திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: ஹிந்து வழிபாட்டு உரிமைக்கு தடையாக தவெக அரசு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது வெறும் தீபம் ஏற்றும் இடம் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல. அது, இந்துக்களின் வழிபாட்டு உரிமை பற்றிய பிரச்சனை, இந்து சமய மரபுகளைப் பாதுகாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் இருக்கிறது என்பதை உணர்த்தும் பிரச்சனை, நீதிமன்ற உத்தரவுகளை மதித்து நடைமுறைப்படுத்துவது அரசின் கடமை என்பதை அரசுக்கு எடுத்துச் செல்லும் பிரச்சனை.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் தொடரப்படுகின்றன. அனைத்து வழக்குகளிலும் இந்துக்களுக்கு சாதகமாகவே தீர்ப்புகள் வெளி வந்தாலும் அடுத்தடுத்து வந்த எந்த மாநில அரசும் அதனை செய்யத் தயாராக இல்லாத நிலையில் தான், இறுதியாக வந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதன் கடந்த 1.12.2025 அன்று, மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் (6.1.2026) தீபம் ஏற்ற அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது. ஆனாலும் தீர்ப்பு அமலாக்கப்படவில்லை. சட்டம் – ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி அரசு நிர்வாகம் உத்தரவை அமல்படுத்தவில்லை. இப்படி அமல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர்கள் நேரடியாகவே நீதிமன்றத்தில் மன்னிப்பும் கோரினர். ஆனாலும் தீபம் ஏற்றப்படவில்லை.
இந்து விரோத திமுக அரசை வீழ்த்தி, அனைத்து மதங்களுக்கும் சமமான அரசு என்று ஆட்சியில் அமர்ந்த த.வெ.க அரசும், இந்துக்களுக்கு நீதி வழங்கத் தயாராக இல்லை. இந்த ஆண்டாவது தீபம் ஏற்றப்படும் என்ற நிலையில், தேவையற்ற முறையில் உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும் போது வரட்டும். இறை பக்தர்களுக்கு இதில் ஒரு கடமை உள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு கந்த சஷ்டி தினமான நவம்பர் 14ல் தமிழகமெங்கும் ஒரு லட்சம் இடங்களில் சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட இந்து இயக்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. தெருவுக்கு வர வேண்டாம், ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம், இந்து சமயத்துக்கும், சமூகத்துக்கும் நமது கடமையை செய்வோம். சஷ்டி கவசப்பாராயணத்தில் கலந்து கொண்டு, நமது ஒற்றுமையை பறைசாற்றுவோம்! விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! நல்லதே நடக்கும்!