தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) தலைவர் பிரியங் கனூங்கோ, மேற்குவங்க மாநிலம் தில்ஜாலாவில் ஏழு வயது சிறுமி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அங்கு சென்றபோது, மூத்த காவல் ஆய்வாளர் ஒருவரால் தாக்கப்பட்ட அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொண்ட கனூங்கோ, தில்ஜாலா காவல் நிலையத்தில் ஒரு காவல் அதிகாரியான பிஸ்வாக் முகர்ஜி, தன்னை தாக்கியதாகக் கூறினார். மேலும், ஆணையத்தின் விசாரணை நடவடிக்கைகளை உள்ளூர் காவலர்கள் ரகசியமாக பதிவு செய்தனர். அதனை கையும் களவுமாக கண்டறிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக தன்னை அடித்தார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்து உள்ளது என்பது குறித்து குற்றம் சாட்டி, இதுகுறித்து வருத்தம் தெரிவித்த மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ.க தலைவருமான சுவேந்து அதிகாரி, “குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டம், 2005ந்படி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சட்டப்பூர்வ அமைப்பாகும். அந்த ஆணையத்தின் தலைவர், தில்ஜாலா காவல் நிலையத்தில் தாக்கப்பட்டார். அதுதான் மேற்கு வங்கத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை” என தனது டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.
“இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேற்கு வங்காளத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தன் கடமையைச் செய்ததற்காக அடிக்கப்படுவது மிக மோசமானது. இதைவிட மோசமானது வேறு என்னவாக இருக்க முடியும்? இது மாநிலம் மற்றும் வங்காள காவல்துறைக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மன்னிக்க முடியாதது” என்று மேற்குவங்க பா.ஜ.க தலைவர் டாக்டர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொல்கத்தாவின் தில்ஜாலா பகுதியில், 7 வயது சிறுமி நரபலி கொடுத்து கொல்லப்பட்ட விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. மார்ச் 26 அன்று, அந்த சிறுமியை அலோக் குமார் என்பவர் கொடூரமாக தாக்கி கொன்றதாக தகவல்கள் வெளிவந்த சில மணிநேரங்களில் இந்த வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்தது. அதிகாரிகளின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்காக ஒரு குழந்தையை தியாகம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இதனையடுத்து அலோக் குமார், அந்த சிறுமியை கடத்தி கொலை செய்துள்ளார். சிறுமி கடத்தப்பட்டு கொல்லப்பட்ட அதே கட்டடத்தில் சிறுமியின் உடலை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா இல்லையா என்பதை அறிய, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் பெற்றோரின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை காலை அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் குப்பைகளைக் கொட்ட சென்ற சிறுமி, அதன் பிறகு காணாமல் போனார். அதுகுறித்த புகார் மற்றும் பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு, குழந்தையின் சடலத்தை காவலர்கள் கண்டுபிடித்தனர். காணாமல் போனசிறுமியைத் தேடுவதில் காவல்துறையினர் தாமதம் செய்ததாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் கொல்கத்தா காவல்துறைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். குற்றவாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தியதுடன், பல வாகனங்களையும் சேதப்படுத்தி நாசவேலையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனூங்கோ, “மைனர் சிறுமி கொலை வழக்கில் தில்ஜாலா காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கூறப்படும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டினார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரிக்கு போக்சோ சட்டம் குறித்த பயிற்சி எதுவும் இல்லை. அவர்கள் கைப்பற்றிய பொருட்களில், சிறுமி அடித்துக் கொல்லப்பட்ட படுக்கைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், மருத்துவர் மற்றும் இறந்தவரின் தாயாரின் வாக்குமூலங்களில் வேறுபாடுகள் இருக்கின்றன. காவல்துறை என்னை அச்சுறுத்த முயற்சிக்கிறது. நாட்டின் எந்த பகுதியிலும், சட்டம் மற்றும் ஒழுங்கு இதைவிட மோசமாக இருக்க முடியாது” என்று குற்றம் சாட்டினார்.