”ஆபரேஷன் சமுத்திரகுப்தா” தென்பாரதம் Vs தீயபோதை

தமிழகத்தில் நகரங்கள் தொடங்கி குக்கிராமம் வரை பரவியுள்ள போதைப் பொருள் கலாச்சாரம், இன்று பெரியவர்கள் தொடங்கி, இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்களையும் பாதித்துள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் மூலமாக தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், போதைப் பொருட்கள் புதிய வடிவங்களில் சாக்லேட், மாத்திரை, பவுடர் என பல முகம் கொண்ட அசுரனாக இளம்தலைமுறையினர் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களையும் ஆட்டிப் படைக்கிறது. இந்த சமூகத் தீமையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டுள்ள புதிய முயற்சிகள் பற்றிய ஆய்வு…

மத்திய உளவுத்துறை (ஐ.பி), தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) ஆகிய இரண்டின் கூரிய பார்வையும் தற்போது தமிழ்நாடு, கேரளம் கடலோரப் பகுதிகள் மீது திரும்பியுள்ளது. பாரத இறையாண்மைக்கு சவால்விடும் வகையில் நடக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத வலையமைப்பின் ஒரு பகுதி ஆகியிருப்பதுதான் காரணம்.
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் கை ஓங்கி வருவது ஒட்டுமொத்த தென் பாரத பாதுகாப்பு அமைப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, இதில் முக்கியமான இடைவழி மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. பல அரசியல்வாதிகள் இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு அளித்த ஆதரவின் காரணமாக, போதைப்பொருள் கடத்தல் நிறுவனமயமாகிவிட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே, தெற்குக் கடற்கரை சர்வதேச போதைப் பொருள் கடத்தலுக்கு வசதியான பகுதி ஆகியுள்ளது.
தமிழக ஆளுநராக இருந்த
ஆர்.என்.ரவி, மாநிலத்தில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் இயங்கி வருவதை 2024-ல் சுட்டிக்காட்டினார். அரை நூற்றாண்டுக்கும் மேலாகவே, தமிழ்நாட்டிலுள்ள கோடியக்கரை மீன்பிடித் துறைமுகம், கடத்தல்காரர்கள் தங்களுக்கு சாதகமான இடமாக ஆக்கியுள்ளார்கள். அபினை தமிழகத்தில் புழக்கத்தில் விட்டதில், இலங்கையிலிருந்து வரும் கடத்தல்காரர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இந்த வழித்தடம் பிரபலமடைந்ததால், படிப்படியாக அபினிலிருந்து மற்ற போதைப்பொருள்கள் கடத்தல் அதிகரித்ததாக உளவுத்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
சில நேரங்களில் இந்தக் கும்பல்களைக் கண்காணிப்பது கூட, கடினமாக இருப்பதாக போதை தடுப்புத் துறை (என்.சி.பி) அதிகாரி திடுக்கிடும் தகவல் தருகிறார். போதைப்பொருட்களைக் கொண்டுவரப் பயன்படுத்தப்படும் தமிழ்நாட்டின் கடற்கரை 1,076 கிலோமீட்டர் நீளமானது. கடத்தல்காரர்களுக்கு சரியான மறைவிடமாக ஆக்கப்பட்டுள்ள (7 லட்சம் மீனவர்கள் வசிக்கும்) 59 மீனவக் கிராமங்கள் இங்கு உள்ளன. அவர்களில் சிலர் இந்தக் கும்பல்களுக்கு பாதுகாப்பு மற்றும் தளவாட உதவிகள் இரண்டையும் வழங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு தொடர்ச்சியான கண்காணிப்பும், உள்ளூர் மக்கள் / உள்ளூர் நிர்வாகத்தின் ஆதரவும் இருக்க வேண்டும் என்றும், இது தென் பாரத பாதுகாப்புக்கே மிகப்பெரிய பேரிடியாக மாறிவிடும் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறுகிறார்.
போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் முக்கிய மையமாக தமிழ்நாடு மாறியுள்ளதில், பாகிஸ்தான் கடல் வழியைப் பயன்படுத்தி, இலங்கையில் போதைப் பொருட்களை இறக்கி, பின்னர் அவற்றை எளிதாகத் தமிழகத்திற்குள் கடத்துகிறார்கள். இந்த கடத்தல் தொழிலுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு (ஐ.எஸ்.ஐ) ஆதரவு பெற்ற ஒரு கும்பல் பின்புலத்தில் இருப்பதாக, மத்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான, மாநில அரசின் செயல் திட்டம் என்ன என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றம் வினவியது; இதிலிருந்தே நிலைமை நன்கு புரிந்திருக்கும். மாநில அரசு போதைப் பொருள் ஆபத்தைக் மட்டுப்படுத்துவதில், தோல்வியடைந்து விட்டது என அப்போதே உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி விட்டது. மாநிலம் முழுவதும், குறிப்பாக மாணவர்களிடையே, போதைப்பொருட்கள் தராளமாகத் கிடைப்பதையும் உயர்நீதிமன்றம் சாடியது. போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான விசாரணைகளின் போது, தமிழக காவல்துறையைக் கண்காணிக்குமாறு
சி.பி.ஐ.க்கும், என்.சி.பி.க்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மாநில அரசும் உடந்தை என்பதற்கான அறிகுறி காட்டியதா அந்த உத்தரவு? இதற்கு முக்கியக் காரணம், பாகிஸ்தானிலிருந்து வரும் போதைப்பொருட்கள் தரையிறங்கும் ஒரே இடமாக தமிழகம் மாறியிருப்பதே.
தற்போது பாரதத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய விசை ஹாஜி சலீம், ஐ.எஸ்.ஐ-.யின் கைக்கூலி. போதைப்பொருள் வருமானத்தில் 40 சதவீதத்தை ஐ.எஸ்.ஐ-யிடம் ஒப்படைத்து, அதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதே இவர் பணி. ஐ.எஸ்.ஐ, தன் பங்கிற்கு, இந்தக் கும்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து, போதைப்பொருள் வர்த்தகம் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்கிறது என்றும், சலீமும் தாவூத்தைப் போலவே ஐ.எஸ்.ஐ எடுபிடி என்றும், உளவுத்துறை அறிக்கை ஒன்று கூறுகிறது.
2015ல், பாகிஸ்தானுடனான எல்லைகள் பலப்படுத்தப்பட்டபோது, நம் நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டுவரும் பாதை மாறியது. அந்த எல்லை வழியாக சலீம், தாவூத் ஆகியோரால் போதைப்பொருள் கொண்டுவருவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக மாறியது. ஏறக்குறைய அதே காலகட்டத்தில்தான், ஐ.எஸ்.ஐ இலங்கையில் உள்ள தனது துணைத் தூதரகத்தில் ஒரு பயங்கரவாதப் பிரிவை அமைத்தது.
இந்தக் குழு, தென் பாரத பகுதிக்குள் பயங்கரவாதிகளை அனுப்புவதோடு நில்லாமல், போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் பெருமளவில் ஆதரவளித்தது. சலீம் இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தனது கைக்கூலிகளைத் தென் மாநிலங்களுக்கு அனுப்பி, அதிகார வர்க்கத்துடன் நன்கு பரிச்சயமான முஸ்லிம் நபர்களை அடையாளம் கண்டார். இலங்கையிலிருந்து, தமிழ்நாட்டிற்குக் கடத்தல் பொருள் கொண்டு வருவது ஒப்பீட்டளவில் எளிதாக இருந்ததால், இந்த நடவடிக்கையின் பெரும்பகுதி தமிழ்நாட்டில் மையமிட்டது. இது 2015 முதல் தடையின்றித் தொடர்கிறது, தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் மத்திய புலனாய்வு அமைப்புகள், கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
தமிழகத்தின் பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் புழக்கம் பரவலாக உள்ளது. அதுவும் அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் போதை / டாஸ்மாக் மது புழக்கம்தான் கொடூரம். இளம் மாணவர்களுக்கும் கிடைக்கும் அளவுக்கு போதை பொருள் வரத்து அதிகரித்துள்ளது. இளம் வயதிலேயே போதைப் பொருள் சகவாசத்தால் கண்மூடித்தனமான குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் திடுக்கிடச் செய்கின்றன. சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் கத்தியால் தாக்கி உள்ளனர். சமீபத்தில் திருத்தணியில் நான்கு சிறார்கள் வடமாநில இளைஞரை வெட்டியதே சாட்சி! தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமையிலும், கொலை, கொள்ளைகளிலும் இறங்கும் நபர்கள் போதை அடிமைகளாகவே இருக்கிறார்கள்.
2025ல், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டலத்தினர் மட்டுமே 2,362.770 கிலோ போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இதில் 2,344.470 கிலோ கஞ்சா, 11.725 கிலோ கொடிய செயற்கை போதைப் பொருள். சுங்கத்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையில் 7.618 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்துள்ளனர். இந்தக் கடத்தல் வழக்குகளில் மொத்தம் 46 பேர் பிடிபட்டுள்ளனர். கடத்தலும் அதிகரிக்கிறது, கைப்பற்றுவதும் தொடர்கதையாகவே இருக்கிறது.
ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் கடத்துவதற்கு (நம் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் வகையில்) சீனா அதே வழியைப் பயன்படுத்தத் தொடங்கியது. 2011ல் தான் தென் மாநிலங்களில் சீனக் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் பலர் அவர்களை `திபெத்தியர்கள்’ என்று நினைத்தனர், ஆனால் சீனர்கள் என்பதும், இவர்கள் போதைப்பொருள், ஆயுதங்கள் இரண்டையும் கடத்துவது இதே வழியில்தான் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானியர்கள் உலகின் பிற பகுதிகளுக்கு போதைப்பொருள் கடத்துவதற்கு இதே வழியைத்தான் பல பத்தாண்டுகளாக பயன்படுத்தி வந்தார்கள். குஜராத் / மகாராஷ்டிரா கடற்கரை வழியாக, அல்லது ஜம்மு- − காஷ்மீர் தான் முன்பு பாகிஸ்தானியர்களின் வழக்கமான பாதையாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளாக, பாரதம் பாதுகாப்பை இறுக்கியதால், இந்தப் பாதை வழியாக அவர்கள் போதைப்பொருள் கடத்தும் வாடிக்கையில் மண் விழுந்தது. புலனாய்வு அமைப்புகள் அவர்களை முறியடித்ததால், இந்தப் பாதை வழியாக அதிக அளவிலான போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
கடத்தல் கும்பல்கள் ஒரு மாற்றுத் திட்டத்தை நாடின. விடுதலைப் புலிகள் இயக்கம் செயலிழந்த சூழலில், ஐ.எஸ்.ஐ இலங்கையில் லஷ்கர்-−இ-−தொய்பாவின் பிரிவுகளை அமைத்தது. தொடக்கத்தில், இந்தப் பிரிவுகள் இலங்கையில் உள்ள முஸ்லிம் இளைஞர்களைச் சேர்த்துப் பயிற்சி அளித்து, பின்னர் அவர்களைத் தென் பாரதத்தில் தாக்குதல்களை நடத்த அனுப்பும் என்பது திட்டம். இதன் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், தென்னிந்தியாவில் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை நிறுவுவதே உண்மையான நோக்கமாக இருந்தது. இலங்கையில் பெரும்பாலான போதைப்பொருள் கும்பல்கள் ஒரு பெரிய அரசியல் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஐ.எஸ்.ஐ.-யால் இந்தச் சந்தையை எளிதாகக் கைப்பற்ற முடிந்தது.
ஐ.எஸ்.ஐ-.யின் முகவர்கள் பாகிஸ்தானிலிருந்து நேரடியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி, பின்னர் அங்கிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு விநியோகித்து வந்தனர். பாரதத்திற்கானக்கான போதைப்பொருள் வழித்தடமானது, சீனர்கள் பயன்படுத்திய அதே வழித்தடமாகவும், இலங்கையின் பழங்கால கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வந்த அதே வழித்தடமாகவும் இருந்தது. இந்த விரிவான வலையமைப்புதான் தமிழ்நாட்டை போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு முக்கிய மையமாக மாற்றியுள்ளது. உண்மையில், நமது மாநிலம் நாட்டின் போதைப்பொருள் தலைநகரங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாகச் செயல்பட்ட தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஒருவர் கைது செய்யப்பட்டார். பாரத, ஆஸ்திரேலிய, நியூசிலாந்து போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் சூத்ரதாரி அவர்தான் என்பதை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்.சி.பி) கண்டறிந்திருந்தது. போதைப்பொருள் கடத்தல் மாஃபியாவின் பின்னால், சில செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் இருந்தாலன்றி போதைப்பொருட்களை இவ்வளவு எளிதாகக் கடத்தியிருக்க முடியாது என்று இதுபற்றி விசாரிக்கும் அதிகாரிகள் நம்புகின்றனர்.
மியான்மரிலிருந்து பெறப்படும் இந்த போதைப்பொருள் முதலில் மணிப்பூருக்குக் கடத்தப்படுகிறது. பின்னர் அது தமிழ்நாட்டிற்கு வருகிறது. இந்தப்
பொருள் மணிப்பூரிலிருந்து ராமேஸ்வரம், தூத்துக்குடி அல்லது நாகப்பட்டினத்திற்கு பேருந்து, ரயில் அல்லது கார்
மூலம் மறைவான பெட்டிகளில் அனுப்பப்படுவதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிருந்து அது இலங்கைக்கும், அங்கிருந்து மற்ற வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. தமிழக நகரங்களிலும், அகதிகள் முகாம்களிலும் வசித்து வரும் ஏராளமான இலங்கையர்களை போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இந்த வேலையில் பணியமர்த்தியுள்ளன என்பது தேசத்தின் கவனம் பெறுகிறது.

 

பலே சமுத்திரகுப்தா!

பயங்கரவாத அமைப்புகள் தங்களுக்குத் தேவையான நவீன துப்பாக்கிகள், வெடி பொருட்கள் ஏவுகணைகள், தகவல் தொடர்பு சாதனங்கள் என பலவற்றையும் சர்வதேச கறுப்புச் சந்தையில் வாங்குவதற்கு பெருமளவில் பணம் தேவைப்படுகிறது. போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் கிடைக்கும் அசுர லாபம் இந்த ஆயுதங்கள் வாங்குவதற்கான முதன்மை நிதி ஆதாரமாக மாறுகிறது. இந்த அரக்கத்தனமான வர்த்தகத்தை முடக்குவதற்காக பாரத கப்பற்படையுடன் இணைந்து போதை தடுப்புத்துறை “சமுத்திரகுப்தா” என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு மாபெரும் வேட்டையை சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. பல பகுதிகளில் கடந்த இரு ஆண்டுகளில் ‘சமுத்திரகுப்தா’ நடத்திய வேட்டைகள் குறிப்பிடத்தக்கவை. கேரள கடற்கரையில் ரூ.15,000 கோடி, குஜராத் கடற்கரையில் ரூ.12,000 கோடி பெறுமானமுள்ள போதைப் பொருள் பிடிபட்டது என வெற்றிச் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. இரண்டுமே ஹாஜி சலீம், தாவூத் கும்பல் தொடர்பு உள்ள கடத்தல்கள்.

சங்கம், சமிதி: போதைக்கு கண்டனம்

சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் மோசமான போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதால், இதனைத் தடுக்க கடுமையான கூட்டு முயற்சி தேவை என்று ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பாகவத் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக ஊடகங்கள், திரைப்படங்கள் சில ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் காட்டப்படும் முறையற்ற பொழுதுபோக்கு அம்சங்களே பெண்கள் / இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிக்க முக்கியக் காரணம் என்று ‘ராஷ்ட்ர சேவிகா சமிதி’ நிறைவேற்றியுள்ள தீர்மானம் குறிப்பிடத்தக்கது.