‘‘பாரத தேசம் பூமிக்கே நேசம்’’ ஆர்.எஸ்.எஸ்.

இந்தியா வளர்வது தன்னை பெரிய நாடு ஆக்கிக் கொள்வதற்காக அல்ல. அது தான் இந்தியாவின் சுபாவமே. எத்தனையோ நாடுகள் வளர்ந்தோங்கி பெரிய நாடுகளாகின, பிறகு வீழ்ச்சி அடைந்தன. உலகில் இன்று கூட பெரிய நாடுகள் உண்டு, அவற்றை வல்லரசுகள் என்கிறார்கள். நாமும் தான் பார்க்கிறோம், வல்லரசு ஆகி இந்த நாடுகள் அப்படி என்ன தான் செய்கின்றன? உலகம் முழுவதும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்கின்றன. உலகம் முழுவதும் தங்கள் தர்பார் நடத்துகின்றன. உலகம் முழுவதன் வளவாய்ப்புகளை தாங்களே பயன்படுத்திக் கொள்கின்றன. உலகம் முழுவதிலும் தங்களது ஆட்சி நடக்குமாறு செய்ய நேரடியாகவும் மறைமுகமாகவும் முயற்சி செய்கின்றன. உலகம் முழுவதும் தங்கள் நிறத்தைப் பூச முயற்சிக்கின்றன. இது போல நடந்தது. நடந்து கொண்டிருக்கிறது. எனவே தேசம் பெரிய தேசம் ஆவது உலகத்துக்கே ஆபத்தானது என்று உலகின் பெரும்பாலான பகுதிகளில் அறிஞர்கள் முடிவு கட்டினார்கள். இன்று உலகில் நேஷனலிஸம் என்பதற்கு நல்ல அர்த்தம் கிடையாது.

சில ஆண்டுகளுக்கு முன் சங்க நிகழ்ச்சிக்காக பிரிட்டன் சென்றேன். அங்கே தெரிவு செய்யப்பட்ட 40, 50 அன்பர்களோடு கலந்துரையாட வேண்டி இருந்தது. அந்த சமயம் இங்கிலாந்தில் இருந்த நமது சங்க ஊழியர் ஒரு விஷயம் சொன்னார். ‘‘ஆங்கிலம் நமது மொழி அல்ல. நாம் படித்த ஆங்கிலத்தில் இங்கே கலந்துரையாடினால் சொற்களுக்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்பட்டுவிடும். எனவே தாங்கள் நேஷனலிஸம் என்ற சொல்லைத் தவிர்த்து விடுங்கள். நேஷன் என்று சொன்னால் பிரச்சினை இல்லை, நேஷனாலிடி என்று சொன்னால் பிரச்சினை இல்லை, நேஷனலிஸம் என்ற சொல்லைப் பயன்படுத்தாதீர்கள். இங்கே அந்தச் சொல் ஹிட்லரையும் நாஜியிசத்தையும் பாசிசத்தையும் குறிக்கிறது” என்று அந்த ஊழியர் என்னிடம் எடுத்துக் கூறினார். இன்று நேஷனலிஸம் என்ற அந்தச் சொல்லுக்கு அங்கே அப்படி ஒரு தவறான பொருள். ஆனால் ஒரு தேசம் என்கிற ரீதியில் இந்தியா பெரிய நாடு ஆன போதெல்லாம் உலகத்திற்கு அதனால் நன்மையே விளைந்தது என்பது நாம் அறிந்ததுதான்.

நமது சங்கப் பாடல் ஒன்றின் கருத்து இது: “உலகின் ஒவ்வொரு தேசமும் குழப்பத்தில் தடுமாறி நிற்கும் போது சத்தியத்தை தரிசிக்க இந்த மண்ணுக்குத் தான் வந்தது. ஒடுக்கப்பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை பரிவுடன் கைதூக்கி விடுவது இந்த நமது பாரத பூமிதான்”. அதுதான் இந்தியாவின் சுபாவம். அதாவது உலகத்துக்கு இன்று பாரதம் மிக மிக அவசியமாகியிருக்கிறது. ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைப் பதைத் தவிர ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்திற்கு வேறு பணி கிடையாது. ஹிந்துத்துவ உணர்வின் அடிப்படையில் தேசிய உணர்வுக்கு வலுவூட்டி சமத்துவ அடித்தளத்தில் சுரண்டலற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவது தான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஒரே குறிக்கோள். சங்கத்தின் கொள்கைகளும் செயல்முறையும் சமுதாயம் பின்பற்றக் கூடியவை. உலகெங்கும் பரவி வரும் தீவிரவாதம் உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடியது. உலக அமைதிக்கு வழி ஹிந்து சிந்தனையில் தான் பொதிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *