ஒவ்வொரு பிறவியிலும் ஒன்றாக . . .

பாரத பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யா, தாஷ்கண்ட் நகரில் நடை பெற்ற முக்கியமான ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தார். முக்கியத்துவம் வாய்ந்த தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். துரதிர்ஷ்டவசமாக அன்று இரவே காலமானார்.

இதுபோன்று ஒரு உயர்ந்த பதவியில் உள்ளவர் காலமானால் அவரது மனைவியோ, குடும்பத்தினரோ அனுதாபத்தினால் ஒரு உயர் பதவிக்கு வரவிரும்புவார்கள்.  உதாரணம்  –  நேரு குடும்பம்.

ஆனால் சாஸ்திரியின் மனைவி லலிதா சாஸ்திரி இதற்கு மாறாக இருந்தார். அவருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி தர அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விரும்பினார். ஆனால் லலிதா சாஸ்திரி அதற்கு நன்றிகூறி அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

அதே நேரம் தனது மறைவுக்குப் பிறகு சாஸ்திரியின் கல்லறைக்குப் பக்கத்தில் தனது கல்லறை அமையவேண்டுமென்ற ஆவலைத் தெரிவித்தார். அவருடைய வேண்டுகோளை அரசு ஏற்றது. லலிதா சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு அவரது கல்லறை சாஸ்திரியின் கல்லறைக்கு அடுத்து அமைந்துள்ளது. அந்த கல்லறை ‘‘ஜனம் ஜனம் கா ஸாத்’’ (ஒவ்வொரு பிறவியிலும் ஒன்றாக) என்று அழைக்கப்படுகிறது. இந்திய பெண் என்ற சொல்லின் உண்மையான அர்த்தமாக விளங்கினார்.