போதையை ஊரளவில், உலகளவில் ஒழிக்க அரசாங்கம் செய்யும் முயற்சியை விவரிக்கும் இந்த வார அட்டைப்படக் கட்டுரையைப் படித்துவிட்டு வாசகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட முடியாது. காரணம், அதற்கான காலம் கனிந்துவிடவில்லை.
நமக்கு நம் குடும்பம் நல்லபடியாக இருப்பது முக்கியம்; நல்ல குடும்பத்தைப் பின்பற்றி ஊரின் மற்ற குடும்பங்கள் நல்ல பாதையில் நடைபோடச் செய்யும் நோக்கில்,
ஆர்.எஸ்.எஸ் போன்ற பொறுப்புள்ள தேசிய சக்திகள் செய்யும் தவம் பலிக்க, சமுதாயம் கூட்டுப்பொறுப்பேற்க வேண்டும். அப்போதுதான் போதை நிர்மூலமாகி அது குடும்பத்திற்குள் உடன் அழைத்து வரும் பல தீமைகள் அண்டாது. விலைமாதர், சூதாட்டம் என்னும் இரண்டு அதிகாரங்களுக்கு நடுவில் கள்ளுண்ணாமை அதிகாரத்தை வைத்த திருவள்ளுவரின் வைப்புமுறை இந்த வகையில் பொருள் பொதிந்தது.
“போதையால் மயங்கிவிழும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது, ஏனைய சான்றோர்கள் அவனை எப்படி சகித்துக் கொள்வார்கள்?” என்று கேட்கிறார் திருவள்ளுவர் (‘ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி?’ _ குறள் 923). சிறுவயதிலேயே பிள்ளைகளை கண்டித்து வளர்க்கும் பெற்றோரின் பொறுப்பை சுட்டும் இந்த குறள் நமக்கு உணர்த்தும் பாடம் இது.
தாயன்பு அபார சக்தி வாய்ந்தது என்பதற்கு, முகலரை மண்கவ்வச் செய்த சத்ரபதி சிவாஜி கட்டிய ஹிந்து சாம்ராஜ்யமே சான்று. எனினும் லவ் ஜிகாத், சீருடை ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு ஜிகாத்களின் ரூபத்தில் அதே முகலர் பாணி இன்றும் ஊருக்குள் தென்படுவதால், ஹிந்து குடும்பங்களின் ஒவ்வொரு தாயும் ஜீஜாபாய் போல பிள்ளையை (போதை அண்டாதபடி வளர்ப்பதுடன்) ஹிந்து என்பதில் சமரசமில்லாத பெருமிதம் கொள்பவனா(ளா)க வளர்ப்பது முக்கியம்.
கெட்ட சகவாசத்தால் போதை வலையில் விழுந்த பிள்ளை, அதை ஒவ்வொரு முறை நாடும் போதும் நல்ல சகவாசத்தின் சூழல் கிடைக்கச் செய்வதில் தாயும், தந்தையும் சுறுசுறுப்பாகிட வேண்டும். ஹிந்து என்பதில் சமரசமில்லாத பெருமிதம் கொள்கிறவர்களின் சங்கத்தில் அவன் சங்கமிக்கச் செய்வது குடும்பத்திற்கே வெற்றி தரும்.
நல்ல குடும்பத்தை உருவாக்கும் பொறுப்பை சமுதாயம்தான் நிறைவேற்ற முடியும். சமுதாயம் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற மத்திய அரசோ, மாநில அரசோ உறுதுணையாக இருப்பதுதான் போதை ஒழிப்பு யுத்தத்தில் தேசம் முழு வெற்றி அடைய உதவும். தேசத்தின் நிஜ சக்தி சமுதாயமே என்பது உலகிற்கு பாரதத்தின் சேதி. எந்த ஒரு டீப் ஸ்டேட் சதியையும் தகர்க்கும் ஆற்றல் கொண்டது தேசத்தின் இந்த சக்தி.