தொழிலதிபர் கெளதம் அதானியின் குழுவானது 5ஜி டெலிகாம் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கெடுக்கும் முயற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அதானி குழுமம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டலின் பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவற்றுக்கு போட்டியாக களமிறங்கலாம் என தெரிகிறது. எனினும் அந்த நிறுவனம் இந்த செய்தியை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எப்படியிருப்பினும், ஏல காலக்கெடுவின்படி, விண்ணப்பதாரர்களின் உரிமை விவரங்கள் ஜூலை 12ம் தேதி வெளியிடப்படும். பல்வேறு அலைவரிசைகளின் ஸ்பெக்ட்ரம் ஏலம் ஜூலை 26ல் நடைபெறும் என்பதால் இதுகுறித்து விரைவில் தெரியவரும். குஜராத்தைச் சேர்ந்த அம்பானியும் அதானியும் மெகா வணிகக் குழுக்களைக் கட்டியெழுப்பினர். ஆனால், சமீப காலம் வரை அவர்கள் ஒரே துறையில் நேரடியாக இதுவரை மோதவில்லை. ஆனால், அதானி குழுமம், சமீபத்தில் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையில் ஒரு துணை நிறுவனத்தை அமைத்துள்ளது. மேலும், சோலார் பேனல்கள், பேட்டரிகள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான மிகப்பெரிய தொழிற்சாலைகள் உட்பட புதிய ஆற்றல் வணிகத்திற்கான பல பில்லியன் டாலர் திட்டங்களை அம்பானியும் அதானியும் அறிவித்துள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.