நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 1.70 லட்சம் உயர்வு

அரசுப் பள்ளிகளில் சமீபகாலமாக குறைந்துவந்த மாணவர் சேர்க்கை அரசின் விழிப்புணர்வு முயற்சிகளால் நடப்பு ஆண்டில் 1.7 லட்சம் உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2 லட்சத்தைத்  தாண்டும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு  40,000-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் இயங்கின. அதில் 68 லட்சம் மாணவர்கள் வரை படித்து வந்தனர். அதன்பின் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி, ஆங்கில கல்வி மோகம், முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்தது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் 37,459 அரசுப் பள்ளிகளில் 44 லட்சத்து 13 ஆயிரத்து 336 மாணவர்கள் படித்தனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இதுவரை 45.83 லட்சமாக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 1.7 லட்சம் அதிகமாகும்.

பெற்றோரின் ஆங்கில மோகம் காரணமாக அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆங்கில வழி வகுப்புகளும் அதிகரிக்கப்பட்டன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர்கள் சீருடையின் நிறம், தரம் மாற்றப்பட்டன. இப்போது காலணிக்கு பதில் ஷூ வழங்கவும் முடிவாகியுள்ளது.

இதுதவிர பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன்பலனாக மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. இதை மென்மேலும் பலப்படுத்த அரசின் உதவியுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.