திருவெம்பாவை – 18

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

விளக்கம்:
தோழியே! திரு அண்ணாமலை அண்ணலை வணங்க வந்துள்ள முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரும் தங்களது சிரசில் அணிந்துள்ள கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள புஷ்பராகம், வைரம், கோமேதகம் போன்ற பலவித இரத்தினங்களின் தொகுதி வெளியிடும் ஒளித் தன்மை, உதிக்கும் கதிரவன் பரப்பும் ஒளிக்கற்றைகள் பரப்பிடும் ஒளி வெள்ளத்திற்கு முன்னர் மங்கலாகிப்போகிறது. விடியும் வரை வானத்தில் அங்கும் இங்கும் பளிச், பளிச்
என்று ஓடி விளையாடிய குளிர் நிறைந்த நட்சத்திரக்கூட்டங்கள் தங்கள் ஒளிவீச்சு ஒளிர்தன்மை குறைந்து மங்கலாவதை உணர்கின்றன. அத்தகைய அதிகாலைப் போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலி யாகியும், விளங்குகின்ற ஒளி சேர் ஆகாயமாகியும் பூமியாகியும் மற்றும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப் படுகின்ற அமிர்தமாகி நின்றவனாகிய சிவபிரானது திருவடியைப் பாடி மலர்கள் நிறைந்த பொய்கைதனில் பாய்ந்து ஆடி நீராடுவோமாக !!