சென்னை உயர் நீதிமன்றம் 2016 டிசம்பர் 19 அன்று கொடுத்துள்ள உத்தரவு பலரின் கண்களை விரிவடையச் செய்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவர் தாக்கல் செய்த மனுவின் மீது சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் மத வழிபாட்டுத் தலங்களில் சட்டவிரோத நீதிமன்றம் செயல்படுவதை ஏற்க முடியாது என்பது தான் முக்கியமான வாசகம்.
நாடு முழுவதும் உள்ள ஹிந்து வழிபாட்டுத் தலங்களில் கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு வழங்குவதில்லை. சர்ச்சுகளில் பாவ மன்னிப்பு மட்டுமே வழங்கப்படுகிறதே தவிர கட்டப்பஞ்சாயத்து நடப்பதில்லை. நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு கூட முஸ்லிம்களின் மனம் புண்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, மசூதிகளில் மட்டுமே செயல்படும் ஷரியத் நீதிமன்றத்தைப் பற்றிய தீர்ப்பு என்று எண்ணி விடக்கூடாது என்பதால், கோயில், சர்ச், மசூதி போன்ற மத வழிபாட்டுத் தலங்களின் உள்ளே சட்டவிரோதமாக மற்றொரு நீதிமன்றம் செயல்படுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். பொது சிவில் சட்டம் தேவையில்லை, எங்களில் ஷரியத் சட்டப்படிதான் தீர்ப்பு வழங்க வேண்டும் என ஆட்சியாளர்களை மிரட்டி பணிய வைப்பவர்கள் முஸ்லிம்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. ஷாபானு வழக்கில் கொடுத்த தீர்ப்பை மாற்றும்படி சட்ட திருத்தம் கொண்டுவர அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியை நிர்பந்தப்படுத்தினார்கள் என்ற வரலாற்றையும் திரும்பிப் பார்க்க வேண்டும்.
உண்மையில் தனியான நீதிமன்றமாக மசூதிகள் செயல்படுகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என குரல் எழும்பும் போது, அதை கட்டுப்படுத்த, மத சார்பற்ற அரசியல் கட்சிகள், இஸ்லாமியர்களை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு, முஸ்லிம் பெண்களுக்கு எதிராக களம் காணும்போது, இவர்களின் உண்மை சொரூபம் வெளிச்சத்திற்கு வருகிறது.
அப்துர் ரஹ்மான்: லண்டனில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளேன். என்னுடைய மனைவி என்னை விட்டுப் பிரிந்து வாழ்கிறாள். அவரை சேர்த்து வைக்கக் கோரி சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஜித் ஷரியத் கவுன்சிலில் முறையிட்டேன். அவர்கள் என்னை மிரட்டி எனது மனைவியை நான் விவாகரத்து செய்து விட்டதாக கையெழுத்து வாங்கினர். இந்த ஷரியத் கவுன்சிலில் என்னைப் போல் பலர் புகார் செய்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் பல இடங்களில் சட்ட விரோதமாக இம் மாதிரியான ஷரியத் கவுன்சில் என்ற பெயரில் முஸ்லிம் ஜமாத்களில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என சங்க இயக்கங்கள் வாதிடும்போது, அதற்குக் கடுமையான விமர்சனங்களை வைக்கும் முஸ்லிம் அமைப்புகளும் முஸ்லிம்களின் வாக்குகளை நம்பியிருக்கும் திராவிட இயக்கங்களும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களும் இந்த வழக்கின் தன்மையைப் பார்க்க மறந்து விடுவார்கள். அப்துர் ரஹ்மான் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களைத்தான் பாரதிய ஜனதா கட்சியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஏழை, எளிய முஸ்லிம் குடும்பங்கள், தங்களின் திருமணம் தொடர்பான விவாகரத்துகளில் ஒருதலைபட்சமாக இந்த ஷரியத் கவுன்சில் தீர்ப்பு வழங்குகிறது. இதேபோல் சொத்து பிரச்சினையில் கூட இவர்கள் தீர்ப்பு வழங்குகின்றனர். இதற்கு மசூதிகளில் உள்ளவர்கள், ஜமா-அத்களில் ஷரியத் கவுன்சில் நடத்துவதற்கு சட்டப்படியான அங்கீகாரம் உள்ளது என்றும் முஸ்லிம் மக்கள் தங்களது குடும்ப பிரச்சினைகளை இந்த ஷரியத் கவுன்சிலில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என கூறிவருகின்றனர். இது உண்மையா என்பதையும் தெரிந்துகொள்ள விரும்புகின்றேன் என அப்துர் ரஹ்மான் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸ் துணை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ள விஷயம் மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விஷயம். ஷரியத்-கவுன்சில் மசூதிக்குள் செயல்பட்டு வருவதால், உள்ளே சென்று கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கோயில்கள், மடங்களில் உள்ளே சென்று விசாரணை நடத்தும் காவல்துறை அதிகாரிகள் மசூதிக்குள் செல்லக்கூடாது என சட்டம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்வியை ஏன் எழுப்பப்படுகிறது என்றால், காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரை விசாரணை செய்வதாகக் கூறி மடத்துக்குள் சென்று கைது செய்த காவல் துறையினர் ஏன் மசூதிக்குள் செல்ல மறுக்கிறார்கள் என்பதை விளக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருக்கிறது.
நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.சுந்தர் கொடுத்த தீர்ப்பில் முக்கியமான அம்சம்: மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களின் உள்ளே சட்ட விரோதமாக மற்றொரு நீதிமன்றம் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரர் குறிப்பிட்டுள்ளபடி, ஷரியத் கவுன்சிலின் செயல்பாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் போல் அமைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே வழிபாட்டுத் தலங்களில் இறைவழிபாடுதான் நடத்த வேண்டும். போலீஸ் அதிகாரியின் பதில் மனு ஏற்கும் படியாக இல்லை. எனவே போலீஸ் துறையினர் இதுபோன்ற சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஹிந்து இயக்கங்களின் தலைவர்கள், தொண்டர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மசூதிகள், மதரஸாக்கள் உள்ளன. காவல் துறையினர் மசூதி உள்ளே செல்லும்போது இது போன்ற குற்றவாளிகளை காண முற்படுவார்கள். தேடப்படும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால், மசூதி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முன் வருவார்களா? மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில், சட்டத்திலுள்ள தலாக் என்ற பிரிவு, ஆண் – பெண் ஆகிய இரு பாலினத்தவருக்கும் சம உரிமை அளிப்பதாக இல்லை. பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது என்று தனது அபிடவிட்டில் தெரிவித்துள்ளது. இதற்கு முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியமும் முஸ்லிம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. சட்ட மற்றொரு நீதிமன்றம் வழிபாட்டுத் தலங்களில் செயல்பட அனுமதிக்க முடியாது என தெளிவாக குறிப்பிட்ட பின்னரும் முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் என்ன பதில் சொல்லப் போகிறது. மீண்டும், மீண்டும் மத விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்பார்களா? காங்கிரஸ் கட்சியை போல் பாரதிய ஜனதா கட்சி தங்களின் கோரிக்கையை ஏற்று திருத்தம் கொண்டு வருவார்களா என்பது கேள்வி. ஆனால் காங்கிரஸ் கட்சி செய்த தவறை மீன்டும் பாரதிய ஜனதா கட்சி செய்யாது. ஏன் என்றால் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயலும் ஒரு அரசு, சிறுபான்மையினர் என்ற தகுதியின் அடிப்படையில் முஸ்லிம் பெண்களின் பாதுகாப்பிற்கு பங்கம் செயல்படாது என பூரணமாக நம்பலாம். மத்திய அரசின் நிலைப்பாடு நன்கு தெளிவாக தெரிகிறது. ஆனால் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது புரியாத புதிராக உள்ளது. காரணம், பல்லாண்டுக் காலமாக முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்கு இரண்டு கழகங்களும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன. ரம்ஜான் நோன்புக்கு இலவமாக டன் கணக்கில் பச்சரிசி வழங்குவார்கள். ஹிந்துப் பெண்களின் சொத்துரிமைக்கு சட்ட திருத்தம் கொண்டு வருவார் முஸ்லிம் மந்திரி. இந்தத் தீர்ப்பிற்கு இரண்டு கழகங்களும் என்ன கருத்தை முன் வைப்பார்கள் என்பதைக் காணவேண்டும்.