ஊக்கம் தந்த உரை

பொள்ளாச்சி அருகில் உள்ள செங்குட்டைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ‘சின்னு’ என்று அழைக்கப்படுகிற சின்னச்சாமி என்பவர், சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் பி.ஏ.(தத்துவம்) படித்து வந்தார். அவர் மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்வது என்று முடிவெடுத்தார். அதற்காக சென்னையில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்திற்குச்  சென்று பயணச் சீட்டுக்கு  முன்பதிவு செய்தார்.

திரும்பி வரும் வழியில் நடைபாதையில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடையைப் பார்த்தார். அங்கிருந்த  ‘சுவாமி விவேகானந்தரின் சென்னைச் சொற்பொழிவுகள்’ என்ற புத்தகத்தை எடுத்து ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்தார். புத்தகத்தைப் படிக்கப் படிக்க அவரது உள்ளத்தில் ஒரு பரவசம் உண்டாகியது.

‘‘இளைஞர்கள் நூறு பேர் இருந்தால் போதும்… இவ்வுலகையே மாற்றி அமைத்துவிடலாம்’’ என்ற சுவாமிஜியின் கருத்து அவர் மனதைத் தொட்டது. அந்த நூறு இளைஞர்களில் தான் ஒருவராக ஆக முடியுமா என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது. புத்தகத்தை விலைக்கு வாங்கி தான் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினார். அன்றே அந்தப் புத்தகம் முழுவதையும் படித்து முடித்தார். அந்தப் புத்தகம் அவர் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்வது என்ற திட்டத்தைக் கைவிட்டார்.

தனது கப்பல் பயணச் சீட்டை ரத்து செய்தார். தனது பெற்றோருக்கு தனது முடிவைத் தெரிவித்தார்.  விடுதி அறையில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படத்தை மாட்டி வணங்கி வந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு அடிக்கடி சென்று வந்தார். பின் சிறிது சிறிதாக துறவற வாழ்க்கையில் நாட்டம் உருவாகி துறவு பூண்டார்.   இந்த ‘சின்னு’ என்ற இளைஞர்தான் பின்னர் சுவாமி சித்பவானந்தர் ஆனார்.