தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருமே ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அறநிலையத்துறையில் யார் பணிக்குச் சேர்ந்தாலும் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் சாமி சிலை முன்பு நின்று ”தான் ஒரு ஹிந்துதான்” என்பதற்காக உறுதி மொழியேற்க வேண்டும் என்ற விதி ஏற்கனவே இருந்து வருகிறது. ஆனால் பலர் இப்படிப்பட்ட ஒரு உறுதி மொழியை எடுத்ததாகத் தெரியவில்லை. இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எட்டு வாரங்களுக்குள் கோயிலில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இந்த உறுதி மொழி எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.
கோயிலில் பணியாற்றுகிறவர்கள் ஹிந்துவாக அறிவித்துக் கொண்டால் மட்டும் போதாது. நமது வழிபாட்டு முறைகளில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். தங்கள் வீட்டுக்கு படியளப்பதே அந்தக் கோயில்தான் என்பதை அவர்கள் மறக்கக் கூடாது.
”சிவன் சொத்து குல நாசம்” என்பது பழமொழி மட்டுமல்ல. கோயில் சொத்துக்களை அபகரிப்புச் செய்யும் பாவம் அவனது குடும்பத்தையே பாதிக்கும் என்பதை அறநிலையத்துறையினர் நினைவில் கொள்ளட்டும்.
ஆட்சியில் எந்தப் பதவியும் கிடைக்காதவர்கள் பலர் பிரபலமான கோயிலுக்குத் தர்ம கர்த்தாக்களாகி விடுகின்றனர். இவர்களது நோக்கம் கோயில் வளர்ச்சி அல்ல, கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பதே இவர்கள் நோக்கம்.
அனைத்துக்கும் தீர்வு ”அரசு ஆலயத்தை விட்டு வெளியேறுவது” என்பது தான்.