செய்யாறு, ‘சிப்காட்’ தொழில் பூங்கா விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, 24 மாவட்டங் களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா கிராமத்தில், ‘சிப்காட்’ தொழில் பூங்கா விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 126 நாட்கள் தொடர்ந்து போராடிய, 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில், ஏழு விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
அதேநேரத்தில், விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, 24 மாவட்டங்களில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற, போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள் பி.ஆர்.பாண்டியன், ஈசன் முருகசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., தமீமுன் அன்சாரி, திரைப்பட இயக்குனர் கவுதமன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து, ஆயிரம் விளக்கு சமூகநல கூடத்தில் அடைத்து வைத்தனர்.
போலீசார் வழங்கிய மதிய உணவை தவிர்த்து, அனைவரும் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர்; பின், இரவு விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, திருவண்ணாமலையில் கைதான, 20 விவசாயிகள் ஜாமின் கேட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அதை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன், 20 பேருக்கும் ஜாமின் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.