இந்துக்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் நெட்பிளிக்ஸ் – உரிமம் ரத்து செய்யக்கோரி போலீசில் சிவசேனா புகார்

இந்தியாவையும், இந்துக்களையும் குறித்து அவதூறு செய்யும் வகையில் நிகழ்ச்சி ஒளிபரப்புவதாக,  ஆன்லைன் சினிமா நிறுவனமான நெட்பிளிக்ஸ் மீது, மும்பை போலீசில் சிவசேனாவின் ஐ.டி. பிரிவு புகார் அளித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம், கட்டணம் பெற்றுக் கொண்டு ஆன் லைனில் சினிமா உள்ளிட்டவற்றை ஒளிபரப்புகிறது. இந்த நிறுவனம், இந்துக்களுக்கு எதிராகவும், அவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையிலும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாக, சிவசேனா கட்சி சார்பில், மும்பை லெப்டினண்ட் மார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சிவசேனா கட்சியின் தகவல் தொழில் நுட்பப்பிரிவு உறுப்பினர் ரமேஷ் சோலங்கி அளித்துள்ள புகாரில்,  நெட்பிளிக் நிறுவனம் ஒளிபரப்பும் ‘ஸ்கேர்டு கேம்ஸ்’, ‘லைலா’, ‘கவுல்’ போன்ற தொடர்கள், நகைச்சுவை நடிகர் ஹசன் மின்ஹாஜின் நிகழ்ச்சிகளில் இந்துக்களை தவறாக சித்தரித்து, கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்துக்கள் மீது தவறான தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

உலகவில் இந்தியாவின் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நெட்பிளிக் நிறுவனம் தொடர்களை ஒளிபரப்புகிறது. இந்தியாவில் ஆழமாக வேரூன்றியுள்ள இந்துத்வா கொள்கைக்கு தவறான நோக்கம் கற்பிக்கும் வகையில், அந்நிறுவனம் செயல்படுகிறது.

எனவே, இந்து மத உணர்வுகளுக்கு களங்கம் கற்பிக்கும் நெட்பிளிக் நிறுவனத்தின் தொடர்களை ஆய்வு செய்து, அதன் ஒளிபரப்பு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவின் நகல், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர நாத் பட்னாவிஸ் மற்றும் மும்பை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.