பெண்களை தாயாக தெய்வமாக போற்றும் தேசம் பாரதம். உலகிலேயே வேத காலம் தொட்டு பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி இருந்த தேசம் பாரதம். சுபலா, திரிதவ்ரதா, ஸ்துருதவதி போன்ற பெண்களின் ஆன்மிக வாழ்வை அதர்வண வேதம் கூறியுள்ளது. மைத்ரேயி, கார்கி, வாசக்னவி போன்றோர் குறித்து வேதங்கள் புகழ்கின்றன. அக்ரிஷ்ட பாஷா, சிகாத நிவாவரி, நோதா, கம்பாய்னா என்ற நான்கு பெண் கவிஞர்களின் பாடல்கள் சாம வேதத்தில் உள்ளன. தமிழர்களில் ஔவையை அறியாதவர்கள் யார்? அக்காலத்தில் பெண்கள் ஒருபோதும் ஆணுக்கு நிகராக வைக்கப்பட்டதில்லை. ஏனெனில் பெண் ஆண்களை விட மிகவும் உயர்வானவள் என்பதை ஹிந்து சமூகம் நன்றாக உணர்ந்திருந்தது.
இப்படி உயர்வாக இருந்த பெண்களின் நிலை கடந்த காலங்களில் முஸ்லிம் படையெடுப்புகளால் சற்று பின் தங்கியது. பெண்களை கயவர்களிடம் இருந்து காக்கப்பட வேண்டியதாகிவிட்டது. இதனால் பெண்கள் வெளியே செல்ல, கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. இதுவே பாரதத்தில் பெண்கள் அடிமைப்பட்டுள்ளனர் என்ற பொய் பிம்பம் உருவாக காரணம்.
தற்போது நிலை மாறியுள்ளது. பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கின்றனர். எனினும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி வருவது வருத்தமளிக்கும் செய்தி. காரணம், மேலைநாட்டு கலாச்சாரம் பெண் சுதந்திரம் என்ற பெயரில் அவர்களை சீரழிக்கிறது. மற்றொரு பக்கம், பெண்களை போகப்பொருளாக, அடிமைகளாக வைத்திருக்கும் மக்களும் இருக்கின்றனர். சட்டத்தால் மட்டுமே பெண்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்காது. இது நாம் இழந்துவிட்ட மனிதாபிமானத்தின் பிரச்சினை. இவற்றை தடுக்கவும் பெண்களை காக்கவும் ஒரே வழி நாம் பாரத பண்பாட்டை மீட்டெடுப்பதுதான். பாரதம் உலகின் குருவாகும் காலம் பெண்களுக்கு உண்மையில் சுதந்திர காலமாக மாறும் என்பது நிச்சயம்.
தாய் பொறுமையின் சின்னம். அதனால் தான் அவளைப் பூமாதேவிக்கு உதாரணமாகச் சொன்னார்கள். தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை. கடவுளை வணங்க கோயிலைத் தேடவேண்டாம், தாயை வணங்கினால் போதும் என்பார்கள். ஒவ்வொரு ஆணும், ‘பாரத் மாதா கி ஜெய்’ எனத் தன் நாட்டைத் தாயாக வணங்குவதைப்போல் பெண்கள் அனைவரையும் (மனைவி நீங்கலாக) என் தாயாக, சகோதரியாக வணங்குவேன் என சபதம் எடுத்துக்கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும். அன்றுதான் உண்மையான பெருமைக்குரிய பெண்கள் தினம் மலரும்.