இந்தியாவில் இளைஞர்களிடையே அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமல்ல என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) விளக்கம் அளித்துள்ளது. சமீப காலமாக இந்திய இளைஞர்கள் மாரடைப்பு மற்றும் சில காரணங்களால் திடீர் மரணம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இளைஞர்கள் திடீர் மரணம் அடைய கோவிட் தடுப்பூசி காரணம் என்று கூறுவது சரியல்ல. நாட்டில் இளம் வயதினரிடையே மரணத்தின் அபாயங்கள் கோவிட் தடுப்பூசியால் அதிகரிக்கவில்லை. குடும்பத்தை சார்ந்த முன்னோர்களுக்கு இதுபோன்ற திடீர் மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசி காரணமாகத்தான் இளைஞர்களுக்கு மாரடைப்பு நோய் வருகிறது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகியது. இதனால் அண்மையில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் ஐ.சி.எம்.ஆர்., விளக்கம் அளித்துள்ளது