கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவு, சமீபத்திய வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவுகளில் ஒன்றாகும். பனிப்பாறை உருகியது, பனிப்பாறை உடைந்தது, பனிப்பாறைகள் ஏற்படுத்திய நீர் தேக்கத்தில் இருந்த மரம் செடி, கொடி சகதிகள் என அனைத்தும் கீழே பாய்ந்து, பாதிப்பை ஏற்படுத்தியது, வரலாற்றில் இதுவரை அறியப்படாதது.
வெள்ளப்பெருக்கு என்றால் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளத்தின் அளவு உயர்ந்து வரும். இந்த வெள்ளப்பெருக்கு அப்படிப்பட்டதல்ல. 30 அடி உயரம் கொண்ட நீர்ச்சுவர், கட்டிடங்களை கபளீகரம் செய்தது. ஒரு நொடிப் பொழுதில் அனைத்தையும் வாரிச் சுருட்டியது. யாருக்கும் எந்த அவகாசமும் இல்லை. தப்பிச் செல்ல வழியும் இல்லை.
வெப்பநிலை உயர்வதும், இமயமலையின் பனிப்பாறைகள் வேகமாக சுருங்குவதும் எளிதில் கணிக்கப்பட முடியாதவை. ஆறுகளுக்கு அருகே அமைக்கப்படும் மின் உற்பத்தி நிலையங்கள், கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் போன்றவற்றால் ஏற்படக்கூடும் ஆபத்துகள் பற்றி விழிப்புணர்வு இல்லாதது இதற்கு ஒரு காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் போன்ற சுற்றுச்சூழல் பற்றிய எச்சரிக்கையை, நாம் எளிதில் புறந்தள்ளி விட முடியாது.
நேபாளத்தில் ஏற்பட்ட சீற்றம், அந்த நாட்டோடு முடிவடையக்கூடியது அல்ல. திபெத், சீனா, பாரதம், வங்கதேசம், பூடான் என்ற நாடுகளுக்கும் ஆபத்தை விளைவிக்க வல்லது. குறிப்பாக பாரதத்தின், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பிஹார், மேற்குவங்கம், இமாச்சலப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக் போன்ற பகுதிகளில். அதிகம் கண்காணிப்பு தேவை. மழைப்பொழிவை மட்டும் கண்காணிப்பதல்ல, மலையின் மேலே வரும் ஆபத்தையும் கண்காணிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். உத்தரகாண்ட் பகுதியில் மட்டும் 426 பெரிய glacier Lake கள் இருப்பதாகவும், அவற்றில் 25 எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலையில் இருப்பதாகவும் கணிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சீற்றம் இமயமலையின் மாறிவரும் அபாய சூழலுக்கான எச்சரிக்கை என்பதை புரிந்து கொண்டு இமயமலை முழுவதையும் ஒரு பேரிடர் மண்டலமாக கருதி இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறனர். இதுவே சரியான நேரம். இயற்கையை மதிப்போம், இன்னல்களை தவிர்ப்போம்.