பத்திரிகையாளர், புனைகதை எழுத்தாளர், கலை விமர்சகர், கட்டுரையாளர், பாடல் ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி. தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களான ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’ மற்றும் ‘பார்த்திபன் கனவு’ ஆகியவற்ைற எழுதியவர். கிருஷ்ணமூர்த்தி, 1899-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகிலுள்ள பட்டமங்களம் கிராமத்தில் ராமசாமி ஐயங்கார்–தையல்நாயகி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்க கல்வியை தனது கிராமத்தில் முடித்த அவர் பிறகு உயர் கல்விக்காக திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல், மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி, தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் கரூரில் நாமக்கல் கவிஞர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசியதால், ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார். 1923-ம் ஆண்டு, திரு.வி.க நடத்தி வந்த `நவசக்தி’ என்னும் பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது ‘விமலா’ என்ற முதல் நாவல் `சுதந்தரன்’ பத்திரிகையில் வெளியானது.
‘ஆனந்த விகடன்’ பத்திரிக்கைக்கு ‘ஏட்டிக்குப் போட்டி’ என்ற நகைச்சுவைக் கட்டுரையை எழுதி அனுப்பினார். பொறுப்பாசிரியர் எஸ்.எஸ்.வாசனுக்கு அது பிடித்திருந்ததால், விகடனில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ‘கல்கி’ `தமிழ்த்தேனீ’, `அகஸ்தியன்’, `லாங்கூலன்’, `ராது’, `தமிழ்மகன்’, `விவசாயி’ போன்ற பெயர்களில் எழுதி வந்தார். ராஜாஜியின் ‘விமோசனம்’ பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியாற்றி உள்ளார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்று விடுதலையானதும், ஆனந்தவிகடன் இதழின் பொறுப்பாசிரியரானார். இவரது முதல் தொடர்கதையான ‘கள்வனின் காதலி’, திரைப்படத்துக்காக இவர் எழுதிய ‘தியாகபூமி’ ஆகியவை வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
`கல்கி’, டி.சதாசிவத்துடன் சேர்ந்து சொந்தமாக பத்திரிகை தொடங்க விரும்பினார். சதாசிவத்தின் மனைவி எம்.எஸ்.சுப்புலட்சுமி வழங்கிய நிதியுதவியுடன் ‘கல்கி’ பத்திரிகை தொடங்கப்பட்டது. இவரது படைப்பாற்றலால் பத்திரிகை விரைவிலேயே அபார வெற்றி பெற்றது. ‘மீரா’ திரைப்படத்துக்கு கதை, வசனத்துடன், ‘காற்றினிலே வரும் கீதம்’ உள்ளிட்ட சில பாடல்களையும் எழுதியுள்ளார். 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். 1942-ஆம் ஆண்டு இவர் எழுதிய “அலை ஓசை’ என்ற சமூக புதினம் கல்கியில் தொடராக பிரசுரமானது. இந்த புத்தகத்துக்கு 1953 ஆம் ஆண்டுக்கான “சாஹித்ய அகாடமி’ விருது கிடைத்தது. தமிழிசை பிரபலமாகாத அந்த காலகட்டத்தில், தமிழிசைக்காகக் கல்கி சதாசிவம் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார். கல்கி, 1954ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தனது 55-வது வயதில் காலமானார். ‘கல்கி’யின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.