கேரளாவில் சமீபத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தது. இதில், நார்வே நாட்டைச் சேர்ந்த, ஜேன் மீட் ஜோஹன்சன், 71, என்ற பெண் பங்கேற்றார். அத்துடன், சமூக வலைதளங்களில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, கருத்துகள் பதிவிட்டார். இந்தியாவுக்கு, சுற்றுலா விசாவில் வந்தவர், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதும், சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்ததும், விசா விதிகளை மீறிய செயல்.
இதையடுத்து, கொச்சியில் ஜேன் மீட் ஜோஹன்சன் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்ற குடியேற்றத்துறை அதிகாரிகள், அவரை உடனடியாக, இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு கூறினர். விசா விதிமுறைகளை மீறிவிட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவரிடம் தெரிவித்தனர்.’எழுத்துப் பூர்வமாக காரணங்களை தெரிவித்தால் தான், இந்தியாவை விட்டு வெளியேற முடியும்’ என அதிகாரிகளிடம், நார்வே பெண் தெரிவித்தார்.
‘எழுத்துப் பூர்வமாக ஏதும் தரமுடியாது; மீறி தங்கினால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என, அவரிடம், குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, நார்வே பெண், துபாய்க்கு சென்று, அங்கிருந்து நார்வே செல்ல முடிவு செய்து உள்ளார்.