வீரமங்கை அன்னி பெசன்ட்

பாரதத்தில்பிறந்த நமது முன்னோர்கள் பலரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி அரும்பாடுபட்டு நமக்கு சுதந்திரத்தை பெற்று தந்தார்கள். இங்கு பிறந்த பல்வேறு வீர மங்கைகளும் சுதந்திரத்திற்காக போராடியுள்ளனர். இவர்கள் அனைவரும் நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், சுதந்திரத்திற்காக அவர்கள் போராடியது ஆச்சரியமான ஒன்று அல்ல. ஆனால், அயல்நாட்டில் இருந்து வந்த ஒருவர் பாரத மண்ணில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியது கவனிக்கத்தக்க ஒன்று. அப்பேற்பட்ட வித்தியாசமான, வீரமங்கைதான் அன்னி பெசன்ட் அம்மையார்.

அன்னிபெசன்ட் தனது 19வது வயதில் பிராங்க்பெண்ட் என்ற மத குருவை மணந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். திருமணத்துக்குப்பிறகு விவசாய கூலிகளின் தொழிற்சங்கம் அமைக்க அன்னிபெசன்ட் உழைத்தார். அன்னியின் அரசியல் போக்கு கணவரிடம் இருந்து அவரை பிரித்தது. பின்னர் லண்டனுக்குத் திரும்பினார். நிறைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.

பிரம்மஞான சபையில் தன்னை இணைத்துக் கொண்டார். 1893ல் அமெரிக்காவில் இருந்த பிரம்மஞான சபை பிளவுபட்டது. எனவே பாரதத்தில் இருந்த பிரம்ம ஞானசபை உறுப்பினர்களை ஒருங்கிணைக்க அன்னிபெசன்டும், ஹென்றி ஆல்காட்டும் பாரதம் வந்தனர். சென்னை அடையாறில் பிரம்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவி அங்கேயே தங்கிய அன்னிபெசன்ட், பாரதத்தின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் குரல் கொடுத்தார். 1907ல் அனைத்துலக பிரம்மஞான சபைக்கு தலைவரானார். ஹோம் ரூல்(சுயாட்சி) இயக்கத்தைத் தொடங்கினார். நாடு முழுவதும் அதன் கிளைகள் உருவாயின. 1917 டிசம்பரில் கொல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய காங்கிரஸின் தலைவராக ஓராண்டிற்குத் தேர்வானார்.

அன்னி பெசன்ட்டின் சுற்றுப்பயணங்களுக்கும் பொதுக்கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடைவிதித்தது. அன்னி பெசன்ட் இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டவராதலால், ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக ‘காமன் வீல்’ என்ற வாரப் பத்திரிகையை 1913ல் ஆரம்பித்தார். மேலும், 1914ல் சென்னையில் இருந்து ‘நியூ இந்தியா’ என்ற பெயரில் நாளேடு ஒன்றை துவங்கி நடத்தினார்.

பாரத விடுதலைக்காக பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்ற அன்னிபெசன்ட் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து பிரம்ம ஞானசபையின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். 1933ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி சென்னையில் உள்ள அடையாறில் காலமானார்.