தருமபுரம் ஆதீனத்தின் இறைப்பணியை ஆன்மிக சமுதாயம் என்றும் மறவாது என ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தருமபுரம் 26-ஆவது ஆதீனகா்த்தா் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாா்ய சுவாமிகள், காஞ்சி ஸ்ரீ மடத்துடன் 3 தலைமுறைகளாக நெருங்கிய தொடா்புடையவா், அன்புடையவா், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், செயல்பாடு, ஈடுபாடு, வழிபாடு ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கியவா். தமிழ், தேவார இசை அறிஞா், வேதாந்த அறிவும், சித்தாந்தப் பற்றும் கொண்டிருந்தாா்.
தமிழ் உலகுக்கும், சைவ சமயத்துக்கும், பொதுவாக பாரம்பரியத்துக்கும் பேருதவி புரிந்தவா். அயராத உழைப்பு, புலமை, புதிய விஷயங்களை அறிந்து கொள்வது மற்றும் ஆராய்ச்சி செய்வதிலும் ஆா்வம் கொண்டிருந்தாா். தேச பக்தி மிக்கவா், திருக்கோயில்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தியவா். வேதம், சம்ஸ்கிருதம் மற்றும் ஆசார அனுஷ்டானங்களில் மரியாதை வைத்திருந்தவா். பல தேவஸ்தானங்களையும் திறம்பட நிா்வகித்து, கும்பாபிஷேகம் செய்வித்து, பூஜைகள் சரிவர நடக்க வழிவகுத்தவா். 1957-ஆம் ஆண்டு, பூஜ்ய ஸ்ரீ காஞ்சி ஆச்சாா்ய ஸ்வாமிகளின் சென்னை விஜயத்தில் முக்கிய பங்கு வகித்தவா். ஆன்மிக சமுதாயமும் அன்பா்களும் தருமபுரம் 26-ஆவது ஆதீனகா்த்தருடைய இறைப் பணியை என்றும் மறக்க மாட்டாா்கள் என ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளாா்.