ஆசிரியரின் முயற்சியால் மலைவாழ் மாணவனுக்கு கல்வி கிடைத்தது

ராஜஸ்தான் மாநிலம் பிராத்தாப்கர்க் மாவட்டத்தில், கட்டரான் ககேரா என்ற கிராமத்தில் மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் பள்ளிக்கு வராமல் போன காரணத்தை ஆசிரியர் ஷிவ் பகவான் ஆராய்ந்தார். கேசவராம், கண்ணய்யாலால் என்ற அந்த இரு மாணவர்களும் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டார்கள். நன்றாக படிக்கும் மாணவர்கள் நின்றதால் காரணத்தை தெரிய ஆசிரியர், அவர்களின் வீட்டுக்கு சென்றார். அங்கு கிடைத்த செய்தி அவருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. அந்த குழந்தைகளை அவரது தந்தையும் பாட்டியும் ரூ.20,000 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஒரு பணக்காரரிடம் ஒரு வருடத்திற்கு ஆடு மேய்க்க அடமானம் வைத்துவிட்டார்கள் என்பது தெரிய வந்தது. எப்போதாவது மாணவர்கள் வேலைக்கு போவார்கள் என்று கேள்வி பட்டிருப்போம். ஆனால் மாணவர்களை கொத்தடிமைகளாக பணம் பெற்றுக் கொண்டு அடமானப் பொருளாக வேலைக்கு அனுப்பியதை இப்போதுதான் பார்க்கிறோம் என்று ஆசிரியர் தெரிவித்துள்ளார். அங்குள்ள உள்ளூர் மக்களிடம் கேட்ட போது அந்த மாவட்டத்தில் இது போன்ற செயல்கள் சகஜம் என்றும் பல வருடங்களாக இவ்வாறு நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறுகிறார்கள். மிக குறைவான ஒரு சில சம்பவங்களே வெளியில் தெரிய வருகிறது என்றனர். சில மாதங்கள் முன்பு தான் 13 குழந்தைகளை அடமானமாக வைக்கப்பட்டதில் இருந்து மீட்கப்பட்டனர். இந்த செய்தியை அங்குள்ள பா.ஜ.கவின் எம்.எல்.ஏ.வும், எம்.பி.யும் சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் பேசியதன் மூலம் இந்த செய்தி வெளியுலகை எட்டியுள்ளது. மேலும் ஏன் இந்த மாவட்டத்தில் குறிப்பாக மலை வாழ் மாணவர்களை அடமானம் பெருகிறார்கள் என கேட்ட போது கிடைத்த செய்தி ஆச்சரியத்தை தந்தது, இந்த பழங்குடி மாணவர்கள் குறைவாக சாப்பிட்டு நிறைய வேலை செய்வார்கள் அர்பணி்ப்புடன் பிறருக்கு கீழ்படிந்து நடப்பார்கள். எனவே இத்தொழிலுக்கு இம்மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது தான் அந்த செய்தி. பள்ளிக்கு வராத இரு மாணவர்கள் தானே என்று என்னாமல் அவர்களின் மீது அக்கறையுடன் அன்பு செலுத்தி அவர்களின் கல்வியை தொடரச் செய்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.