ஆண்டாள். இப்பாசுரத்தில், “கண்ணனை நாம் நாடி வந்திருக்கிறோம். நமது தேவைகளை நாம் கூறாமலேயே ஆராய்ந்து அறிந்து நமக்கு இரங்குவான் அவன். அவனைக் காணச் செல்வோம். எழுவாயாக” என்று துயிலெழுப்புகிறாள். கிழக்குத் திசையில் சூரியன் ஒளி பரப்ப யத்தனிக்கிறான். எருமைகள் புல்லை மேய்வதற்காக சிறு வயல் தோட்டங்களில் புகுந்துவிட்டன. தத்தம் பணிக்குச் செல்லாதபடிக்கு, மற்றுமுள்ள எல்லாப் பெண் பிள்ளைகளையும் கூடப் போகவிடாமல் தடுத்து, உன்னைக் கூப்பிட்டு அழைப்பதற்காகவே உன் வீட்டு வாசலில் வந்து காத்திருக்கிறோம்.
கண்ணனாலே மிகவும் விரும்பத்தக்க, ஒரு பதுமையை ஒத்த பெண்ணே !! எங்களுடன் வருவதற்காக நீ எழுந்திரு. கண்ணனின் குணங்களைப் பாடி, அவனிடம் இருந்து நாம் விரும்பும் பறையைப் பெற்றுப் பாவைநோன்பு இயற்றுவோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்தபோது அதன் வாயைப் பிளந்து கொன்றவன் நமது கண்ணன். கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்ற தேவாதி தேவன் நம் கண்ணன். அவனை அடிபணிந்தால், இறங்கி வந்து நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்பு” என்கிறாள்.