சம்பூக வதம்: சர்ச்சைகளுக்குப் பதில்

தமிழகத்துக்கு ராம ராஜ்ய ரத யாத்திரை வந்தாலும் வந்தது, திராவிட இயக்க அறிவுஜீவிகள் முன்னைக் காட்டிலும் முனைப்பாக ராமாயண பாராயணம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். பூதக்கண்ணாடி கொண்டு ஏதேனும் குறையைக் கண்டுபிடித்து ராமபிரானையும் ராமராஜ்யம் எனும் கருத்தியலையும் கொச்சைப்படுத்தி விட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். அதன் வெளிப்பாடாக “சம்பூக வதம்” பற்றி இப்போது நிறைய கிளப்பி விடப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டுரை சம்பூக வதம் குறித்து கீழ்க்கண்டவாறு அலசுகிறது:

சம்பூக வதம் பற்றிய கதை என்ன?
சம்பூக வதம் நடந்தது உண்மையா?
ராம ராஜ்யத்தில் சாதிக் கொடுமை இருந்ததா?

சம்பூக வதம் பற்றி…

வால்மீகி ராமாயணத்தின் ஒரு பகுதி என “உறுதிப்படுத்தப்படாத” உத்தர காண்டத்தின் 73 முதல் 76 வரையிலான சருக்கத்தில் சம்பூக வதம் பற்றி வருகிறது. அதாவது, ஸ்ரீராமன் ஆண்டு கொண்டிருந்தபோது, ஓர் அந்தணனின் மகன் இறந்து விடுகிறான். அகால மரணமடைந்த அந்தச் சிறுவனின் தந்தை ராமபிரானிடம் முறையிட்டு, “ஒரு செங்கோல் மன்னனின் ஆட்சியில் இதுபோல் நடப்பதில்லை: நீதான் என் மகனின் உயிரை திருப்பித் தர ஒளிச்சுவாசம்ும்“ என்று புலம்புகிறான். எதனால் இப்படி நடக்கிறது என்று ராமபிரான் சிந்தித்துக்கொண்டிருந்த போது, நாரதர் அங்கு வருகிறார். அவர், “தாழ்ந்த குலத்தில் பிறந்த சம்பூகன் என்பவன் தலைகீழாய்த் தவம் செய்து கொண்டிருக்கிறான். அந்தண பாலகனின் அகால மரணத்துக்கு இதுவே காரணம்“ என்று கூறிவிட்டுச் செல்கிறார். இதைத் தொடர்ந்து சம்பூகனைத் தேடும் ராமர், சைவலம் எனும் மலைச்சாரலில் தலைகீழாய் தவம் புரியும் அவனைக் கண்டு வாளால் சிரச்சேதம் செய்து வதம் செய்கிறார். இதைத் தொடர்ந்து அந்த அந்தணன் மகன் உயிர் பெறுகிறான். இதுதான் கதை.

கதை உண்மைதானா?

முதலில் இந்தப் புனைவு ராமாயணத்தின் உத்தர காண்டத்தில் வருகிறது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். வால்மீகி வழங்கிய மூல ராமாயணத்தின் ஒரு பகுதியாக உத்தர காண்டத்தை அறிஞர்களும் ஏற்பதில்லை: பௌராணிகர்களும் ஏற்பதில்லை. அதனால்தான் கதா காலக்ஷேபத்தின்போது கூட உத்தர காண்டம் சொல்லப்படுவதில்லை. அது பிற்காலத்தில் ஏற்பட்ட இடைச்செருகல் என்றே கருதப்படுகிறது. உத்தர காண்டத்தில் வரும் தகவல்களும் சரி – அதில் கையாளப்பட்டுள்ள மொழியும் சரி – வால்மீகி காலத்துக்குப் பிந்தியவை என்பதே ராமாயண அறிஞர்களின் கருத்து. சம்பூகன் வதம் கூட வாளால் நேர்ந்ததாக உத்தர காண்டம் கூறுகிறது. ராமன் என்றவுடன் நினைவுக்கு வருவது வில்லும் அம்பும்தான். ராமர் குறித்து சான்றோர்கள் “ஒரு சொல் – ஒரு வில் – ஒரு இல்” என்றுதான் கூறியுள்ளனர். வில்தான் ராமரின் அடையாளம். அவரால் நிகழ்த்தப்பட்ட வதம் அனைத்தும் வில்லால் நிகழ்ந்தவை. அப்படியிருக்க, வில்லால் வீழ்த்தாமல் வாளால் சம்பூகனை ராமர் வீழ்த்தினார் என்று வந்திருப்பதிலிருந்தே, மூல ராமாயணத்திலிருந்து இப் பகுதி எவ்வளவு தூரம் விலகிச் செல்கிறது என்பதைக் காண முடியும்.

கம்பனே நிராகரித்தான்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் முதன்முதலில் ராமாயணத்தை அறிமுகம் செய்துவைத்த கவிச் சக்ரவர்த்தி கம்பரும் உத்தர காண்டத்தை தனது கம்ப ராமாயணத்தில் சேர்க்கவே இல்லை. பால காண்டம், அயோத்தி காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தை காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய 6 காண்டங்களைப் பாடிய கம்பர் உத்தர காண்டத்தைப் பாடாதது ஏன்? காரணம், மூல ராமாயணத்தின் ஒரு பகுதியாக உத்தர காண்டத்தை கம்பனே அங்கீகரிக்கவில்லை என்பதுதான். கம்பனைக் காட்டிலும் ராமாயணத்தில் “அதாரிட்டி” என்று எவரையும் கூற முடியாது. கம்பனே நிராகரித்த ஒரு பகுதியை தோண்டியெடுத்து ராமாயணத்தில் இருப்பதாகப் பொய் கூறி திரிபு செய்வது இந்து எதிர்ப்பு அரசியலுக்காகத்தானே!

கொல்கத்தா நூலகத்தில்..

கொல்கத்தா ஏஷியாடிக் சொசைட்டி நூலகத்தில் வடமொழி அறிஞர்கள் 6ஆம் நூற்றாண்டு ராமாயணப் பிரதி ஒன்றை 2015-ம் ஆண்டு கண்டுபிடித்தார்கள். இத்தனை ஆண்டுகளாக எவராலும் கவனிக்கப்படாமல் இருந்தது அந்த ஓலைச் சுவடி,. இந்த ஓலைச் சுவடியை கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை, கி.மு. 4-ம் நூற்றாண்டில் உருவான வால்மீகி ராமாயணத்துக்கு அடுத்தபடி பழைமையான ராமாயணமாக 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்ப ராமாயணமே கருதப்பட்டு வந்தது. கம்பனுக்கு 6 நூற்றாண்டுகளுக்கு முன்பே மற்றொரு ராமாயணப் பிரதி வடமொழியிலேயே இருந்தது இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் தெரிய வந்தது. இதில் முக்கிய விஷயம் என்னவெனில், இந்த ராமாயணத்திலும் உத்தர காண்டம் கிடையாது என்பதுதான். உத்தர காண்டம் ஓர் இடைச்செருகல் என்பதை இதுவும் உறுதி செய்வதாக உள்ளது. (ஆதாரம்: “6th-century Ramayana found in Kolkata, stuns scholars” – Jhimli Mukherjee Pandey / TIMES OF INDIA, Kolkata Edition, Dec. 18, 2015).
உத்தர காண்டமே மூல ராமாயணத்தின் ஒரு பகுதிதானா என்பதில் சந்தேகம் உள்ள நிலையில், அதில் வரும் சம்பூக வதம் எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியும்?

ஸ்ரீராமரின் காலத்தில்..

இனி, ஸ்ரீராமரின் காலத்தில் சாதிக் கொடுமை இருந்ததா என்பது குறித்தும் பார்ப்போம்.

ஸ்ரீராமரின் சம காலத்தவர் என்று கருதப்படுகிற வால்மீகியே ஒரு வழிப்பறிக் கொள்ளையராக இருந்தவர்தான். ரத்னாகர் என்ற இயற்பெயருடன் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த அவர், ஒரு நாள் நாரத முனிவரிடம் திருட முனைகிறார். அப்போது நாரத முனிவர் அறிவுரை கூற, தவம் மேற்கொள்கிறார். பல்லாண்டுகள் கழிந்து தவச்சீலராக – ரிஷியாக வெளிப்படுகிறார். அவரே வால்மீகி என்று அழைக்கப்பட்டார். இது வரலாறு.

நான்காம் வருணத்தை சேர்ந்தவர் என்பதாலேயே தவம் செய்த சம்பூகன் வெட்டி வீழ்த்தப்பட்டான் என்றால், திருடராய் இருந்த ரத்னாகர் தவம் செய்து மகரிஷியாக உயர அனுமதிக்கப்பட்டது எப்படி?

நாரதர் கூறித்தான் சம்பூகனை ராமர் கொன்றார் என்றால், திருடரான வால்மீகியை தவம் செய்யுமாறு நாரதரே ஆற்றுப்படுத்தியது எவ்வாறு?

இன்றைக்கும் ராமாயணம் பாராயணம் செய்யும்போது முதலில் வால்மீகியை வணங்கிவிட்டே தொடங்குகிறார்கள். “ வந்தே வால்மீகி கோகிலம்” ( வால்மீகி என்னும் குயிலுக்கு நமஸ்காரம் என்று பொருள்) என்று கூறிவிட்டுத்தான் தொடங்குகிறார்கள். ஒரு காலத்தில் திருடனாக இருந்தவருக்கு இன்று வரை இத்தனை மரியாதை கொடுக்கப்படுகிறதே, இது எப்படி சாத்தியம்?

தாழ்ந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பதால்தான் சம்பூகன் கொல்லப்பட்டான் என்று வாதிட்டால், ராமபிரானால் கொல்லப்பட்ட ராவணன் பிராமணன் ஆயிற்றே, அவனை ஏன் வதம் செய்ய வேண்டும்? (ராவணன் பிறப்பால் பிராமணன். விஸ்ரவஸ் எனும் ரிஷியின் மைந்தன். அதனால்தான், பிராமணனைக் கொன்றதால் ஏற்படும் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க ராமேசுவரத்தில் உள்ள சிவலிங்கத்தை ஸ்ரீராமர் வழிபட்டு யாகம் செய்ததாக ராமாயணம் கூறுகிறது. அதனால்தான் அந்தச் சிவலிங்கத்துக்கு ராமநாத சுவாமி என்று பெயர் வந்தது.)

ஸ்ரீராமர் ஜாதி பேதம் பார்க்கக் கூடியவர் என்றால், ஒரு சாதாரண வேடனாகிய குகனை தன்னுடைய சகோதரனாக ஏற்றுக் கொண்டது எப்படி? குகனைக் கட்டித் தழுவி ‘குகனோடு ஐவரானோம்’ என்று எப்படிச் சொல்லியிருக்க முடியும்?

பழங்குடியின மூதாட்டியான சபரி பக்தி மேலீட்டில் கடித்துத் தந்த கனிகளை முகம் சுழிக்காமல் பெற்று உண்ட ராமபிரான், சாதி பேதம் பார்த்தவரா?

இவற்றிலிருந்தே சம்பூக வதத்தை முன்வைத்து இன்று கிளப்பி விடப்பட்டிருப்பவை அனைத்தும் அரசியலுக்காக உருவாக்கப்பட்ட புளுகு மூட்டைகள் என்பதை தெளிவாக உணர முடியும்.

ராம ராஜ்ய ரத யாத்திரையை காரணமாகக் கொண்டு ராமாயணத்தை படிக்க ஆரம்பித்திருக்கும் நாத்திகர்களுக்கு புண்ணியம் உண்டாகட்டும் !

 

கோலாகல ஸ்ரீநிவாஸ்

One thought on “சம்பூக வதம்: சர்ச்சைகளுக்குப் பதில்

  1. Sri Vedanta Desika refers to “Sampooka Vatham” in his Raghu Veera Gadhyam. This episode also finds mention in Padma Puranam. Varna Dharma was followed by Sri Rama as per those days.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *