி கற்பது என்றால் அனா ஆவன்னா எழுத கற்றுக் கொள்வது அல்ல. ஆர்வத்தை தூண்டும் விதத்தில் செய்யலாம். உதாரணமாக, ஹரியானா இளைஞர் ஒரிய மொழி பாடல் ஒன்றை பாடக் கற்றுக் கொள்ளலாம். மேற்கு வங்க இளைஞர் தமிழ்ப் பழமொழிகள் சிலவற்றைக் கற்றுக்கொள்ள்லாம். ராஜஸ்தானில் மக்கள் விளையாடுகிற சில விளையாட்டுகளை தெலுங்கானா இளைஞர் கற்றுக் கொள்ளலாம். இதற்கு உதவியாக மாநில அரசுகளின் இளைஞர் நலத் துறைகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கூட போட்டுக் கொள்ளலாம். 2017ல் ஆமதாபாதில் 30 மாநிலங்களின் இளைஞர் நலத் துறை அமைச்சர்கள் பங்குபெற்ற மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசுகையில் பிரதமர் மோடி சொன்ன யோசனை இது. சமீபகாலமாக பிரதமர் தேசிய அரங்குகளிலும் சர்வதேச அரங்குகளிலும் தமிழின் தொன்மை, தமிழின் மேன்மை இவற்றை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொன்னால் உடனே சிலர் தமிழர்களை கைக்குள் போட்டுக்கொள்ள எல்லோரையும் போல மோடியும் பார்முலா வகுத்துக் கொண்டு பேசுகிறாரோ என்று விமர்சனம் செய்ய தொடங்கிவிடுகிறார்கள். மோடியாவது ஒருமைப்பாட்டை மறப்பதாவது? தமிழ் இளைஞர்கள் உள்பட தேசத்தின் எல்லா இளைஞர்களுக்கும் மொழி ரீதியாக கலாச்சார ஒருமைப்பாட்டை மனதில் பதிய வைக்கும் அரசின் நோக்கத்தில் பழுது இல்லை.

தேசிய ஒருமைப்பாடு என்றதும் முதலமைச்சர்கள் போன்ற விஐபிகள் கூடி சொற்பொழிவுகள் நிகழ்த்தி விட்டு கலைவது பழைய பாணி. தேசத்தின் எல்லா பகுதி இளைஞர்களும் போரடிக்காத விதத்தில் மொழி வேலி கடந்து தேசிய சகோதரத்துவம் வளர்த்துக்கொள்ள உத்திகளை அறிமுகப்படுத்துவது புதிய பாணி. இளைஞர்களை ஈர்க்கும் வல்லமை கொண்ட பாணி.

நல திட்டம் எதிலும் மக்கள் பங்கேற்பு இதுபோல உத்திகள் வாயிலாக நூறு சதவீத வெற்றி பெற முடிந்திருப்பதற்கு இன்னுமொரு உதாரணம் தூய்மை பாரதம் திட்டம். கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடிக்கும் மேல் புதிய கழிப்பறைகள் உருவாக்கிக் கொண்டு தேசம் தூய பாரதமாக உருவாகிவிட்டது என்று பிரதமர் மோடி சென்ற வாரம் அக்டோபர் 2 அன்று காந்திஜியின் 150 வது பிறந்த நாள் விழாவின்போது பிரகடனம் செய்ய முடிந்திருப்பது ஊரகப் பகுதிகள் உள்பட நாடு முழுவதும் இந்த திட்டத்தில் தோள் கொடுத்ததால்தான். சுற்றுப்புற சுகாதாரத்தால் வியாதிகள் குறையும், அதனால் குடும்பங்கள் மருந்துச் செலவு செய்வது குறையும் — இதுதான் மக்கள் தூய்மை பாரதம் திட்டத்தில் மனமுவந்து முழு மனதுடன் கலந்து கொள்ள உந்துதல் தந்தது.
புதுமண தம்பதிகள் தேனிலவுக்கு மாலத் தீவு, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா என்று வெளிநாடுகளுக்கு போய் வருவது அதிகரித்துள்ளது. இது தவிர விமான சர்வீஸ் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பாரதத்திலிருந்து தாய்லாந்து, இலங்கை, இவற்றில் யுனெஸ்கோ அமைப்பு கலாச்சார பாரம்பரிய தலங்கள் என்று அறிவித்துள்ள ஊர்களுக்கு போய் வருகிறார்கள். பாரதத்திலேயே அஜந்தா போல அப்படிப்பட்ட யுனெஸ்கோ கலாச்சார பாரம்பரிய தலங்கள் 38 உண்டு.

இந்த ஊர்களுக்கு பாரத சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு என்ன செய்யலாம்? புதிய பாணி ஆளுகை நடப்பதால் இதிலும் மக்கள் பங்கேற்பு மையப்புள்ளி ஆக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய 2022ல் பாரத சுதந்திரத்தின் 75வது ஆண்டு நடைபெறும். அதற்குள் பாரத சுற்றுலாப் பயணிகள் பாரதத்திற்கு உள்ளே உள்ள ஏதாவது 15 சுற்றுலாத் தலங்களை போய் பார்த்து விட்டு வர தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற யோசனையை பொது வெளியில் தவழ விட்டார் பிரதமர் மோடி. அன்னிய செலாவணி மிச்சப்படுவது ஒருபுறம் சுதேசிய உணர்வு தலைதூக்குவது மறுபுறம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! அத்துடன் விட்டாரா பிரதமர்? அமெரிக்கா சென்று பாரத வம்சாவளியினர் மத்தியில் பேசும்போது கூட ஒரு ஆண்டில் 5 அமெரிக்க குடும்பங்களை பாரதத்தில் சுற்றுலா சென்றுவர தூண்டுதல் கொடுங்களேன் என்று சொல்லி வைத்து விட்டுத்தான் வந்திருக்கிறார். ஆக, பாரத சுற்றுலா வளர்ச்சி காணச் செய்யும் மக்கள் பங்கேற்புக்கு தேச எல்லை குறுக்கே வராது என்று தெரிகிறது.
இவற்றோடு ரயில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள் தங்கள் கட்டண சலுகை விட்டுக்கொடுப்பதாக இருந்தால் அதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேசத்துக்கு வருமானம் மூத்தவர்களுக்கு தன்மானம்!
ஆட்சியாளர்களின் திடசித்தம், மக்களின் பண்பாடு குறித்து அரசுக்கு நம்பிக்கை இரண்டும் இருந்தால் அசாத்தியங்கள் சாத்தியங்கள் ஆவதை தேசம் கண்கூடாகக் காண முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *